அற்புதம் நிகழ்த்துமா ஆசிய மெஸஞ்சர் வேவீ

By ரோஹின்

வேகாத வெயிலில் வெந்து தணியும் இளைஞர்களுக்கு கூலான செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது சிங்கப்பூர் நிறுவனமான சிங்டெல். அது வேவீ என்னும் அடுத்த தலைமுறைக்கான புது மெஸஞ்சர் ஒன்றை ஏப்ரல் ஏழாம் தேதி அன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இப்போது அநேக மெஸஞ்சர்கள் இளைஞர்களை இணைக்கப் பல வசதிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் சிங்கப்பூர் அப்ளிகேஷன் புது அவதாரம் எடுத்துள்ளது.

ஏற்கனவே கையிலே ஒரு ஸ்மார்ட் ஃபோனை வைத்துக்கொண்டு வாட்ஸ் அப் வழியே இளைஞர்கள் பண்ணும் ரவுசு தாங்க முடியவில்லை என்று மூத்தவர்கள் சிலர் முணுமுணுக்கிறார்கள். இளைஞர்கள்னு மட்டும் சொல்ல முடியாது மூத்தவர்கள் சிலர்கூட அட்டகாசம் பண்ணுறாங்க. அடிக் குரலில் கிசுகிசுத்த உதவி ஆணையர் கதையை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்.

சாதாரணக் காலை வணக்கம் முதல் சூடான மிட் நைட் மசாலாவரை அனைத்துத் தகவல்களும் சுடச் சுட வந்துவிழுகின்றன வாட்ஸ் அப்பில். ஆளுக்கொரு குழு எனும் தனி ராஜ்ஜியம் அமைத்துத் தகவல்களைப் பரப்புகிறார்கள். உங்களுக்கு எது தேவையோ அதைப் பொறுத்து நீங்கள் ஒரு குழுவில் இணைந்துகொள்ளலாம். வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். தனியே போகும் ஆணும் பெண்ணும் தானாச் சிரிக்கிறாங்க, கெக்கே பிக்கேன்னு நடந்துக்கறாங்க… காரணம் வாட்ஸ் அப்பில் வந்து சேரும் செய்திகள். அவை அவர்களின் புறச் சூழலை மறக்கடித்து ஓர் ஏகாந்தத்துக்குள் கொண்டு தள்ளிவிடுகின்றன.

வாட்ஸ் அப் போலவே ரஷ்ய சகோதரர்கள் உருவாக்கிய டெலிகிராம் எனவும் ஒரு அப்ளிகேஷன் புழக்கத்தில் உள்ளது. ஆனால் நம்மிடையே வாட்ஸ் அப் பெற்ற மகத்துவத்துக்குப் பக்கத்திலேயே வர முடியவில்லை டெலிகிராமால். இவ்வளவுக்கும் வாட்ஸ் அப் ஓராண்டு மட்டுமே இலவசம் ஆனால் டெலிகிராம் முழுக்க முழுக்க இலவசம். இந்தியாவில் இப்போதைக்கு வாட்ஸ் அப் முழு இலவசமாகத் தான் உள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்குக் கட்டணம் விதிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இப்போதைக்கு வாட்ஸ் அப் மாயத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள் நம் கோடிக்கணக்கான இளைஞர்கள்.

இந்நிலையில் இவையிரண்டையும் இதைப் போல ஏனைய மெஸஞ்சர்களையும் ஒருகை பார்க்கும் உத்தேசத்தில் சிங்கப்பூரின் சிங்டெல் டெலிகாம் நிறுவனம் வேவீயைக் கொண்டுவந்துள்ளது. இதுவும் இலவச அப்ளிகேஷன்தான். ஆப்பிள் ஸ்டோரிலும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இப்போதைக்கு இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது வாட்ஸ் அப்பைப் போலவே தகவல்களையும் ஒளிப் படங்களையும் வீடியோக்களையும் ஆடியோக்களையும் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.

வாய்ஸ் கால் வசதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுஞ்செய்தியை அனுப்ப இயலும். உயர்தர வீடியோ கால் வசதியும் உள்ளது. படங்களையும், ஆசிய கலாச்சாரத்துக்கேற்ற முறையில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களையும் பரிமாறிக்கொள்ளலாம். உங்களுக்கு வரையும் திறமை இருந்து, நண்பர்களைக் கலாய்க்க விரும்பினால் வேடிக்கையான படம் வரைந்து நண்பர்களைக் கலாய்க்கலாம். கலாய்க்க கசக்குமா நமக்கு? கலாய்க்கனும்னா கலர்ஃபுல்லா வருவோமே?

மேலும் ஸ்மார்ட் போனில் உள்ள அத்தனை மெஸேஜ்களையும் ஒருங்கிணைத்து இந்த வேவீ மெஸஞ்சர் இன்பாக்ஸில் வைத்துப் பராமரிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் தொலைபேசிகளை அழைக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவும் வகையில் தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக சிங்டெல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தென்கிழக்காசிய நாட்டு நிறுவனம் ஒன்று இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. அமெரிக்க, ரஷ்ய அப்ளிகேஷன்களை இந்த ஆசிய அப்ளிகேஷன் ஓரங்கட்டுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

விளையாட்டு

18 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்