குதிரையேற்றம்: சின்ன வயசு, பெரிய கனவு!

By எல்.ரேணுகா தேவி

பொதுவாகப் பத்தாம் வகுப்பு என்றாலே புத்தகமும் கையுமாக மாணவர்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கோவையைச் சேர்ந்த 15 வயது ஹரிணியோ குதிரையும் கையுமாக இருக்கிறார். இந்தியாவுக்காகக் குதிரையேற்றப் போட்டியில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

சமீபத்தில் பெங்களுரூவில் தென்னிந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 16 செ.மீ. தடை தாண்டும் போட்டியில் 2-வது இடத்தையும் ,19 செ.மீ தடை தாண்டும் பொதுவான போட்டியில் 5-வது இடமும் பிடித்துத் திரும்பியிருக்கிறார் ஹரிணி. சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஹரிணி. தற்போது பத்தாம் வகுப்பு படித்துவரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக குதிரையேற்றப் பயிற்சி பெற்றுவருகிறார்.

பயிற்றுநர்கள் சரவணன், பாலாஜி கற்றுத்தரும் நுணுக்கங்களைக் கவனமாகக் கேட்டு, கொஞ்சமும் அச்சமின்றி லாகவமாகக் குதிரையேற்றப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் ஹரிணி. அதேசமயம் படிப்புக்குக் கொஞ்சமும் பங்கம் வராத அளவுக்குப் படிப்பிலும் கெட்டியாக இருக்கிறார் அவர்.

தற்செயலாகப் பயிற்சி

குதிரையேற்றத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டவுடன், “முதலில் குதிரையேற்றத்தில் என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என் பெற்றோர்தான். அவர்களின் ஊக்குவிப்பு, என் மீதான நம்பிக்கைதான் ஜெயிக்க வைத்தது” என்று புன்னகை மாறாமல் சொல்கிறார்.

“நான் அடிப்படையில் தடகள வீராங்கனை. மாநிலத் தடகளப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறேன். அதேநேரம் எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே குதிரையேற்றப் பயிற்சி மையம் உள்ளது. ஒரு நாள் வித்தியாசமாகக் குதிரையேற்றப் பயிற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்துப் போனேன். பொதுவாகச் சிலருக்குக் குதிரை மேல் சரியாக உட்கார முடியாது.

ஆனால், எனக்கு அதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. என்னால் சரியான நிலையில் உட்கார்ந்து குதிரை மேல் சவாரி செய்ய முடிந்தது. அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே குதிரையேற்றத்தை முறையாகக் கற்றுக்கொண்டுவிட்டேன்” என்கிறார் ஹரிணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் குதிரையேற்றம் கற்றுக்கொண்ட ஹரிணி, குறுகிய காலத்துக்குள் குறிப்பிடும்படியான நிலையை எட்டியுள்ளார்.

குதிரையுடன் பழக்கம்

குதிரையேற்றத்தில் குதிரையை எப்படிச் செலுத்துவது என்பது மட்டுமல்லாமல், குதிரை என்ன நினைக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்காகக் குதிரையுடன் பழகியது பற்றி சுவையான விஷயங்களை ஹரிணி பகிர்ந்துகொண்டார்.

“வீட்டில் வளர்க்கும் நாயுடன் எப்படிப் பழகுகிறோம், பேசுகிறோமோ அதுபோலத்தான் குதிரையிடமும் பழக வேண்டும், பேச வேண்டும். அப்போதுதான் குதிரை நம்முடைய சின்ன சைகையைக்கூடப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் செயல்படும். இந்த உத்திதான் போட்டிகளின்போது வெற்றிபெற உதவும். இப்போது நான் நினைப்பதை என்னுடைய குதிரை புரிந்துகொள்ளும், அதேபோல் குதிரை என்ன மன நிலையில் இருக்கிறது என்பது எனக்கும் தெரியும்” என்று குதிரையுடனான தனது பழக்கத்தைப் பற்றி சொல்கிறார்.

தற்போது தென்னிந்தியளவில் வெற்றி பெற்றிருக்கும் ஹரிணி, எதிர்காலத்தில் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்