ஆரணிக்கு அடையாளம் தந்த பட்டு

By ஆதி வள்ளியப்பன்

ஒரு காலத்தில் ஆரணி என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் விஷயம், ஆரணி அரிசியாகவே இருந்தது. அந்தப் பெருமையைப் பட்டு தட்டி சென்று 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தமிழகத்தின் பட்டு மையங்களில் பலவும் நொடித்துப் போய்விட்ட நிலையிலும்கூட, ஆரணியில் இன்றும் பல குடும்பங்களின் முதுகெலும்பாக இருப்பது கைத்தறிப் பட்டு நெசவுதான்.

ஆரணிப் பட்டுச் சேலைகள் சர்வ தேச அளவில் அமோகமாக விற்பனை ஆகி வருகின்றன. இப்போது பல மாநிலங்களில் இருந்து நேரடியாக ஆரணிக்கே வந்து பட்டுச் சேலைகளைக் கொள்முதல் செய்து செல்லும் அளவுக்கு அது புகழ்பெற்றிருக்கிறது. இந்தப் புகழை ஆரணி பெற்றது கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான்.

ஆரம்பக் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவையே புகழ்பெற்றிருந்தது. 18ஆம் நூற்றாண்டில் சௌராஷ்டிரர்களின் குடியேற்றத்துக்குப் பிறகு ஆரணிக்கு நெசவுத் தொழில் வந்தது. பிற்பாடு அது பட்டு நெசவுக்கு மாறி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனமயமும் ஆனது. குறிப்பாக, 1927இல் தம்பண்ணச் செட்டியார் என்பவர் ஆரணியில் பட்டு முறுக்காலையை அமைத்தார்.அதன்பிறகு தொடர்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு வளர்ச்சிகளால் பட்டுச் சேலை நெசவு விரிவடைந்தது.

1970கள் வரை ஆரணிப் பட்டுப் புடவைகள் என்றாலே, அது டாபி பட்டுச் சேலை என்ற ஓரிழை பட்டுச் சேலைகள்தான். 70களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக, தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக உருவாக ஆரம்பித்தார்கள். மேல்தட்டு மக்கள் அணிந்த பட்டுச் சேலையை உடுத்த வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு வந்தது.

அந்தக் காலம்வரை தரத்தில் உயர்ந்த, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளே பரவலாக இருந்தன. அவற்றின் விலை அதிகம், எடையும் கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு காஞ்சிபுரம் பட்டுச் சேலையை வாங்கும் அளவுக்கு சக்தி இல்லை.

இந்தச் சூழலில் பட்டுச் சேலை விற்பனையில் புதிதாக உருவான அந்த வாய்ப்பை, ஆரணி சரியான நேரத்தில் கைப்பற்றிக்கொண்டது. காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் இருக்கும் டபுள் சைட் (மேலும் கீழும்) பார்டரைப் போலவே, கோர்வை எனப்படும் பட்டுச் சேலைகள் ஆரணியில் உருவாக்கப்பட்டன. இந்தச் சேலையின் எடை கொஞ்சம் குறைவு, விலையும் மலிவு.

அவ்வளவு காலம் மேல்தட்டு மக்கள் மட்டுமே அணிந்து வந்த பட்டுச் சேலைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறின. இதற்குக் காரணம் ஆரணி பட்டு நெசவாளர்கள்தான். இதன்மூலம் 80களில் பட்டு உற்பத்தி நகரம் என்ற அடையாளம் ஆரணிக்குக் கிடைத்தது.

அத்துடன், பாரம்பரிய நெசவாளர் சமூகங்கள் மட்டுமில்லாமல், புதிய சமூகங்களும் இதை ஒரு தொழிலாக மேற்கொண்டுள்ளனர். "ஆரணி பட்டுச் சேலைகளுக்கான தேவை, உற்பத்தி அளவைவிட அதிகரித்தபோது, நெசவில் பழக்கமில்லாத மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பட்டு நெசவில் ஈடுபடுவதற்கு ஆரணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நெசவுப் பயிற்சி பெற்று, அதை ஒரு தொழிலாகச் செய்துவருகின்றனர். இது ஆரணியின் குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார் அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவுச் சங்கம், விற்பனை மையத்தின் மேலாளர் கண்ணதாசன்.

தேசிய அளவில் முக்கிய பட்டு உற்பத்தி மையங்களின் வரிசையில் ஆரணி இப்போது இடம்பிடித்திருக்கிறது. இன்றைக்குத் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தாலுகா ஆரணிதான்.

"இன்றைய தேதிக்கு ஆரணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் பட்டு நெசவு, சார்புத் தொழில்களின் மொத்த மதிப்பு மாதத்துக்கு ரூ. 25 கோடி. இதில் கைத்தறிப் பட்டு நெசவு சார்ந்த தொழில்களின் மதிப்பு மட்டும் ரூ. 18 கோடி. கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் ஆரணி, சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டு நெசவை நம்பி வாழ்ந்து வருகின்றன" என்கிறார் ஆரணி பட்டு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எச். குருராஜ ராவ்.

ஆரணி தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டு நெசவுதான் பிரதானத் தொழிலாக இருக்கிறது. நெசவு மட்டுமில்லாமல் சாயம் போடுதல், அட்டை அடித்தல், பட்டு இழைத்தல், பட்டு கொள்முதல், விற்பனை போன்ற பல துணைத் தொழில்களும் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

இன்றைய இளந்தலைமுறை கைத்தறிப் பட்டு நெசவுத் துறைக்குள் அதிகம் வராமல் இருந்தாலும்கூட, ஆரணி பட்டு நெசவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடவில்லை. அதற்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பங்கள் பட்டுச் சேலைகளின் தேவையைச் சமாளிக்கின்றன.

இன்றைக்குக் கோர்வை பட்டுச் சேலைகளுக்குப் பதிலாகத் தர்மாவரம் வகை சேலைகளே ஆரணியில் அதிகம் நெய்யப்படுகின்றன. நெசவுத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள், ஆள் பற்றாக்குறை போன்றவை இருந்தாலும், இளம் பெண்களுக்குப் பிடித்த, நுணுக்கமான கம்ப்யூட்டர் டிசைன்களைக் கொண்ட தர்மாவரம் சேலைகளே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

விவசாயம், அரிசி ஆலை, பட்டு நெசவு என தொடர்ச்சியாக தொழில் செய்யும் சூழலுக்கு ஏற்படும் நெருக்கடி நிலைகளைச் சமாளித்து, புதிய தொழில் வாய்ப்புகள் வரும்போது சரியான நேரத்தில் அதைக் கைப்பற்றி, தகவமைத்துக்கொண்டு செயல்படும் தன்மை ஆரணிக்கு இருக்கிறது. தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் தன்மையும் ஆரணிக்கு உண்டு.

தொடர்ச்சியாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதுதான் ஆரணியின் தனிச்சிறப்பு.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி, நிறுவன ஆராய்ச்சி மாணவி, ந.அ. அறிவுக்கரசி உதவியுடன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்