இது ஆர்வமா? கோளாறா?

By ந.வினோத் குமார்

‘வாலன்டியரிங்!’

கிராமமோ, நகரமோ... இன்று இந்த வார்த்தைதான் இளைஞர்களுக்கு ‘பெப்’ ஏற்றக்கூடிய விஷயமாக இருக்கிறது.

‘உங்க பொழுதுபோக்குகள் என்ன?’ என்ற கேள்விக்கு, தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது என்று முட்டாள்தனமான பதில்களைச் சொன்ன இளைஞர்கள் பலர், இன்று சொல்வது ‘வாலன்டியரிங் பண்றேன் சார்’.

‘வாலன்டியரிங்’ என்று சொல்லப்படும் தன்னார்வச் சேவை அவ்வளவு சுலபமானதா என்ன? யார் வேண்டுமானாலும் தன்னார்வலராகிவிட முடியுமா? தன்னார்வலர்களால் எதையும் சாதித்துவிட முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு ‘இல்லை’, ‘முடியாது’, ‘இல்லை’ என்பதே பதில். ஏன்?

சேவை தேசபக்தியா..?

இந்தியாவைப் பொறுத்தவரை தன்னார்வலச் சேவை என்பது ஆரம்ப காலத்தில் ஒரு போராட்ட வடிவமாகவே இருந்துவந்திருக்கிறது. மேலை நாடுகள் பலவற்றில் இளைஞர்கள் தத்தமது நாடுகளின் ராணுவத் துறையில் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்ற வேண்டும் என்பது விதி. அந்தப் பணியைச் செவ்வனே செய்த பலர் பின்னாட்களில், யுத்த காலங்களில் மருத்துவப் பிரிவுகளில் தன்னார்வலர்களாக இணைந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தார்கள். பிற்காலத்தில், அவர்களின் பணியைப் பாராட்டி, அந்த நாடுகளின் அரசுகள் அவர்களுக்கு விருதுகள் கொடுத்து கவுரவித்தன.

1899 முதல் 1902 வரை நடந்த போயர் யுத்தத்தில், அப்படி ஒரு தன்னார்வலராக இருந்து மருத்துவப் பணியாற்றி, அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றவர்தான் காந்தி. சுதந்திரப் போராட்டத்தின்போது அவர் விடுத்த அழைப்பை ஏற்றுப் பல இளைஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அடிபட்டார்கள். சிறைக்குச் சென்றார்கள். இன்னும் பலர், நேதாஜி அமைத்த ராணுவப் படையில் சேர்ந்து போராடினார்கள். வெள்ளையரைக் கலங்கச் செய்தார்கள். செத்துப் போனார்கள்.

இந்தப் போராட்டங்களில் மாணவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டது, தங்களுக்கிருந்த தேசபக்தியினால்தானே தவிர, சேவை மனப்பான்மையினால் அல்ல. அதேபோல மொழிப் போராட்டங்களிலும், ஈழம் தொடர்பான போராட்டங்களிலும், ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் இளைஞர்கள் கலந்துகொண்டது உணர்வின் அடிப்படையினால்தானே தவிர சேவை மனப்பான்மையினால் அல்ல.

ஆனால் இன்றைய இளைஞர்கள் பலர், சேவை மனப்பான்மையே தேசபக்தி என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் தன்னார்வலர்களா?

‘வாருங்கள் இளைஞர்களே... எண்ணெய்க் கலப்பை சுத்தம் செய்ய கைகோப்போம்’ என்று கூவும் தொண்டு நிறுவனங்கள், எதன் அடிப்படையில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்தன‌? அவர்களுக்கு என்ன வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன? அவர்களுக்குப் பிரச்சினையின் வீரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதா? அவர்களுக்கு என்ன விதமான பிரச்சினைகள் வரலாம் என்பது குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதா? அப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால், என்ன விதமான முதலுதவி அல்லது என்ன விதமான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதா? என்ன விதமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டன? அந்த உபகரணங்களைச் சுத்தம் செய்ய என்ன வகையான ரசாயனப் பொருட்கள் வழங்கப்பட்டன?

இந்த எண்ணெய்க் கலப்பைச் சுத்தம் செய்யும் பணிகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, எண்ணூர் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, பல இளைஞர்கள் தங்கள் கால் வடிவில் பூட்ஸ் அணிந்திருப்பதாகத் தெரிந்தது பார்க்க முடிந்தது. ஆனால் கொஞ்சம் உற்றுப் பார்த்தபோதுதான் உண்மை உறைத்தது. அது பூட்ஸ் அல்ல. தோலின் நிறமே தெரியாத அளவுக்கு, முழங்கால் வரை கெட்டித் தார் போல எண்ணெய்க் கழிவு அவர்களின் கால்களைக் கவ்வியிருந்தது.

இதில் என்ன கொடுமை என்றால், இந்தத் தன்னார்வலர்களில் பெரும்பாலானவர்கள் கடல்சார் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள். இதுபோன்ற பேரிடர்களின்போது என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று தாங்கள் கற்கும் புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதோ, அவற்றுக்கு நேர்மாறாகச் செய்து வருகிறார்கள். இதுகுறித்து எச்சரிக்கை செய்து, அவர்களைத் தடுத்திருக்க‌ வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குக் கற்பிக்கிற பேராசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும் அல்லவா?

இன்று நீங்கள் ஒரு தன்னார்வலராக இல்லாமல் இருந்தால், ஒரு குற்றவாளியைப் போல நீங்கள் நடத்தப்படுவதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு. சாலையில் உள்ள‌ குப்பையை அள்ளவும் தன்னார்வலர்கள் வேண்டும். புயலில் சாய்ந்த மரங்களை அகற்றவும் தன்னார்வலர்கள் வேண்டும். மரம் நடவும் தன்னார்வலர்கள் வேண்டும். கடலில் எண்ணெய் கொட்டினாலும் தன்னார்வலர்கள் வேண்டும். எல்லாவற்றையுமே தன்னார்வலர்கள்தான் செய்ய வேண்டும் என்றால், பிறகு அரசு என்ற‌ ஒன்று ஏன், எதற்கு இருக்கிறது? நாளை கல்பாக்கத்திலோ, கூடங்குளத்திலோ அணு உலை விபத்து ஏற்பட்டால், இப்படித்தான் கையில் வாளியைக் கொடுத்து அனுப்புமா அரசு?

உண்மையான தன்னார்வலர்கள் யார்?

இன்று அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் ‘நாட்டு நலப்பணித் திட்டம்’ என்று அழைக்கப்படும் என்.எஸ்.எஸ்.திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், அந்த வருடத்தில் வருகின்ற ‘புற்றுநோய் விழிப்புணர்வு தினம்’, ‘குருதிக் கொடையாளர் தினம்’ உள்ளிட்ட முக்கியமான நாட்களை அனுசரிப்பதுடன், வருடத்தில் பத்து நாட்கள், கல்லூரிக்கு அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக் குளங்கள் சீரமைத்தல், ஆரம்பப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட மிக அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுவார்கள். இதனால் எத்தனையோ கிராமங்கள் பயனடைந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தத் திட்டத்தில் சேவை மனப்பான்மையுடன் தன்னார்வமாக முன்வந்து பணியாற்றும் மாணவர்களை விட, ‘கிளாஸ் கட் அடிக்க ஒரு ரீஸன் கிடைச்சாச்சுப்பா’ என்ற மனநிலையில் இருக்கும் மாணவர்களே அதிகம்!

இன்று தன்னார்வலர்களாக வலம்வரும் பல இளைஞர்கள், மேற்கண்ட திட்டங்களில் தங்களுக்குக் கிடைத்த அடிப்படையான அனுபவத்துடன் வருகிறார்கள். ஆனால், அது மட்டுமே போதுமா?

போதாது! பெரும்பாலான பேரிடர்களின்போது, பலருக்கும் உதவி செய்ய மனம் பரிதவிக்கும். கைகள் பரபரக்கும். அப்போது பலர் சேவை செய்யப்போகிறேன் என்று சொல்லி, பேரிடர் நிகழ்ந்த இடத்துக்கு வந்து ஏற்கெனவே அங்குள்ளவர்களுக்குத் தேவையற்ற சுமையாகிவிடுவது உண்டு. இன்னும் பல நேரம், உதவி செய்ய வந்தவர்களே ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகளும் அரங்கேறுவது உண்டு. ‘ஸ்கில்ட் (திறமையான)’, ‘செமி ஸ்கில்ட்’ (ஓரளவு திறமையான), ‘அன்ஸ்கில்ட் (திறமையற்ற)’ என்று தொழில்துறை எப்படிப் பணியாளர்களைப் பிரித்து வைத்திருக்கிறதோ, அதுபோலவே ‘ப்ரொஃபஷனல் வாலன்டியரிங்’, ‘ஸ்கில்ட் வாலன்டியர்’ போன்ற பதங்கள் உலக அளவில் பிரபலமானவை. ஆம், நீங்கள் சேவையாற்ற வேண்டுமென்றால்கூட, அதற்கென உரிய பயிற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அப்படி என்றால் என்ன செய்யலாம்? பேரிடரைச் சமாளிக்கத் தேவைப்படும் நிதியைத் திரட்ட உதவலாம். ஊடகம் சார்ந்த படிப்புகளைப் படித்தவராக இருந்தால், அந்தப் பேரிடர் குறித்து அறிக்கைகள் மூலமாகவும், ஒளிப்படங்கள் வாயிலாகவும் உலகின் கவனத்தைத் திசைதிருப்பி, நிதியுதவியைக் கோரலாம். பொருளாதாரம் படித்தவராக இருந்தால், திரட்டப்படும் நிதி நியாயமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற ஆய்வில் இறங்கலாம்.

இதெல்லாம் உதாரணங்கள்தான். மற்றபடி, சூழலுக்கு ஏற்ப, பேரிடரின் தன்மைக்கு ஏற்ப, தங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை உணர்ந்தவர்கள்தான் சிறந்த தன்னார்வலர்களாக இருக்க முடியும்!

தேவை எதிர்ப்பு, சேவையல்ல...

‘இத்தனை தூரத்துக்குத்தான் பிரச்சினை’, ‘இவ்வளவு எண்ணெய்தான் கொட்டியிருக்கிறது’, என்று என்னதான் கூறப்பட்டாலும், இதை ஒரு ‘வேதியியல் பேரிடர்’ என்றுதான் நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஏனென்றால், கடலில் கலந்திருப்பது கச்சா எண்ணெய். அதில் என்னென்ன ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி இன்னும் தெளிவான அறிக்கையோ, விவரங்களோ அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்தோ வரவில்லை. இந்நிலையில், இந்தப் பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்ற ‘தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்’ உடனடியாக இங்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை?

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, ‘அங்கே ஜல்சா நடக்கிறது’ என்று கொச்சைப்படுத்திய ‘தேசபக்தர்கள்’ ஏன் எண்ணெய் அள்ள வரவில்லை என்பதை யோசித்துப் பார்த்தீர்களா நண்பர்களே? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களை விரட்டி விரட்டி அடித்த ‘மக்களின் நண்பன்’ காவல்துறை, இன்று வாளியில் இருந்து ஒழுகிய எண்ணெய் படர்ந்த பாறைகளில் நின்றுகொண்டு, வெறும் கைகளால் சுத்தம் செய்யப் பாடுபடுகிற இளைஞர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க ஏன் வரவில்லை?

இதுபோன்ற பேரிடர் காலங்களில் எதையுமே செய்யாமலிருக்கும் அரசை, நடவடிக்கை எடுக்க நிர்பந்திப்பதே நமது பிரதான செயலாக இருக்க வேண்டும். அதற்கான போராட்டத்தில் இறங்கி வெற்றி பெற வேண்டும். இளைஞர்களிடம் எதிர்பார்க்கப்படுவதும் அதுவே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்