லேய் மக்கா கே.கே. பாட்டுலே...

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சிகளில் “நீ வாழ்ற இந்தூரு, பெயர் சொல்லும் நம்ம ஊரு, இந்தியா இங்கே இருந்து தொடங்கும் பாரு” என இளைஞர் பட்டாளம் ஆடிப் பாட ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியா குமரி மாவட்டத்தின் பெருமைகளான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சிதறால் மலைக்கோயில், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம்,திருவிழாக் கடை சூடுமிட்டாய், பழ பஜ்ஜி, சுங்கான்கடை பானை என 50-க்கும் மேற்பட்ட இடங்களை, குமரி மாவட்டத்தின் பாரம்பரிய அம்சங்களை வெறும் 5 நிமிட வீடியோ ஆல்பத்தில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

சமூக வலைத்தளங்களில் சென்ற வாரம் வெளியிடப்பட்ட கே.கே. ஆந்தம் (KK Anthem) எனும் இந்த ஆல்பம் இப்போது குமரி மாவட்ட இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. குமரி மாவட்ட இளைஞர்கள் பேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளி இடங்களில் வசிக்கும் குமரி மக்களுக்கு உறவினர்கள் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் ‘சிரிப்பொலி செல்லப்பா’வின் மகன்

உள்ளூர் வட்டார மொழியோடு ராப் ஸ்டைலைக் கலந்து, ஹிப் ஹாப் பாணியில் நடனமாடி, குமரி மக்களின் யதார்த்த வாழ்வை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் இந்த ஆல்பத்தை யார் உருவாக்கியது எனத் தேடத் தொடங்கினோம். இந்தப் பாடலை எழுதியது, கேமரா கண்களினால் குமரியின் இயற்கை எழிலை அழகுறப் பதிவு செய்தது, இயக்கியது, தயாரித்தது அத்தனையும் இளைஞர்கள்தான்.

கே.கே.கீதத்தின் இயக்குநர் கொற்றிக்கோடையைச் சேர்ந்த ஜெபஸ்டின் சரண்சிங். இயந்திரப் பொறியியல் பட்டதாரி. அவரிடம் பேசியபோது, “எங்க அப்பா உள்ளூர் மேடை நாடகக் கலைஞர். ‘சிரிப்பொலி செல்லப்பா’ன்னு பேரு. நல்ல நகைச்சுவையா நடிப்பாரு. என் குடும்பத்துலயே நிறையப் பேர் மேடை நாடகக் கலைஞர்களாக இருக்காங்க.

அதனால் சின்ன வயசுல இருந்தே எனக்கும் நடிக்கணும்னு ஆசை. பள்ளி, கல்லூரி காலங்களில் நாடகப் போட்டிகளில் நடிச்சு பரிசு வாங்கியிருக்கேன். சினிமா துறைக்கு போகணும்னு ஆசை. ஏற்கனவே ஒரு குறும்படம், ஆல்பத்தில் நடிச்சிருக்கேன். இப்படியாக ஒரு நாள் குமரி மாவட்டத்தின் இயற்கை எழிலையும், மக்களின் வாழ்வையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு பாட்டு எடுக்கணும்னு முடிவு செய்தேன். உடனே நண்பர்களிடம் சொன்னேன்” என்கிறார்.

நண்பேன்டா!

கே.கே. ஆந்தம் பாடலில் குமரி மண்ணின் மணம் கமழும் பாடல் வரிகளை எழுதியவர் மணவா ஜோதி. ராப் வரிகளை எழுதியவர் ஸ்மித். இவர்கள் இருவரும் ஜெபஸ்டினின் உற்ற நண்பர்கள். “நானும், என்னோட நண்பர்களான மணவா ஜோதி, ஸ்மித், ஷெல்லி, ஜெரால்டு, இசை அமைத்த ஜூட் நிரஞ்சன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து தான் இந்தப் பாடலை எடுத்தோம். முழுக்க ஆறு மாசம் இதுக்குன்னு மெனக்கெட்டோம்.

அது யு டியூப், வாட்ஸ் அப், முகநூலிலும் எக்கச்சக்கமாகப் பகிரப்படுகிறது. பார்க்கும்போது உழைப்புக்குப் பிரதிபலன் கிடைச்ச திருப்தி இருக்கு” எனத் தன் நண்பர்களை அணைத்துக்கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார் ஜெபஸ்டின். இதுவரை யு டியூப்பில் மட்டும் கே.கே. ஆந்தமைக் கிட்டத்தட்ட 13,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

தரமான காட்சி வடிவத்தில் இப்பாடலை வழங்கிய பெருமை விஷ்ணுவைத்தான் சேரும் என்கிறார் ஜெபஸ்டின். கெனான் 60 டி கேமராவைக் கொண்டு இந்த வீடியோவைப் படம் பிடித்திருக்கும் விஷ்ணு குமாரகோவிலில் உள்ள என்.ஜ. கலை, அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு விஸ்காம் படிக்கும் மாணவர்.

“இப்பெல்லாம் எங்க பசங்க எங்க போனாலும், ‘லேய் மக்கா…நம்ம கே.கே ஆந்தம் பாட்டில் வரும் பசங்கடா’ ன்னு எங்களைப் பார்த்துக் கைகொடுக்குறாங்க. பொண்ணுங்க கிட்ட நம்பர் கேட்டு பின்னால திரிஞ்ச காலம் போய்,கேர்ள்ஸ் ஆட்டோகிராப் கேட்குறாங்க” எனக் குதூகலத்தில் ஜெபஸ்டின் சொல்ல, கோரஸாக ‘ஓ’ போட்டு ஆமோதிக்கிறது இளம் பட்டாளம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்