கபாலியைக் கனவில் பார்த்த கதை: கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே...!

By ரிஷி

நம்பவே முடியவில்லை அவனால். எப்படி நடந்தது அது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படி என்ன அவனுக்கு நடந்தது என்று கேட்கிறீர்களா, அவன் டிக்கெட் வாங்கிவிட்டான். என்ன செத்துவிட்டானா என அபசகுனமாகக் கேட்டுவிடாதீர்கள். அவனுக்குக் கபாலி படத்தின் டிக்கெட் கிடைத்துவிட்டது. தன்னுடைய காதலியுடன்தான் கபாலி பார்க்க வேண்டும் என்ற நினைத்த அவனால் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு ஒரே ஒரு டிக்கெட்தான் கிடைத்தது. படம் பார்த்துவிட்டு வந்தவுடன் வேறொரு காதலி தேட வேண்டும். ஆனால் அதைப் பற்றிக் கவலை இல்லை. காதலி கிடைப்பாள். ஆனால் ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன் ஒரே ஒரு ரஜினி. தலைவரைப் போல் வேறு யார் உண்டு. காதல் போனால் வரும் கபாலி போனால் வருமா?

****

அதிகாலை நான்கு மணியை அவன் ஆயுளிலேயே இன்றுதான் பார்க்கிறான். நான்கு மணிக்குச் சூரியன் தெரியாது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இரவில் மட்டும்தானே சூரியன் இருக்காது, காலையிலும் அது இருக்காதா என அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான்கு மணிக்கு, உயிரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வது போல் கையில் டிக்கெட்டை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டே திரையரங்குக்குள் நுழைகிறான். முதலில் கழிப்பறைக்குச் சென்று அவசர அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, அப்படியே அங்கேயே குளித்துவிட்டு வருகிறான். குளித்த உடன் வயிறு பசிக்கிறது. பசி பொறுக்க மாட்டாமல் ரஜினிகாந்தின் போஸ்டர்களைப் பார்க்கிறான். வித விதமான போஸில் தலைவர் ஜெக ஜோதியாக மின்னுகிறார். வயிறு நிறைந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. வயிறு நிறைந்த உடன் மனசை நிறைப்பதற்காகத் திரையரங்கில் தனக்கான இருக்கையில் வந்து அமர்கிறான்.

****

திருப்பதி கோயிலுக்கு வந்தது போல் ஒரே பக்தி மயம். எல்லோரும் தங்கள் கடவுளுக்காகக் காத்திருக்கிறார்கள். தலைவா தலைவா என ஒரே கூச்சல். சில நிமிடங்கள் சென்ற பின்னர்தான் தானும் அப்படிக் கத்திக்கொண்டிருப்பதே அவனுக்குத் தெரிந்தது. அந்த அளவு ஆரவாரமும் உற்சாகமும் பீறிட்டு வழிந்தது. பக்கத்தில் ஒரு மனிதர் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். எப்படியும் அவருக்கு ஒரு நாற்பது ஐம்பது வயது இருக்கும் அவரே அருள்பெற்ற நிலையில் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் கண்ட அவனுக்குத் தன் தலைவரை நினைத்து ஒரே பெருமை.

****

திரையரங்கில் இருள் சூழ்கிறது. திரையை வெளிச்சம் ஆக்கிரமிக்கிறது. கடந்த இருபது வருடமாக ரசிகர்கள் பார்த்துக் களித்த அதே ஸ்டைலில் இந்தப் படத்திலும் டைட்டிலில் தலைவர் பெயர் திரையைக் கிழித்து உள்ளே செல்கிறது. முதன்முறையாக இப்போதுதான் பார்ப்பது போல் கைகள் நொறுங்குவதைப் போல் கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். எப்படித் தலைவரை அறிமுகப்படுத்தப்போகிறார்களோ என அவனுக்கு நெஞ்சு திக் திக் என அடித்துக்கொள்கிறது. மலேசிய விமான நிலையம். கிளம்பத் தயாராக இருக்கிறது ஒரு விமானம். ஒரு பயணி மட்டும் வரவில்லை விமானத்தினுள்ளே எல்லோரும் பரபரக்கிறார்கள். விமானத்தில் பயணிகள் ஏறும் ஏணி நகரத் தொடங்கும் நேரத்தில் அதன் அருகே பூமி பிளக்கிறது. வெடித்து எழுகிறது ஓர் உருவம். சந்தேகமே இல்லை. தலைவர்தான். பூமியைப் பிளந்து வெளியே வந்து விழுகிறார். வெளுத்த தாடியில் பளீரெனச் சிரிக்கிறார். நிதானமாக நின்று ரசிகர்களைப் பார்த்துக் கண்ணடிக்கிறார், கைகூப்புகிறார், தன்னை வாழவைத்த நிலத்தைத் தொட்டுக் கும்பிடுகிறார். இவை அனைத்தையும் முடித்துவிட்டு அவர் ஏறுவதற்காக விமானம் பொறுமையுடன் காத்திருக்கிறது. தங்கள் கடவுளைப் பார்த்த பரவசத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் டைட்டானிக் கப்பல் போல் ஆகிவிட்டது திரையரங்கம். ரஜினி விமானத்தில் ஏறி அமரவும் விமானம் பறக்கிறது.

****

ரஜினியின் அருகில் அமர்ந்திருப்பவர், “உங்களுக்குப் பயமே இல்லையா” என்கிறார். ரஜினியிடமிருந்து அதே ஹா… ஹா… ஹா…. டிரேட் மார்க் சிரிப்பு டிஜிட்டல் ஒலியில் வெளிப்படுகிறது, “கண்ணா பயப்படுறதுக்கு நான் ஒண்ணும் டவாலி இல்ல, கபாலி” எனச் சொல்லிவிட்டு, யாரு எனக் கேட்டு, ரசிகர்களைப் பார்க்கிறார். திரையரங்கமே ‘கபாலி கபாலி’ எனக் கதறுகிறது. பின்னர் நிம்மதியாக ரஜினி கண்ணயர்கிறார். அருகிலுள்ளவர் சொல்கிறார்: “இந்த இருபத்தைந்து வருடத்தில் இன்றுதான் கபாலி உறங்குகிறார்”, ரஜினியின் உறக்கத்தைக் கலைக்க விரும்பாதது போல் படமே பின்னணியிசையின்றி மௌனமாகிறது.

****

இருபத்தைந்து ஆண்டுகளாக ஏன் கபாலி உறங்கவில்லை? அதற்கு விடை காண நாம் சில வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்… மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக மலேசிய நிறுவனம் ஒன்று தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கானோரை அழைத்து வருகிறது. அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன ஊதியத்தைத் தர நிறுவனம் விரும்பவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் அதன் மேனேஜரான கபாலிக்கும் வாக்குவாதம் வருகிறது. ஏழைகளின் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஒருக்காலும் சம்மதிக்க முடியாது என வீம்பு காட்டுகிறார் கபாலி. நிறுவனம் கபாலியை வெளியே அனுப்புகிறது. ‘உலகமே உனக்காகக் காத்திருக்க, நீ சிறு கூட்டுக்குள் அடைபடுவதா’ என்ற பாடலொன்று இந்தப் பின்னணியில் பொருத்தமாக ஒலிக்கிறது.

****

தானே ஒரு நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறார் கபாலி. அந்த நிறுவனத்தில் எல்லோரும் தொழிலாளி எல்லோரும் முதலாளி என்கிறார். அவர் பின்னால் ஒரு படையே திரள்கிறது. லட்சக்கணக்கானோர் அவருக்காக உயிரையும் தரத் தயாராகிறார்கள். இதனிடையே நிறுவன அதிபரின் மகளுக்கும் கபாலிக்கும் காதல் மலர்கிறது. தன் தந்தைக்குச் சொந்தமான நிறுவனம் உண்மையில் தன் தந்தைக்கு உரியது அல்ல என்று மலேசியவைச் சேர்ந்த மற்றொரு பெரியவருக்கு உரியது என்றும் அவருடைய மகள் சொல்கிறார். அந்தப் பெரியவர் வேறு யாருமல்ல கபாலியின் தந்தை. அவரை ஏமாற்றி நிறுவன அதிபர் அதைத் தன் சொத்தாக மாற்றிக்கொண்டார் என்னும் உண்மையை அறிந்த ரஜினி அந்தச் சொத்தை மீட்க சவால் விடும்போது இடைவேளை வந்துவிடுகிறது. சொத்தை மீட்கும்போது படம் நிறைவடைந்து விடுகிறது. இடையிடையே இரண்டு மூன்று பாடல் காட்சிகள்,

முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியில் ரஜினியின் நடனம் விறுவிறுப்பு. ரஜினி தன் சுண்டு விரலால் மட்டுமே வில்லன்களை அடித்து விரட்டும் சண்டைக் காட்சி புது விதமாகப் படமாக்கப்பட்டிருந்தது. பல படங்களில் பார்த்த அதே காட்சிகள், ஆனாலும் ரஜினி அவற்றை முதன்முதலாகச் செய்வதைப் போன்ற நேர்த்தியுடனேயே செய்திருக்கிறார். இதைப் போன்ற இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் ரஜினி ரஜினிதான். அவரை மாற்றவே முடியாது அதற்கு இனி ஒருவர் பிறக்க வேண்டும் என்று எண்ணியபடி திரையரங்கிலிருந்து வெளியேறினான் அவன். கனவும் கலைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்