இளமை நெட்: சுற்றுலாவுக்கு உதவும் ஆன்லைன் வழிகாட்டிகள்

By சைபர் சிம்மன்

கோடை விடுமுறைக்கான சுற்றுலாப் பயணம் சிறப்பாக அமைவது அதைச் சரியாகத் திட்டமிடுவதில்தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தைத் தேர்வுசெய்வதில் காட்டும் கவனத்தை, திட்டமிடுதலிலும் காட்ட வேண்டும். முன்கூட்டியே சரியாகத் திட்டமிடுவதன் மூலம் பயணத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும் தேவையில்லாத அலைச்சல்களையும் தவிர்க்கலாம்.

அதோடு, சுற்றுலா செல்லும் இடத்தில் எதையும் தவற விடாமல் முழுமையாகச் சுற்றிப் பார்க்கலாம். இணையம் மூலமே இந்தத் திட்டமிடலைக் கச்சிதமாகச் செய்யலாம். அதற்கு உதவக்கூடிய புதுமையான இணையதளங்கள், செயலிகள் பற்றி ஒரு பார்வை:

சைஜிக் டிராவல்

உங்களுக்கான தனிப்பட்ட சுற்றுலாப் பயணத் திட்டத்தைப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அல்லது பயண வழிகாட்டி வகுத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்? சைஜி டிராவல் இணையதளம் இதைச் சாத்தியமாக்குகிறது. பயணத் திட்டமிடலுக்காக இந்தத் தளத்தைப் பயன்படுத்துவது எளிதானது.

இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, முதலில் நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் எனும் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு உதவும் வகையில், உலகச் சுற்றுலா நகரங்களின் பெயர்களும் வரிசையாகத் தோன்றுகின்றன. அவற்றில் விருப்பமான நகரைத் தேர்வு செய்ததும், பயணத்துக்கான கால அளவைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் அந்தக் கால அளவுக்கு ஏற்ப சுற்றிப் பார்ப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

பயணத்தைத் தொடங்கும் நாள், தங்குமிடம் போன்றவற்றையும் தேர்வு செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் நமக்கான பயணத் திட்டம் வகுத்துக் கொடுக்கப்படுகிறது. அதை வழிகாட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம். பயணத் திட்டத்தை உருவாக்க கூகுள் அல்லது ஃபேஸ்புக் நுழைவு வசதியையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு வரைபடத்தில் சுற்றுலா நகரங்கள் தோன்றுகின்றன. எந்த நகரை கிளிக் செய்தாலும் அந்நகரில் பார்க்கக்கூடிய இடங்களை இடது பக்கத்தில் பார்க்கலாம். அந்த நகரங்கள் தொடர்பான தங்குமிடங்கள், ரெஸ்டாரண்ட்கள், அருங்காட்சியகங்கள், ஷாப்பிங் மையங்கள் போன்ற தகவல்களையும் அலசி ஆராயலாம். பல காரணிகள் அடிப்படையில் வசதிகளையும், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்துகொள்ளலாம். இவை தவிர சுற்றுலா மையங்கள் பற்றிய தகவல்களைத் தேடும் வசதியும் உண்டு. நமக்கான பயணத் திட்டத்தை உருவாக்கிக்கொண்ட பிறகு அதைச் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.

பயணத் திட்டத்தை வரைபடத்தில் ஒரு பறவை பார்வையாகப் பார்க்கும் வசதியும் இருக்கிறது. நாம் செல்ல விரும்பும் நகரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடனும் பயணத் திட்டமிடலைப் பகிரலாம். இந்தச் சேவைக்கான ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். செயலி வடிவங்கள் இருக்கின்றன.

மேலும் தகவல்கள் அறிய: https://travel.sygic.com

பிளிங்க்

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். செயலி வடிவில் சேவை வழங்கும் பிளிங்க் மூலம் சுற்றுலாப் பயணத் திட்டமிடல் தொடர்பான ஆய்வைச் சுவாரசியமாக மேற்கொள்ளலாம். சுற்றுலா நகரங்கள் தொடர்பான தகவல்கள், அந்த நகரங்களுக்கான பயண வழிகாட்டி ஆகிய இரண்டுமே இந்தச் செயலியில் உள்ளன.

முதலில் சுற்றுலா செல்ல விரும்பும் நகரைத் தேர்வுசெய்ய வேண்டும். இடத்தைத் தேர்வு செய்ததுமே அந் நகரம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்துடன் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் தோன்றுகின்றன. தகவல்கள் ஒளிப்பட அட்டை வடிவில் தோன்றுகின்றன. எனவே பிடித்தமான இடம் எனில், அதை அப்படியே சேமித்துக்கொள்ளலாம். இல்லையெனில் அந்த அட்டையை விலக்கி விட்டு அடுத்த இடத்தைப் பார்க்கலாம்.

குறிப்பிட்ட இடத்தைத் தேர்வுசெய்ததுமே அந்த இடத்தின் சிறப்புகள் ஒளிப்படங்களுடன் பட்டியலிடப்படுகின்றன. அருகே உள்ள இடங்களும் பட்டியலிடப்படுகின்றன. அந்த இடத்துக்கான முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நகரமாக ஆய்வு மேற்கொள்ளலாம். இதன் வழிகாட்டி பகுதியும் விரிவாக உள்ளது.

https://www.blinktravel.guide/

டிரிப்டிரிப்

முன்னோட்ட வடிவில் உள்ள இந்த இணையதளமும் சுற்றுலாப் பயணங்களைத் திட்டமிட உதவுகிறது. இந்தத் தளம் மூலம் உங்கள் அடுத்த பயணத்தை அழகாகத் திட்டமிடலாம் எனச் சொல்கிறது. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பயணத் திட்டங்களைப் பார்வையிடும் வசதி, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை புக் செய்யும் வசதி ஆகிய சேவைகள் அடுத்த கட்டமாக அறிமுகமாக உள்ளன. பயணங்களைக் காட்சிரீதியாக உருவகப்படுத்தி பார்க்கும் வசதியும் உள்ளது. மொத்த பயணத்தையும் பலகைகளாக வரிசைப்படுத்தி பார்க்கலாம். புதிய செயலி என்பதால், இதன் பரிந்துரைகள் அத்தனை மகத்தானவை என்று சொல்ல முடியாது.

https://triptrip.io/

செக் அண்ட் பேக்

பயணத்துக்கான திட்டமிடல் போலவே பயணத்தின்போது எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்களும் மிகவும் முக்கியம். மிகவும் தேவையான பொருட்களை மறந்துவிட்டால், பயணத்தில் திண்டாட வேண்டியிருக்கலாம். இந்த நிலை வராமல், பயணத்துக்குத் தேவையான பொருட்களைப் பட்டியலிட உதவுகிறது செக் அண்ட் பேக் இணையதளம். இதில் பயணம் செல்லும் இடம் மற்றும் பயணத்தின் தன்மை ஆகிய விவரங்களைச் சமர்பித்தால் அந்தப் பயணத்துக்கான பொருட்களின் பட்டியலைப் பரிந்துரைக்கிறது. துணிமணிகளில் தொடங்கி உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள், மருத்துவச் சாதனங்கள், முதலுதவிப் பொருட்கள் என அனைத்தையும் பட்டியலிடுகிறது.

இந்தப் பட்டியல் தவிர பயண ஏற்பாடு தொடர்பான வழிகாட்டிக் கட்டுரைகளையும் வாசிக்கலாம். கப்பல் பயணம் உள்பட பலவிதமான வழிகாட்டிக் கட்டுரைகள் இருக்கின்றன.

http://checkandpack.com/

பிங்கி கிளாக்

சுற்றுலாப் பயணத்தின்போது சுற்றிப் பார்க்கும் இடங்கள் தவிர பயணத்தின் இடையே பொழுதைக் கழிக்க நிகழ்ச்சிகள் அல்லது புத்தகங்கள் தேவைப்படலாம். டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பினால் அதற்கான தகவல்களை பிங்கி கிளாக் தளம் மூலம் அறிந்துகொள்ளலாம். நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கத் தேவைப்படும் தகவல்களை இந்தத் தளம் தெரிவிக்கிறது. மேலும் பலவிதமான தகவல்களையும் இந்தத் தளம் அளிக்கிறது.

இதேபோல, பயணத்தின் இடையே வாசிப்பதற்கான புத்தகத்தைத் தேர்வு செய்யும் வகையில் எந்தப் புத்தகத்தை எவ்வளவு நேரத்தில் வாசிக்கலாம் எனும் தகவலை ரீடிங் லெந்த் தளம் பரிந்துரைக்கிறது. ஆங்கிலப் புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடிப் பார்க்கலாம்.

https://www.bingeclock.com/, / https://www.readinglength.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 secs ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்