கிராபிக் நாவல் டு சினிமா: விலங்குகளையும் துரத்திய ஹிட்லர்

உங்களுடைய எதிரிகள் யார் என்பதையோ, யாரை நம்புவது என்பதையோ உங்களால் எப்போதுமே கணிக்க முடியாது. ஆனால், விலங்குகளின் கண்களை நீங்கள் உற்றுநோக்கினால், அவற்றின் மனதில் என்ன இருக்கிறதோ, அதுதான் அவற்றின் கண்களில் தெரியும். ஒருவேளை, அதனால்தான் நான் விலங்குகளைப் பெரிதும் நேசிக்கிறேனோ என்னவோ? –ஆன்டொனினா ஸொபின்ஸ்கி.

செப்டம்பர் 1, 1939. அன்றுதான் போலந்து நாட்டின் மீது ஹிட்லரின் ஜெர்மானியப் படை போர் தொடுத்தது. இதுதான் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பமும்கூட. மூன்று லட்சம் யூதர்களுக்கும் மேல் வசித்த போலந்தில், அவர்கள் அனைவரையும் கொன்று குவிக்கவே இந்தப் படையெடுப்பு நடந்தது. இந்தப் படையெடுப்பு ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து, போலந்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஜெர்மன் ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள். அப்படிச் சேர்ந்த ஒருவரின் பார்வையில்தான் இந்த 'Zoo Keeper’s Wife' என்ற நாவல் சொல்லப்படுகிறது.

ஒரு விலங்குக் காட்சியகம்

விலங்கியல் நிபுணரான யான் ஸொபின்ஸ்கி, தனது மனைவி, மகனுடன் விலங்குக் காட்சியகத்துக்கு அருகிலிருக்கும் ஒரு வீட்டில் வசித்துவருகிறார். வார்ஸா நகரத்துக்கு வெளியே இருக்கும் பிரகா என்ற இடத்தில்தான் விலங்குகளைச் சரியான முறையில் வழிநடத்துவதற்குப் பல புதிய முயற்சிகளை அவர் மேற்கொள்கிறார். அவரது மனைவி ஒரு விலங்கு நேசர். எந்த அளவுக்கு என்பதை, அவர்களுடைய மகனின் பெயரைக்கொண்டே அறியலாம். 'ரைஸார்ட்' என்பதே அவர்களுடைய மகனின் பெயர். போலந்து மொழியில் ரைஸ் என்றால் லிங்க்ஸ் எனப்படும் காட்டுப்பூனை என்று பொருள். ஒவ்வொரு விலங்குகளுடனும் பேசி, அவற்றின் உடலைக் குணப்படுத்த முயல்பவர் ஆன்டொனினா.

நாஜிப் படையின் முதல் தாக்குதலில் இந்தக் குடும்பம் பிரிந்துவிடுகிறது. ஒட்டுமொத்த போலந்தும் குண்டுவீசித் தகர்க்கப்படுகிறது. கடைசியில் போலந்து அரசு ஹிட்லருக்கு அடிபணிய, ஒருவழியாகப் போர் முடிவுக்கு வருகிறது. அதிசயிக்கத்தக்க வகையில், யான் ஸொபின்ஸ்கி தன்னுடைய குடும்பத்துடன் மறுபடியும் இணைகிறார். அவர்கள் மறுபடியும் விலங்குக் காட்சியகத்துக்கு அருகில் இருக்கும் தங்கள் வீட்டுக்குத் திரும்புகின்றனர். யூதர்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால்கூடக் கொலைக்குற்றமாக அறிவிக்கப்பட்டது. லூட்ஸ் ஹெக் என்ற ஜெர்மன் ராணுவத் தளபதியும் ஒரு விலங்கியலாளர் என்பதால், அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறி, வெளியே சிதறுண்டு ஓடிய, காயமடைந்த விலங்குகளைத் தேடிப்பிடித்து அவற்றை மறுபடியும் விலங்குக் காட்சியகத்துக்குக் கொண்டுவருகிறார், யான்.

யூதர்களின் புகலிடம்:

ஜெர்மன் ராணுவத்துக்குத் தெரியாமல், முன்னூறுக்கும் அதிகமான யூதர்களுக்குப் புகலிடம் கொடுத்து, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறது ஸொபின்ஸ்கி தம்பதி. ராணுவ வீரர்கள் சோதனைக்கு வரும்போது, ஒளிந்திருக்கும் யூதர்களை உஷார் செய்ய, ஆன்டொனினா பியானோ வாசிக்கும் செயல், விலங்குக் காட்சியகத்தின் நடுவில் ஆயுதங்களை மறைத்து வைக்கும் திட்டம் என்று விறுவிறுப்பான பல கட்டங்கள் இந்த நாவலில் உள்ளன. நீளமான வர்ணனைகள், யாருடைய பார்வையில் நாவல் சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்த குழப்பம் போன்றவற்றைத் தாண்டி, இந்த நாவல் பேசும் உண்மையின் வலி காத்திரமானதாக இருக்கிறது. பல காட்சிகளை நிதானமாக விவரித்து எழுதி, நம் கண்முன்னே அந்தக் கொடூரங்களை ஒளிப்படமாகவே ஓடவிட்டிருக்கிறார் எழுத்தாளர் டயான் ஆக்கர்மேன். 2007-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவல், இப்போது திரைப்படமாக மாறியுள்ளது.

எதற்குக் காப்பாற்றினார்கள்?

இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் யூதர்களைக் காப்பாற்ற ஸொபின்ஸ்கி குடும்பத்தினர் முயற்சிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ஒரு இஸ்ரேல் நாட்டுப் பத்திரிகையாளருக்கு யான் பதில் சொல்லும் வகையில் ஆக்கர்மேன் ஒரு பகுதியை எழுதியிருக்கிறார். “உங்களால் ஒரு உயிரைக் காப்பாற்ற இயலும் என்றால், அந்த உயிரைக் காப்பாற்ற முயல்வது உங்கள் கடமை”.

ஜெர்மன் ராணுவத்தினரால், விலங்குகளைவிட கீழாக மதிக்கப்பட்ட யூதர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்தது ஸொபின்ஸ்கி குடும்பத்தின் கடமை. அதேநேரம், அவர்கள் விலங்குகளையும் மனிதர்களுக்கு இணையாக மதித்தார்கள். ஒரு உயிரின் மதிப்பை அறிந்த அவர்களுக்கு இஸ்ரேலின் மனிதாபிமானத்துக்கான மிக உயரிய விருது அளிக்கப்பட்டது, அந்த விருதுக்குத்தான் பெருமை.

இயக்குநர் நிக்கி காரோ

ஒரு நாவலை, பிரபலமான கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டுமா, 'கூப்பிடு, நிக்கியை' என்று சொல்லும் அளவுக்குத் தனது திரைப்படங்களை நேர்த்தியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் புகழ்பெற்றவர் இந்த நியூஸிலாந்து இயக்குநர். 50 வயதாகும் இவர், இதுவரையில் பல பிரபலமான நாவல்களைச் சுவாரசியமான திரைப்படங்களாக மாற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

உலகம்

33 mins ago

வணிகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்