சைக்கிள் பிரியர்களுக்குஒரு நற்செய்தி!

By என்.கெளரி

சைக்கிள் பிரியர்களின் எண்ணிக்கை பெருநகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக, அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆரோக்கியம், சூழல் நலன் போன்ற பல அர்த்தமுள்ள காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன. ஆனால், இப்படி நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான சைக்கிளைப் பராமரிப்பதற்கு சைக்கிள் பிரியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

இவர்களுக்குச் சரியான சைக்கிள் பராமரிப்பு சேவை மையங்களைக் கண்டுபிடிப்பது என்பது சவாலானதாக இருக்கிறது. அப்படியே சரியான சேவை மையத்தைக் கண்டுபிடித்தாலும் அந்த இடத்துக்கு சைக்கிளை எடுத்து செல்வதற்குப் பெரிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. சைக்கிள் பிரியர்களின் இந்தச் சிரமங்களையெல்லாம் கணக்கில் எடுத்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதற்காக ‘ஃபிக்ஸ் மை சைக்கிள்’ (Fix my Cycle) என்ற டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீசரண் ஸ்ரீதர்.

வீட்டுக்கே வரும் சைக்கிள் சேவை

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசரண், இந்த ‘ஃபிக்ஸ் மை சைக்கிள்’ நிறுவனத்தைக் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கிறார். வீட்டுக்கே சைக்கிள் தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி சைக்கிளைச் சீராக்கித் தரும் ஆன்லைன் சேவையை இந்நிறுவனம் வழங்குகிறது. “ஆரம்பித்த ஒரே மாதத்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை டிஜிட்டலாக ஆரம்பித்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். சைக்கிள் சேவைகளைப் பெற நினைப்பவர்கள் எங்களுடைய இணையதளத்தில் அவர்களுடைய சைக்கிள் பற்றிய விவரங்களைத் தெரிவித்து அவர்களுக்குப் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு நாளில் நான்கு பேரின் அழைப்புகளை ஏற்கிறோம். இப்போதைக்கு எங்களுக்கு முன் இருக்கும் பெரிய சவால் தொழில்நுட்ப வல்லுநர்கள் தட்டுப்பாடுதான். எங்களிடம் இருக்கும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘நிதி ஆயோக் சைக்கிள் தொழில்நுட்பப் படிப்பை’ முடித்தவர்கள். விரைவில் பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் எங்கள் சேவைகளை விரிவாக்கம் செய்யும் திட்டமும் இருக்கிறது” என்று சொல்கிறார் ஸ்ரீசரண்.

இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், சென்னையின் நான்கு மண்டலங்களிலும் ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் அவர். இந்த ஆய்வு சைக்கிள் பிரியர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அவருக்குப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. “வார இறுதிகளில்தான் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருப்பார்கள் என்பதால் எங்களுடைய சேவைகளை செவ்வாய் கிழமைத் தவிர மற்ற ஆறு நாட்களும் வழங்குகிறோம். இப்போது பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் சைக்கிளை வாங்குவதால் அது பொருத்தப்படாத நிலையிலேயே வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

அதனால், சைக்கிளின் தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்வதோடு சைக்கிளை ஒன்றிணைக்கும் சேவைகளையும் வழங்குகிறோம். அத்துடன், வீட்டைக் காலிசெய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சைக்கிளைப் பிரித்துதரும் சேவைகளையும் செய்கிறோம். இந்திய சைக்கிள்கள், இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் என இரண்டு வகையான பேக்கேஜ்களில் சேவைகளை வழங்குகிறோம். இதுதவிர பிற கூடுதல் சேவைகள் இருந்தால் அதையும் சேவையில் குறிப்பிடலாம்” என்கிறார் அவர்.

தற்போது ‘ஃபிக்ஸ் மை சைக்கிள்’ நிறுவனத்தின் மூலம் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், பெருநிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சேவைகளை வழங்கிவருகிறார் ஸ்ரீசரண். “பெருநகரங்களில் போக்குவரத்துக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் அதிகரிக்கப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்போது வசதியுடன் கிடைக்கும் ஆடம்பரமான சைக்கிள்களும், ஆரோக்கியத்தை நோக்கி மக்கள் நகர்வதும் இந்த சைக்கிள் கலாச்சாரம் பரவுவதற்குக் காரணம்” என்கிறார் அவர்.

சைக்கிள் வாங்குவதும் பராமரிப்பதும்

ஸ்ரீசரனே ஒரு ‘சைக்கிளிஸ்ட்’டாக இருப்பதால் சைக்கிள் வாங்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களாகச் சிலவற்றைப் பட்டியலிடுகிறார். “சைக்கிளை வாங்கும்போது அதை எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள். அதை இரண்டு கிலோமீட்டருக்குப் பயன்படுத்துவீர்களா, பத்து கிலோமீட்டருக்கு மேல் பயன்படுத்துவீர்களா என்பதை மனதில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுங்கள்.

அத்துடன் வாங்கும் சைக்கிள் உங்களுடைய உடலின் எடைக்கும் உயரத்துக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். இப்போது சாலை சைக்கிள்கள்(Road bikes), நகர சைக்கிள்கள்(City bikes/Hybrid bikes), மலைப்பகுதி சைக்கிள்கள் (Mountain Bikes - MTB), நிலப்பரப்பு சைக்கிள்கள் (Terrain Bikes) போன்ற வகைகளில் சைக்கிள்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து உங்களுடைய தேவையைப் பொருத்து சைக்கிளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டில் நான்கு முறையாவது சைக்கிளை ‘சர்வீஸ்’ செய்ய வேண்டியது அவசியம்” என்கிறார் ஸ்ரீசரண்.

மேலும் விவரங்களுக்கு: > www.fixmycycle.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்