ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

By ஆர்.கார்த்திகா

அடைமழையும் பெரு வெள்ளமும் பெரும் துன்பத்தைக் கொண்டு வந்திருந்தாலும், நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கையில் அவை சில நல்ல மாற்றங்களையும் ஞாபகப்படுத்திச் சென்றிருக்கின்றன. பரணில் தூக்கிப்போட்ட விஷயங்கள் எல்லாம் இந்த வெள்ள நாட்களில் தூசிதட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் அடைமழை, பெருவெள்ளத்தால் மூன்று - நான்கு நாட்களுக்கு சீரான மின்சாரம் இல்லாததாலும், கைபேசிகள் முடங்கிப் போனதாலும் வெள்ளத்தில் சிக்காதவர்களின் இயல்பு வாழ்க்கைகூட தலைகீழாகிப் போனது. வெள்ளம் பற்றிய செய்திகளைப் பார்க்கவோ, பொழுதுபோக்கவோ டிவி இல்லை, வீட்டில் சமைப்பதற்கும் மற்ற வேலைகளை செய்வதற்கும் எந்த மின் சாதனத்தையும் இயக்க முடியவில்லை. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கடி ஏற்பட்ட இந்த மூன்று நாட்களில், மக்கள் சற்றே பின்னோக்கிச் சென்று அந்த கால வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.

தாத்தா, பாட்டி கதை சொல்லு

வீடியோ - ஆடியோ சி.டி. கதைகளும் ரைம்ஸ்களும் கேட்டு ஆடிப்பாடிய குழந்தைகள் தாத்தா பாட்டிகளுடன் மீண்டும் நேரம் செலவிட்டுக் கதைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். “இந்த லீவுல தாத்தாகூட பக்கத்துல வாக்கிங் போனேன், பாட்டி எனக்கு நிறைய கதை சொன்னாங்க. தினமும் நாங்க கதை கேட்டு விளையாடினோம்” என்கிறான் நான்கு வயதே ஆன குட்டிப் பையன் சூர்யா.

வீடியோ கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன் என விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளுக்கு நேரம் ஒதுக்கியதையும் பார்க்க முடிந்தது. “நாங்க இன்டோர் கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சோம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. செஸ், கேரம் போர்டு, லூடோ எல்லாம் திரும்பவும் விளையாடினோம். ரொம்ப நாள் லீவு விட்டாச்சா, எப்படா ஸ்கூல் திறப்பாங்கன்னு இருக்கு. சீக்கிரம் தொறக்கணும் ஆனா, பரீட்சை மட்டும் வைக்க வேண்டாம்” என்று தன் எதிர்பார்ப்பைச் சொல்கிறார் எட்டாம் வகுப்பு மாணவி ராதிகா.

கைகொடுத்த நண்பன்

இந்த நாட்களில் மழை பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும், பொழுதுபோக்கவும் பெரும் துணையாக இருந்தது வானொலி பெட்டிகளே. உதவி கேட்போருக்கும், உதவி செய்ய நினைப்போரும், தன்னார்வலர்களும் வானொலி நிகழ்ச்சி சேவைகள் மூலம் சிறிதளவு இணைக்கப்பட்டனர்.

வீட்டில் மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்திகளும், அகல் விளக்குகளுமே துணைக்கு நின்றன. “கரண்ட் இல்லாததால் லைட் இல்லாம இரவு நேரத்துல சிரமப்பட்டோம். இன்வெர்ட்டர், டார்ச் எல்லாம் ஒரு நாளைக்குதான் தாக்குப் புடிச்சிது. அதனால மெழுகுவர்த்தியும், அகல் விளக்குகளையும் வச்சு நாட்களை ஓட்டினோம். மிக்ஸி கிரைண்டர் இயக்க முடியாததால, சட்னியெல்லாம் அம்மிக் கல்லுல அரைச்சோம். மண் மனம் மாறாத சுவையும், அந்த கால நினைப்பும் மனசுல ஒட்டிக்கிச்சு” என்கிறார் இல்லத்தரசி மோகனா.

சாஃப்ட்வேர் டூ ஹார்டுவேர்

மென்பொருள் பணியாளர்கள் பலர் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். வழக்கமான ஆன்லைன் ஷாப்பிங் கைகொடுக்காததால், யதார்த்த வாழ்க்கையை சில நாட்கள் வாழ்ந்து பார்த்தனர். “நெட்வொர்க் இல்லாததால கார்ட்ஸ் ஸ்வைப் பண்ணி எதுவும் வாங்க முடியால. கையில இருந்த பணத்த வச்சு வீட்டுக்குப் பக்கத்துல இருந்த மளிகைக் கடைல பொருட்கள் வாங்கி சமைச்சோம். மின்சாரம் இல்லாததால மோட்டரும் வொர்க் ஆகல, எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு இருந்த சாப்ட்வேர் ஆளுங்க எல்லாம் அன்னைக்குக் கிணத்துல இருந்து தண்ணி எடுக்க பக்கெட்டும் கையுமா திரிஞ்சத யதார்த்தத்துல பார்த்தேன். அப்பா, அம்மா எல்லாம் அந்தக் காலத்துல எப்படி வாழ்ந்தாங்கங்கிறது, இந்த நாட்கள் உதாரணம்” என்கிறார் ஐ.டி. பணியாளர் சக்கரவர்த்தி.

சில பத்தாண்டுகளுக்கு முன் நம் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாக இருந்தவை எல்லாம் மீண்டு வந்தது, இயற்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் சற்றே ஆசுவாசம் தந்ததை இந்த வெள்ள நேரத்தில் பார்க்க முடிந்தது. நல்லவேளையாக, இதெல்லாம் முற்றிலும் தொலைந்துபோவதற்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திச் சென்றிருக்கிறது இந்த மழை.

சிறுவன் சூர்யா - சக்கரவர்த்தி - மோகனா













VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்