சிட்டுக்குருவிகளும் ‘டிகிரி’ வாங்கட்டுமே...

By கே.கே.மகேஷ்

கல்லூரிக்குச் சென்று படிக்கிறார்கள்; ஜாலியாக இருக்கிறார்கள். அத்துடன் மிகப் பெரிய சமூக அக்கறை சார்ந்த விஷயங் களையும் சந்தோஷமாக நிறைவேற்று கிறார்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்.

இக்கல்லூரி மாணவர்களால் கடந்த ஜூன் 5-ம் தேதி தொடங்கப்பட்ட கிரீன் கிளப்பில் இப்போது 200 பேர் உறுப்பினர்கள். சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இந்த மாணவர்கள், கடந்த ஆண்டு மதுரை மாநகரில் சீமைக் கருவேல மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு இடங்களையும் சேர்த்து மதுரைக்குள் சுமார் 25 ஆயிரம் கருவேல மரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு, அந்த அறிக்கையை மாநகராட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அரசின் அனுமதி பெற்று, பொதுஇடங்களில் இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணியிலும் இறங்கினார்கள்.

கருவேல மரங்களை அகற்றும் பணியுடன், சிட்டுக் குருவிகளை அழிவிலிருந்து காக்கும் பணியிலும் இந்த மாணவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக குஜராத்தைச் சேர்ந்த மயூரி பவுண்டேஷனிடம் இருந்து 100 செயற்கைக் கூடுகளைப் பெற்று, ஆர்வமுள்ளவர்களின் வீடுகளுக்கும் இவர்கள் கொடுத்திருக்கின்றனர்.

“இப்போது அவர்களது வீடுகளில் எல்லாம் காலையில் துயில் எழுப்பும் இயற்கையான அலாரங்களாகக் குருவிகள்தான் திகழ்கின்றன. கூடல் நகர் சங்கீத் நகரைச் சேர்ந்த எங்கள் ஆசிரியை கேரன் ஜூடி வீட்டில் இப்போது 20 குருவிகள் வசிக்கின்றன. அட்டைப் பெட்டி, மரப் பெட்டி, மண் கலயம் என்று குருவி கூடு கட்டுவதற்குத் தேவையான செயற்கை கூண்டுகளைத் தொடர்ந்து மக்களுக்கு விநியோகித்து வருகிறோம்” என்கிறார் கிரீன் கிளப் உறுப்பினரான இனியன்.

அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடக் காரணமாக இருந்தது அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் தான். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.

“என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளில் இருந்தால், வேலைவாய்ப்பு அல்லது மேற்படிப்புக்கு உதவும் வகையில் மதிப்பெண்கள் கிடைக்கும். ஆனால், எந்த மதிப்பெண்ணையும் எதிர்பார்க்காமல் கிரீன் கிளப்பிற்காக எங்கள் மாணவர்கள் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள்” என்கிறார் கிரீன் கிளப் செயலாளரான பேராசிரியர் எம்.ராஜேஷ்.

“நிறைய மரங்களும், பறவைகளும் வாழ்கிற எங்கள் கல்லூரியில் சிட்டுக்குருவிகள் மட்டும் இல்லை. எனவே, இப்போது மரங்கள்தோறும் மண் கலயத்தால் ஆன கூண்டுகளைக் கட்டத் தொடங்கியுள்ளோம். குருவிகளைக் கவர்வதற்காக அதில் சிறு தானியங்களையும் போட்டுள்ளோம். அடுத்த முறை நீங்கள் வரும்போது அமெரிக்கன் கல்லூரியில் சிட்டுக் குருவிகளைப் பார்க்கலாம். அவையும் கல்லூரிக்கு வந்து டிகிரி வாங்கட்டுமே” என்கிறார் மாணவர் இனியன் சிரித்தபடியே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்