நம்ம சோலியைப் பார்ப்போம்!

By செய்திப்பிரிவு

சில சொற்களைச் சொல்லிவிட்டாலே போதும். அது தொடர்பான பல சம்பவங்களும் மனிதர்களும் நமது நினைவில் வந்துவிடுவார்கள். ஹைகோர்ட்டுன்னு சொன்னா டக்குன்னு ஒரு ஞாபகம் வரும். துண்டுச் சீட்டுன்னா வேற ஒரு ஞாபகம் வரும்.

சமீபத்தில் அப்படியான சொல் ஒன்று, பலருடைய சோலியைக் கெடுத்தது. அது, ‘சோலிய முடி’. சோழின்னா எல்லோருக்கும் தெரியும். சோலின்னா தெக்கத்திக்காரங்களுக்குத்தான் தெரியும். சோலின்னா வேலை என்பது பொருள். வேலைன்னா ஒரு வேலை இல்லைங்க பலவேலை. இதன் கிரந்த வடிவம் ஜோலி. ஜோலின்னு சொன்னா உடனே நமக்கு ஏஞ்சலினா ஜோலிதான் நினைவுக்கு வருவாங்க. ஆனால், சோலி கதையே வேற.

விளக்கை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். அவளை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். இரண்டிலும் அணைத்தல் என்னும் வினை வருகிறது. ஆனால், அணைத்தல் முதல் வாக்கியத்தில் ஒரு செயலின் முடிவைக் குறிக்கிறது. இரண்டாம் வாக்கியத்தில் ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு மொழியின் சிறப்பு. அதைப் போல் சோலிய முடிச்சிட்டாங்கன்னா, அது சொல்லும் விதத்தைப் பொறுத்து, சொல்லும் சூழலைப் பொறுத்து பொருளில் மாறுபடும்.

“என்ன மாப்ள ஏதோ சோலியாப் போறாப்ல இருக்கு”ன்னு நெருங்கிய நண்பர்களுக்குள்ளான உரையாடலில் இடம்பெறும் சோலி கிண்டல் மிகுந்தது. சோலி என்றால் வேலைதான். ஆனால், இது கொஞ்சம் கிளுகிளுப்பான, விவகாரமான வேலை. ‘உனக்கென்ன அங்க சோலி’ என்பது கண்டிப்பு கலந்து ஓர் எச்சரிக்கை. ‘இனி அங்க போவாத தேவையில்லாத பிரச்சினை வரும்’ என்பதன் எச்சரிக்கை.

‘அவனுக்கு இதே பொழப்பாப் போச்சு. சோலிக்கழுதையைப் பாத்துக்கிட்டுக் கிடக்க மாட்டானா?’ என்ற சொற்றொடரிலும் ஒரு சோலி இடம்பெறுகிறது. இந்தச் சொற்றொடரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர், தொடர்ந்து ஏதோ தொந்தரவைத் தந்துகொண்டே இருக்கிறார். அவர் அமைதியாக இருக்க மாட்டாரா என்பதையே இந்த சோலி சுட்டுகிறது.

‘சீக்கிரம் சோலிய முடிச்சிட்டு வாடே’ என்று அறுவடைக் களத்தில் சொன்னால் ஒரு பொருள்; ஆவேசக் குணத்தில் சொன்னால் ஒரு பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் கையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு ஆவேசமாகக் கெட்ட வார்த்தையைச் சொல்லியபடியே ‘ஒஞ்சோலிய முடிக்காம விடமாட்டம்ல’ என்று சொன்னால். அங்கே சோலியை முடித்தல் என்பது எமனின் வரவுக் கணக்கில் ஒன்றைக் கூட்டிவிடும்.

இப்படிப் பல சோலிக்காரங்க நாம. ‘சோலியை முடித்தல்’ என்பதை ஒரு பொருளில் தட்டையாகப் புரிந்துகொள்வது சரியல்ல. ஆனால், அதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் மொழியறிவு வேண்டும். சிலருக்கு மொழியறிவு இருக்கும். ஆனால், வேண்டுமென்றே நடிப்பார்கள். அவர்களை நாம் எதுவும் செய்ய இயலாது அவங்க வேற எதோ சோலிக்காக இப்படிச் சொல்வாங்க. நாம நமது சோலியப் பாத்துட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

- ரிஷி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்