குளு குளு ரெட் ஹில்ஸ்

By ம.சுசித்ரா

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் வசிப்பவர்கள், “ரெட் ஹில்ஸா? எங்க ஏரியாவைப் பத்தியா எழுதப்போறீங்க?” என அதிரக் கூடும். ஆனால் இது சென்னை நகர்ப் புறத்தின் பிஸியான ரெட் ஹில்ஸ் அல்ல. ஊட்டியிலிருந்து வெறும் 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது ரெட் ஹில்ஸ் எனும் அழகிய மலைப் பிரதேசம்.

ஊட்டி பள்ளத்தாக்குகளைக் கடந்து ரெட் ஹில்ஸுக்குச் செல்லும் பயணமே பரவசமூட்டும். அதுவும் ரெட் ஹில்ஸை அடைந்துவிட்டீர்கள் என்றால் சில்லென்று காற்று வீசும். சுற்றிலும் வான் தொடும் கரும்பச்சை மலைகள் மீது மேகம் தவழ்ந்துகொண்டிருக்கும். மலைக்கு முன்னும் பின்னும் பள்ளத்தாக்குகள். வானம், மேகம், மலை, உயரமான யூகலிப்டஸ் மரங்கள், மலை மேல் தீப்பெட்டிகளை அடுக்கியது போல கலர் கலரான வீடுகள் என அத்தனையும் பிரதிபலிக்கும் ஏரிகள். இப்படி இயற்கை அழகில் திணறிப்போவீர்கள்.

பங்களா தந்த பெயர்

ரெட் ஹில்ஸில் தங்கத் தரமான விடுதிகள் உள்ளன. அவற்றில் பெருமை வாய்ந்தவை 125 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பங்களா. ஆங்கிலேயரின் கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட இந்த பங்களாவில் ஜாலியாகத் தங்கி, அங்கிருந்தே அடர்த்தியான காட்டை வேடிக்கை பார்க்கலாம். இந்த ஊர் ரெட் ஹில்ஸ் என்ற பெயர் பெற்றதற்குக் காரணமே இந்த பிரிட்டிஷ் பங்களாதான். பங்களாவின் உரிமையாளர் பிரிட்டனைச் சேர்ந்த வில்லி காலின்ஸ். பிரிட்டனில் அவருடைய சொந்த ஊரின் பெயர்தான் ரெட் ஹில்ஸ். தன் ஊர்ப் பெயரையே தன் ஆளுகைக்குள் இருக்கும் ஊருக்கும் சூட்டியிருக்கிறார் அந்த வெள்ளைக்காரர்.

ஏரிகளின் ஏரியா

ரெட் ஹில்ஸில் விடியற்காலையில் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினால் நிமிடத்துக்கு நிமிடம் புதுப் புது காட்சிகள் விரிந்துகொண்டே போகும். இருளைச் சூரியன் தன் விரல்கள் நீட்டித் தொடும் காட்சி கண் கொள்ளாத காட்சி. மூடுபனியிடையே சூரியன் மேலெழும்போது வானின் வர்ண ஜாலங்களும், அவை மெல்ல மெல்ல ஏரிகளில் பிரதிபலிக்கும் விதமும் மெய் சிலிர்க்க வைக்கும். அரிய வகை காட்டுப் பூக்கள், செடி, கொடிகள், யானை, மான் என இயற்கை சூழல் அற்புதமாக இருக்கும்.

மலைகளைச் சுற்றி வளைத்து இருக்கின்றன எக்கச்சக்கமான ஏரிகள். பார்சன் பள்ளத்தாக்கு ஏரி, மேற்கு நீர்ப்பிடிப்புப் பகுதியில் 3 ஏரிகள், எமரால்ட் ஏரி, மேல் பவானி ஏரி, அவலாஞ்சி ஏரி மற்றும் போர்த்திமண்டு ஏரி இப்படி மொத்தம் எட்டு ஏரிகள் ரெட் ஹில்ஸின் இருப்பதால் ஏரிகளின் ஏரியா என்றே சொல்லலாம். குறிப்பாக அவலாஞ்சி ஏரியில் படகுப் பயணம் போவதும், அவலாஞ்சி அணையைச் சுற்றிப் பார்ப்பதும் அலாதியான அனுபவம்.

எப்போது, எப்படிப் போகலாம்?

செப்டம்பர் முதல் மே மாதம் வரை ரெட் ஹில்ஸின் பருவநிலை அருமை யாக இருக்கும். கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து ரெட் ஹில்ஸ் 118 கி.மீ. தொலைவில் உள்ளது. மேட்டுப்பாளையம் வரை ரயிலில் பயணிக்கலாம். அங்கிருந்து ரெட் ஹில்ஸை சென்றடைய சொகுசுப் பேருந்துகள் உள்ளன. ஹோம் மேட் சாக்லேட்களுக்கும் ரெட் ஹில்ஸ் ரொம்ப ஃபேமஸ். புறப்படுங்கள்! ரெட் ஹில்ஸுக்கு ஒரு ஜாலி டிரிப் போய்விட்டு, பை நிறைய சாக்லேட்களோடும், மனம் நிறைய சந்தோஷத்தோடும் திரும்பி வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்