சுதந்திரமாக வாழ்வது எப்படி?

By ஆனந்த் கிருஷ்ணா

நாம் பிறக்கும்போது நம் மனத்தில் எந்தத் தகவலும் இல்லை. பிறந்த பிறகு நம்மைச் சுற்றி நடப்பது அனைத்தும் நம் மனத்தில் பதிவாகின்றன. குறிப்பாக நம் பெற்றோர் சொல்வதும் செய்வதும் நம் மனத்தில் ஆழமாகப் பதிகின்றன. அவர்களே நம் உலகம். அவர்களை எல்லாவற்றுக்கும் நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறோம். அவர்களைப் போலவே பேசுவதற்கு, பழகுவதற்கு, நடப்பதற்குக் கற்றுக்கொள்கிறோம்.

அவர்களை அன்பின் ஊற்றாகப் பார்க்கிறோம். அவர்களிடமிருந்து அன்பைப் பெறுவதற்கு எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை நம் தலையாய கடமையாகக் கொள்கிறோம்.

ஆனால் வாழ்க்கை நமக்கு வேறு செய்திகளைச் சொல்ல விழைகிறது. பல நேரங்களில் நமக்குச் சொல்லப்பட்ட விஷயங் களிலிருந்து பெரிதும் மாறுபட்ட செய்திகளை வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. அந்த நேரங்களில் நாம் குழம்பிப் போகிறோம். எது சரி, எது தவறு? நமக்குச் சொல்லப்பட்டதுதான் சரியா? அல்லது இப்போது இந்த நேரடி அனுபவத்தில் நமக்குத் தெரிவதா? எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது?

ஆனால் நமக்குள்ளே ஒரு குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. “நீ செய்வது தவறு. நீ கெட்டவன். பாவம் செய்கிறாய். உன்னைத் திருத்திக் கொள். இல்லையெனில் நீ துன்பத்துக்கு ஆளாவாய்.” இந்தக் குரலின் ஆதிக்கத்திலிருந்து நாம் தப்பிப்பது அசாத்தியமாக இருக்கிறது. அது நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் எழும் வெறும் சிந்தனைதான் என்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை.

அது தெரிந்த பிறகும் கூட இதிலிருந்து விடுபடுவது எளிதாக இல்லை. அந்தக் குரல் நம்மை மட்டுமல்லாமல் நம் வாய் வழியாகப் பிறரையும் எந்நேரமும் குத்திக்கொண்டே இருக்கிறது. நம் உறவுகளைக் குலைக்கிறது. நாம் எப்போதும் மற்றவர்களைத் திருப்திப்படுத்த முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால், என்ன செய்தாலும் மற்றவர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.

இந்த விஷயங்களிலிருந்தும் நாம் விடுபட்டாக வேண்டும். அப்படி விடுபட்டு, நம் சுயசிந்தனையின்படி நாம் வாழத் தொடங்கினால், நமக்குள் ஒரு சுதந்திர உணர்வும் இயல்பான சந்தோஷமும் இருப்பதை உணர முடியும். நம்முடன் உறவு கொள்ளும் மற்றவர்களும் உண்மையிலேயே நம்முடன் சந்தோஷமாக இருக்கும் அதிசயமும் நிகழ்வதைக் காண முடியும். அன்பின் ஊற்று நமக்குள்ளேதான் இருக்கிறது.

22 வயது இளைஞனான நான் கணிதத் துறையில் பட்டம்பெற்று பி.எட். முடித்தேன். பள்ளி, கல்லூரி எனத் தொடர்ந்த நேரத்திலும் இப்போதும் குறைகாணுதல் (எதிலும்), ஒருவர் கருத்தை மறுத்துப் பேசுதல் போன்ற எதிர்மறை எண்ணங்களால் என்மீதே நம்பிக்கையிழக்கும் அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளேன். தீர்வு ப்ளீஸ்?

நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்கள் அப்பாவோ அம்மாவோ இதேபோல் இருந்திருக்கக்கூடும். நம் பெற்றோரை நாம் பெரிதும் பின்பற்றுகிறோம். அவர்கள் நமக்குள் நாமாகவே ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆனால் அது நம் உண்மையான சுயம் அல்ல. உங்களிடம் நீங்கள் காணும் மனப்பாங்கு வெளியிலிருந்து உங்களுக்குள் பதிவானது. அது நீங்கள் அல்ல. இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதை விலக்கி வைத்துவிட்டு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உங்கள் வாழ்க்கையைப் பார்க்கிறீர்கள், எவ்வாறு மற்றவர்களிடம் உறவுகொள்ள விரும்புகிறீர்கள் என்பதைக் கவனம் கொடுத்து அறிந்து கொள்ளுங்கள். அதன்படி வாழ்க்கையை நடத்துங்கள்.

நான் கல்லூரி மாணவி. வயது 18. எனக்கு 8 வயது இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். என் தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துவருகிறேன். எனக்குத் தம்பி இருக்கிறான். என் தம்பியின் மீதுதான் என் அம்மாவிற்கு அன்பு அதிகம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. பொறாமைப்படவில்லை. என்னுடையது பெரிய குடும்பம். நான் குடும்பத்தில் அனைவரிடமும் அன்புடன்தான் இருக்கிறேன்.

நான் என்ன செய்தாலும், என் வீட்டில் “ஏன் பையன் மாதிரி நடந்துகொள்கிறாய்? இப்படி இருந்தால் திருமணம் செய்து கொடுக்கும் வீட்டில் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள். என் தம்பிக்கு என் குடும்பத்தில் கிடைக்கும் அங்கீகாரம் எனக்கும் கிடைக்க வேண்டும். நான் அடுத்த பெண் புரட்சியாளர் ஆக விரும்புகிறேன். நான் நினைத்ததைச் செய்யும் வாய்ப்பும், சுதந்திரமும் எனக்கு வேண்டும். நான் என்ன செய்வது?

தம்பிமீது அம்மாவுக்கு அன்பு அதிகம் என்பது பற்றி வருத்தமோ பொறாமையோ இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தம்பிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் அன்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி முட்டாளாக்குகிறார்கள். ஆனால் தெரிந்தே ஏமாறுகிறீர்கள். பையன் மாதிரி நடந்துகொள்கிறீர்கள் என்கிறார்கள். நீங்கள் பெண் புரட்சியாளர் ஆக வேண்டும் என்கிறீர்கள்.

இந்த எல்லா விஷயங்களிலும் வாழ்க்கையை நீங்கள் சுயமான பார்வையில் பார்க்காமல் எதிர்வினையாகவே சிந்திக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. இது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழாமல் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு எதிர்வினையாகச் சிந்தித்து நடப்பதாகத்தான் படுகிறது.

உங்கள் அங்கீகாரம் முதலில் உங்களிடமிருந்துதான் வர வேண்டும். நீங்கள் நினைப்பதைச் செய்யும் வாய்ப்பையும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வெளியில் இருந்து யாரும் கொடுக்க வேண்டியதில்லை. சுதந்திரம் மற்றவர்கள் கொடுக்கும் விஷயம் அல்ல. மற்றவர் கொடுக்கும் சுதந்திரம் எந்த நேரத்திலும் பறிக்கப்பட்டுவிடலாம். அது உண்மையான சுதந்திரம் அல்ல. நீங்கள் நீங்களாக வாழ்வதில்தான் சுதந்திரம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள்.

வெளியே நடப்பது வாழ்க்கை அல்ல. அவை வெறும் சம்பவங்கள்தான். அந்தச் சம்பவங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கை. அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்