இசை: இந்தியில் தயாராகும் தாகூர்ஸ் மியூஸிக்

By வா.ரவிக்குமார்

இந்தியாவின் உன்னதமான இருவர் யாராக இருக்க முடியும் என்னும் கேள்விக்குப் பலரும் பலரை உதாரண புருஷர்களாகச் சொல்வதற்கு வழியிருக்கிறது. ஆனால், மேற்கு வங்காளத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினால் உங்களுக்குக் கிடைக்கும் பதில்: சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் என்பதாகத்தான் இருக்கும். உலகப் புகழ்பெற்ற, நோபல் பரிசுபெற்ற தாகூரின் கீதாஞ்சலி தொகுப்பிலிருந்து சில பாடல்களை அடியொற்றி இந்தியில் மொழிபெயர்த்து அதை ’தாகூர்ஸ் மியூஸிக்கி’ என்னும் இசை ஆல்பமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மும்பையைச் சேர்ந்த ரான்கல் பிரதர்ஸ் நிறுவனம். இந்த இசை ஆல்பத்துக்கு இந்தியில் பாடல்களையும் இசையையும் ஒலிப்பதிவு செய்யும் பணியையும் ரோஹித் என்னும் இளைஞர் ஏற்றிருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

“ரமேஷ் ஊர்மிலாஷு என்னுடைய இயற்பெயர். நானாக வைத்துக்கொண்ட பெயர் ரோஹித். பிஹார் மாநிலத்தின் கிசான்கனிதான் என்னுடைய சொந்த ஊர். பிஹாரில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்றேன்” என்றார்.

இசைக்கு விதை போட்ட சென்னை

சென்னையில் இருந்த நான்கு ஆண்டுகளில் ஷெனாய் வித்வான் பண்டிட் பாலேஷ் மற்றும் அவரின் மகன் கிருஷ்ணா பாலேஷ் நடத்தும் தான்சென் அகாடமியில் இசை படித்திருக்கிறார் ரோஹித். கிருஷ்ணா பாலேஷ் உடன் சென்னை, கர்நாடகாவின் தார்வாட், கடாக் போன்ற பல இடங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். அதன்பின் டெல்லி சார்தா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பதற்கு சென்றவர், படித்துமுடித்தவுடன் பொறியாளராக வேலை கிடைத்தும் அதில் ஈடுபட அவருக்கு விருப்பம் இல்லை. இசைத் துறையில் ஈடுபடவே விரும்பியிருக்கிறார்.

“தொழில்நுட்ப ரீதியாக என்னுடைய இசை அறிவை வளர்த்துக்கொள்ள, மும்பை ரான்கல் மீடியா இன்ஸ்டிடியூடில் சவுண்ட் டிசைன் இன்ஜினீயர் பயிற்சி பெற்றேன். ரான்கல் பிரதர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பிலிலும் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில்தான் கவி குரு ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து பலரும் அதிகம் கேட்டிராத கவிதைகளின் அர்த்தத்தை அடியொற்றி அவற்றை இந்தியில் இசை ஆல்பமாகத் தயாரிக்கும் எண்ணத்தில் அந்த நிறுவனம் இருப்பது தெரிந்தது. இதற்காகத் தகுந்த மொழிபெயர்ப்பாளர், இசையமைப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தனர். பல்வேறு கட்டங்களில் நடந்த நேர்முகத் தேர்வில் நான் இதற்காகத் தேர்வானேன். இப்படித்தான் தாகூர்ஸ் மியூஸிக்கி இசை ஆல்பத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கை கொடுத்த இசைக் குழு

நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 1234 வோர்ல்ட் ஆஃப் மியூசிக் என்னும் இசைக் குழுவையும் நடத்திவந்தேன். எங்கள் குழுவில் நான் பாடல் எழுதுவது, இசை வடிவமைப்பு, ஒலிப்பதிவு ஆகியவற்றைக் கவனித்துக் கொள்வேன். நிகில் கேதம்பாடி கிடார் வாசிப்பதோடு கம்போஸிங்கும் செய்வார். நிஷாங் கோஸ்வாமி கீபோர்ட் வாசிப்பார். பிரியாங்கி லாஹிரி குழுவின் பாடகி. எங்களை தாகூர்ஸ் மியூஸிக்கில் ஈடுபடச் செய்த பெருமை, ரான்கல் நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சீவ் சர்மாவையே சேரும்.

தற்போது தாகூர் மியூஸிக்கி இசை ஆல்பத்தை வெளிக்கொண்டு வருவதில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிவருகிறேன். இதைத் தவிர தமிழில் ‘சகாப்தம்’ திரைப்படத்தை இயக்கிய சுரேந்திரன் கலியபெருமாள், இந்தியில் இயக்கும் ‘ககான்’ திரைப்படத்துக்கு ஒலிப்பதிவாளராக இருக்கிறேன். வசனம் மற்றும் இசையிலும் உதவி வருகிறேன்” என்கிறார் ரோஹித்.

பல பாணி இசை

கீதாஞ்சலியிலிருந்து ஏழு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதன் கருத்தை இந்தியில் பாடலாக மொழிபெயர்த்து, அதற்கு சூஃபி, கவ்வாலி, ராக், ரவீந்திர சங்கீத் போன்ற பல இசை பாணியில் இதன் இந்த இசை ஆல்பத்தை தயாரிக்க உள்ளனர். பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகர்கள் இதில் பாடவிருக்கின்றனர்.

“பெங்காலி அறிந்த மக்களின் காதுகளில் மட்டுமே தேன் பாய்ச்சிய தாகூரின் பாடல்கள் இனி, இந்தி தெரிந்த மக்களின் காதுகளிலும் தேன் பாய்ச்சும். இதற்கான முறையான அனுமதியையும் சம்பந்தப்பட்டவர்களிடம் ரான்கல் தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருக்கிறது” என்கிறார் ரோஹித்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்