சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்!

By கே.கே.மகேஷ்

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான எம்.டி. தீபன் பாடிபில்டிங்கில் பல உச்சங்களைத் தொட்டவர். மிஸ்டர் மதுரை, மிஸ்டர் ஈரோடு, மிஸ்டர் கோவை, மிஸ்டர் தமிழ்நாடு என்று சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர்.

இளவயது அர்னால்ட் மாதிரி புஜம் புடைக்க, டி-ஷர்ட் வெடிக்க நின்று கொண்டிருக்கும் இவர் மிகச் சாதாரண குடும்பத்தில், உணவுக்கே கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. “எப்படி ஊர் ஊராக மிஸ்டர் பட்டம் வாங்குனீங்க?” என்று கேட்டபோது பில்ட் அப் இல்லாமல் எளிமையாகப் பேச ஆரம்பித்தார் பாடி பில்டர் தீபன்.

“மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். சேர்ந்த போது, குச்சி மாதிரி இருப்பேன். நண்பர்கள் எல்லாம் சாக்பீஸ் என்று கிண்டலடிப்பார்கள். உடம்பைத் தேத்தணும்டா என்ற வெறியில் ஜிம்முக்குப் போனேன். நம்ம பட்ஜெட்டுக்குப் பெரிய ஜிம்மெல்லாம் சரி வராது என்பதால், வைகை ஆற்றோரத்தில் இருந்த ஒரு திறந்தவெளி ஜிம்மில்தான் ஒர்க் அவுட் செய்தேன். நல்ல மாற்றம் தெரிந்தது. கேலி செய்த நண்பர்களே ஊக்கப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த நம்பிக்கையில் இறுதியாண்டில் (2008) மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கேற்றேன். வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு பாடி பில்டிங்தான் லட்சியம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். ஈரோட்டில் வேலை என்றாலும், ஜிம்மைக் கைவிடவில்லை. 2010-ல் மிஸ்டர் ஈரோடு பட்டம் வென்றேன். அடுத்தாண்டு கோவைக்கு மாற்றினார்கள். அங்கும் பட்டம் வென்றேன். 2011 இறுதியில் மதுரைக்கு இடமாற்றம். மதுரையில் மிஸ்டர் மதுரை வெள்ளிப் பதக்கம் வென்றேன். 2011 ஜனவரியில் சென்னையில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் 75 கிலோவுக்கு மேல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்.

2012-ல் மிஸ்டர் மதுரை போட்டியில் 8 பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு இடையேயான போட்டியில் வென்று, சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பட்டம் வென்றேன். எனக்கு ரோல்மாடலாக இருந்தது மதுரை பாடிபில்டர் சிவக்குமார் தான். மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு பட்டங்களை வென்று விளையாட்டு கோட்டாவில் ரெயில்வே துறையில் வேலை வாங்கிய தென்மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நபர் அவர்தான்” என்கிறார் தீபன்.

“இவர்கள் எல்லாம் என் நண்பர்கள்” என்று தீபன் அறிமுகப்படுத்தியவர்கள் எல்லாம் அவருக்கு இணையான உடல் பலத்தோடு நின்றார்கள். அவர்களோடு கைகுலுக்கவே பயமாக இருக்கிறது.

ஆரப்பாளையம் சி.சரத் (23), சேது என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கிறார். அதற்குள் இரண்டு முறை மிஸ்டர் மதுரை (75 கிலோவுக்கு மேல் பிரிவு) பட்டம் வென்றிருக்கிறார். மதுரை ரிங்ரோடு பகுதியைச் சேர்ந்த ஏ.ஹரிபிரகாஷ்(24) கோவை ஜி.ஆர்.டி. கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கிறார். கோவை பாரதியார் பல்கலைக்கழகப் போட்டி, மிஸ்டர் சென்னை போட்டி ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் முனிச்சாலை எஸ்.ராகுல்பாபு (21) மிஸ்டர் மதுரை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். இவர் தன் ரோல்மாடலாக குறிப்படுவது தீபனை!

பர்ஸும் ஃபிட்னஸும்

இவர்கள் இளைஞர்களுக்குச் சொல்லும் அறிவுரை ரொம்ப சிம்பிள். “முதல்ல ஜிம்முக்குப் போங்க பாஸ். எது சரி, எது தப்புன்னு போகப் போக கத்துக்கலாம். பெரிய ஜிம்முக்குத்தான் போகணும்னு இல்லை. மாசம் 100, 200 வாங்குற ஜிம் கிடைச்சாலும் விடாதீங்க. தினம் ஒரு மணி நேரம் செலவிட்டால், ஒரு மாதத்தில் உங்கள் உடலில் மாறுதலைக் காணலாம். அப்புறம் நீங்க விட மாட்டீங்க. சாம்பியன் பட்டம் வாங்க நினைக்கிறவங்க தான், நிறைய செலவழிக்க வேண்டியது இருக்கும். கம்பீரமா, ஆரோக்கியமா இருந்தா போதும்னு நினைக்கிறவங்க வீட்ல தர்ற சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கிட்டு ஜிம்முக்குப் போனாப் போதும். இப்ப எல்லாம் பொண்ணுங்க பர்ஸை பார்க்கிறது இல்ல பாஸ், ஃபிட்னஸைத் தான் பார்க்கிறாங்க” என்று கண்ணடிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்