இதயம் துடிக்கும் இசை !

By வா.ரவிக்குமார்

மிகக் குறைந்த வயதில் இந்தியாவின் டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராக லிம்கா இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்றவர் சித்தார்த் நாகராஜன். அப்போது அவருக்கு இரண்டரை வயது! இவரின் தந்தை நாகராஜன் பிரபல இசையமைப்பாளர்களுக்கு டிரம்ஸ் வாசித்தவர். இவரின் தாத்தா ஜி.நாராயணன், பிரபல தபேலா கலைஞராக இசை உலகத்தில் அறியப்பட்டவர். சித்தார்த்தின் அன்னை வித்யா பாடகி. மூன்றாவது தலைமுறையாக இசைத் துறையில் நுழைந்திருக்கும் டிரம்மர் சித்தார்த் மீண்டும் சமீபத்தில் சத்தத்தோடு ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

ஒரு நிமிடத்தில் 2,109 டிரம் பீட்களை உண்டாக்கி, இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய டிரம்மர் ஒருவரின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

“தந்தை நாகராஜன், பாலபாடத்தைத் தொடங்கிவைத்த உலகப் புகழ்பெற்ற டிரம்மர் சிவமணி, புகழ்பெற்ற டிரம்மர் கோபால், இந்திய தாளக் கணக்குகளை கற்றுத் தந்த கிராமி விருது பெற்ற கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் ஆகியோரை இந்த நேரத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்று பேச ஆரம்பிக்கிறார் சித்தார்த்.

அதிகபட்சம் 5 முதல் 10 நொடிகளுக்கு டிரம்ஸ் ஸ்டிக்கால் அடிப்பதற்கே கையின் நரம்புகள் புடைத்துக் கொள்ளும். ‘விர்’ என டிரம்ஸ் சத்தத்தின் தொடர்ச்சி மட்டுமே கேட்கும். உடம்பில் ஓடும் ஒட்டுமொத்த ரத்தமும் தலைக்குப் பாய்வதைப் போல் ஓர் உணர்வு மேலிடும். 60 நொடிகளுக்கு என்றால்? சித்தார்த்தின் வாசிப்பு அனுபவத்தைக் கேட்டோம்.

கைகளால் செய்த சாதனை

“ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரம்மர் ஜார்ஜ் உரோசேவிக், ஒரு நிமிடத்தில் 1589 பீட்ஸ் அடித்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது. இதை முறியடிக்க வேண்டும் என்று தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டேன்.

கின்னஸுக்கு முன்னோட்டமாக ‘ஏசியன் புக் ஆஃப் ரிகார்ட்ஸு’க்காக 1,906 பீட்ஸ்களை டிரம்மில் அடித்தேன். இதுவே ஆஸ்திரேலிய டிரம்மரின் பீட்ஸ்களைவிட அதிகம் என்றாலும் அதை நான் கின்னஸுக்கு அனுப்பவில்லை. ஒருநிமிடத்தில் 2000 பீட்ஸைத் தாண்ட வேண்டும் என்பதையே என்னுடைய இலக்காக வைத்து அதற்காகத் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன்.

தொடர் பயிற்சியின் மூலம் படிப்படியாக 1 நிமிடத்தில் அடிக்கும் டிரம் பீட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கினேன். இடது கை ஸ்டிக்கின் மூலம் டிரம்மில் ஒரு தட்டு, வலது கை ஸ்டிக்கின் மூலம் டிரம்மில் ஒரு தட்டு, இடது கை ஸ்டிக்கால் டிரம்ஸில் இரண்டு தட்டு, வலது கை ஸ்டிக்கால் டிரம்ஸில் இரண்டு தட்டு, இப்படிப் பல வகைகளைக் கொண்ட பீட்ஸ்களைத்தான் ஒரு நிமிடத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று வாசித்து முடித்தேன். ரிதம் ட்ரிகர் பேடுடன் `டிரம்மோ மீட்டர்’ கனெக்ட் ஆகியிருக்கும். என்னுடைய டிரம்ஸ்டிக் ஒவ்வொரு முறை டிரம்ஸைத் தொடும்போதும் எண்ணிக்கை திரையில் தோன்றும். இதன் வீடியோவை கின்னஸ் நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தேன்.

இதை அங்கீகரித்து ஆதாரபூர்வமாக கின்னஸ் சாதனையைச் செய்ததற்கான சான்றிதழை எனக்கு அனுப்பிவைத்தார்கள்” என்னும் சித்தார்த், தற்போது எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

கால்களாலும் சாதனை

ஒரு இசைக் கச்சேரியில் முதலில் ரசிகரின் கவனத்தை ஈர்ப்பவர் பாடகர். அடுத்து கவனத்தை ஈர்ப்பவர் சந்தேகமில்லாமல் டிரம்மராகத்தான் இருப்பார். ஏனென்றால் அவரைச் சுற்றித்தான் நிறைய வாத்தியங்கள் இருக்கும். டிரம்ஸில் கால்கள், கைகள் எல்லாமே ஒருங்கிணைப்போடு செயல்படும். இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸுக்காக 2012-ல் இரண்டு பேஸ் டிரம்களைத் தன்னுடைய இரண்டு கால்களின் மூலமாக 803 கிக் பீட்ஸ்களை வாசித்து இவர் படைத்த சாதனையை இன்னும் எவரும் முறியடிக்கவில்லை!

சுதந்திர இசையில் விருப்பம்

ஃப்ரீக்வென்சி 0, பொயட் டிராக்ஸ் என இவரின் இரண்டு இசைக் கோவையை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். இதில் கீபோர்ட், கிடார், பேஸ் கிடார், டிரம்ஸ் என எல்லா வாத்தியங்களையும் சித்தார்த்தே வாசித்து அசத்தியிருக்கிறார். சுதந்திர இசையில் விருப்பம் இருந்தாலும், அவ்வப்போது ரெகார்டிங், மேடை நிகழ்ச்சிகளிலும் டிரம்ஸ் வாசித்துவருகிறார்.

“சமீபத்தில் வித்யாசாகர் இசையில் சில தாளவாத்தியங்களை வாசித்தேன். முன்பெல்லாம் கீபோர்டிலேயே சிந்தஸைசர் மூலம் தாளங்களைப் பதிவு செய்து பயன்படுத்தும் முறை இருந்தது. இப்போது மீண்டும் தாள வாத்தியங்களை லைவ்வாக வாசிக்க வைத்துப் பதிவு செய்யும் முறை திரும்பியிருப்பது வரவேற்கக் கூடிய அம்சம்” என்ற சித்தார்த்தின் கைவிரல்கள் கண்ணாடி டீப்பாயின் மேல் `டக்டக் டக்டக்’ என ஒலியை எழுப்பின.

“இதற்கு இசை மொழியில் என்ன பெயர்?” என்றோம். “மம்மீ, டாடி” என்றார். வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாசிப்புக்கும் அவர்கள்தானே முக்கியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

31 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்