ஐ.டி.உலகம்- 4: இங்கும் தீண்டாமை உண்டு

By மா.மணிகண்டன், வி.சாரதா

நவீனத் தீண்டாமை என்பது பொருள் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், ஐ.டி. துறையில் நிலவுகிற சாதியப் பாகுபாடுகள், தீண்டாமையின் நவீன வடிவத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

மேற்கத்தியக் கலாச்சாரத்தை ஐ.டி. உலகம் எந்த அளவுக்கு விரும்புகிறதோ, அதே அளவுக்கு நம்முடைய கட்டமைப்புகளையும் பற்றிக்கொண்டுள்ளது. சாதி பார்த்துப் பழகுவது என்னும் சூழல் ஐ.டி. துறையிலும் மலிந்துள்ளது. தலித், இடைநிலை சாதியினர், ஆதிக்க சாதியினர் என மூன்று பிரிவுகளின் கீழான சாதியப் பாகுபாடுகள் தர்மபுரியிலும் திருச்செங்கோட்டிலும் மட்டுமல்ல, பெங்களூருவிலும் சென்னையிலும் இயங்குகிற பல பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களிலும் உள்ளது.

உலகை முன்னோக்கி எடுத்துச்செல்வதாக நம்பப்படுகிற ஐ.டி. துறையில்கூட சாதிரீதியான பாகுபாடுகள் வேர்விட்டிருப்பது மிகப் பெரிய வேதனை. இந்த நிலை நீடித்தால் கிராமங்களில் எப்படி இரட்டைக் குவளை முறை இருக்கிறதோ அதேபோல், ஒரு காலத்தில் இரட்டை மவுஸ் முறை வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார் ஐ.டி. துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சீதாராமன்.

“எல்லாத் துறைகளிலுமே சாதிரீதியான பாகுபாடு உள்ளது. ஐ.டி.யில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சாதிப் பாகுபாடுகளை நுழைப்பார்கள்” என்கிறார் அவர். மேலாளராக இருப்பவர், டீம் லீடர் போன்ற சிலருக்கு அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியரின் சாதியைக் கண்டறிவதில் அப்படியொரு ஈடுபாட்டுடன் நடந்துகொள்வாராம்.

ஐ.டி. துறையில் பார்ட்டி, அவுட் ட்ரிப் போன்றவை சகஜம். அங்குதான் சீனியர், ஜுனியர் வித்தியாசம் கலைந்து எல்லோரும் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அதுதான் அவரவர் பின்புலத்தை வெளிப்படுத்துகிற தருணமாக அமையும். இது தவிர அலுவலகத்தில் ‘எத்னிக் டே’ என்ற பாரம்பரிய விழாவை எப்போதாவது நடத்துவார்கள் என்றும் அந்த நிகழ்ச்சியிலும் அடையாளங்கள் வெளிப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கிறார் அவர்.

ஏனென்றால் ‘எத்னிக் டே’வில் அவரவர், தங்களது சாதி மற்றும் இன, பாரம்பரியத்துக்கு ஏற்ப உடை அணிந்து வருவார்கள். உடலில் தங்களது அடையாளத்தைச் சுமந்து வரும்போது, ‘இவனெல்லாம் நம்ம ஆள்’ என்று அதிகாரிகள் உற்சாகம் ஆகிவிடுவார்கள்.

பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிப்பது தவறல்ல. அவற்றை உள்நோக்கத்தோடு காட்டிக்கொள்ளும்போதுதான் சிக்கல் எழுகிறது. உரிய தகுதி இருப்பவர்களை முந்திக்கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு நல்ல புராஜெக்டில் மேலாளர்கள் இடம் தருவதும் இங்கே நிகழ்கிறது என்கிறார் அவர். இப்படியான ஒரு சம்பவத்தில் தானே பாதிக்கப்பட்டதை சீதாராமன் பகிர்ந்துகொண்டார். இப்படி புரொமோஷன், இன்கிரிமெண்ட் எனப் பல விஷயங்களிலும் சாதி பார்த்து சகாயம் செய்வதைக் கண்கூடாகப் பார்க்க முடியுமாம்.

“தலித்துகள், கிறிஸ்தவர்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இஸ்லாமியர்களை வேலைக்கு எடுப்பதே கஷ்டம். அப்படியே எடுத்தாலும், அதிகாரிகள் அவர்களிடம் அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போலவே நடந்துகொள்வார்கள்” என்று கூறினார் சீதாராமன்.

சாதியப் பாகுபாடுகள் போலவே மாநில அடிப்படையிலான இனப் பாகுபாடும் அதிக அளவில் உள்ளதாம். எல்லாவற்றிலும் கொடுமை இனப் பாகுபாடுதான். டீம் லீடரோ, புராஜெக்ட் மேனேஜரோ தங்கள் மாநிலத்துக்காரர் என்று தெரிந்தால்போதும், அந்த மாநில ஊழியர்கள் சிலர் நிறுவனத்தின் சி.இ.ஓ. அளவுக்கு சீன் போட ஆரம்பித்துவிடுவார்களாம். “மகாராஷ்டிரத்திலுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குள் எண்ணற்ற பால் தாக்கரேக்களும், ராஜ் தாக்கரேக்களும் உள்ளனர். கஷ்டப்பட்டு ஐ.டி. வேலையில் சேர்ந்த எத்தனையோ பிஹாரிகளும், உ.பி. இளைஞர்களும் அவர்களால் பாதிக்கப்பட்டது நிதீஷுக்கும் லாலுவுக்கும் முலாயமுக்கும் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை” என்கிறார் ஐ.டி. ஊழியர் ஜெகதீஷ்.

தெலுங்கர்களின் ஆதிக்கமும் ஐ.டி.யில் அதிகமிருக்கும் என்றும் அதனால் கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் மற்றவர்கள் சீக்கிரம் பதவி உயர்வுகளைப் பெற முடியாது என்றும் சொல்கிறார் ஜெகதீஷ்.

இந்தப் பாகுபாடுகளுக்கெல்லாம் உச்சமாகப் பாலினப் பாகுபாடுகளும் ஐ.டி.யில் தலைவிரித்தாடுகிறது. முக்கியமாக, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

10 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்