அனுபவம் புதுமை 19: நேரம் நல்ல நேரம்!

By கா.கார்த்திகேயன்

சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடிப்பதில் சிலர் மிகவும் கறாராக இருப்பார்கள். ஆனால், பலர் இதைச் சரியாகக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவார்கள். இதற்கு என்ன காரணம்? திட்டமிடுவதில் உள்ள பிரச்சினையா செயல்படுத்துவதில் உள்ள கோளாறா? உண்மையில் நேர மேலாண்மையைப் பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். 

காலையில் படுக்கையிலிருந்து எழுவதிலிருந்து இரவு தலையணைக்குத் தாவுகிறவரைக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற யோசனையை என்றாவது ஓடவிட்டிருக்கிறீர்களா? நேரத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் எனத் தீட்டுகிற திட்டத்துக்குப் பலன் எப்படி இருந்தது என்பதை அன்றைய இரவே மனத்தில் ஓடவிட்டு நம்மை நாமே எடை போட்டுக்கொள்ளலாம். இப்போது பேசப் போகிற விஷயத்தைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். நேர மேலாண்மைதான் அது. இந்தக் காலகட்டத்துக்கு மட்டுமல்ல; எல்லாக் காலகட்டத்துக்கும் அது தேவையானது.

சிலரிடம் 9 மணிக்கு மீட்டிங் என்று சொன்னால், சரியான நேரத்திலா ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று நினைத்துகொண்டு 9.30 மணிக்குத்  தலையைக் காட்டுவார்கள். இதை நேர மேலாண்மை மீதான அலட்சியம் என்று சொல்லலாம். உண்மையில், நேர மேலாண்மையை முற்றிலும் ஒதுக்கியவர்கள் யாரும் இல்லை.

உதாரணமாக அடுத்த வாரம் வரப்போகும் ஆதர்சனமான நாயகனின் படத்தைப் பார்க்கவோ, கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவோ  நண்பர்களுடன் சேர்ந்து 20 டிக்கெட்டை முன்பதிவு செய்வோரைப் பார்த்திருப்பீர்கள். அதே ஆட்கள்தான் தினமும் செய்தித்தாள் படிக்கக்கூட நேரம் இல்லை என்று அலுத்துக்கொள்வார்கள்.

சினிமா பார்க்க, அரட்டை அடிக்க எனத் தற்காலிகச் சந்தோஷத்துக்காக நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பவர்கள், வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய நிரந்தர வெற்றிக்கு நேரத்தை நிர்வகிக்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிற எவரும் செய்கிற முதல் செயல் இதுதான். நேரத்தைச் சரியாக நிர்வகித்து, தடுமாற்றங்களைக் கடந்து வெற்றியைச் சந்தித்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதரைப் பற்றி பேசினால் உங்களுக்குப் புரியும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அந்த நகரின் முக்கிய வீதியில் இருந்த பிரம்மாண்டமான துணிக் கடையில் நுழைந்தேன். கடையின் நேர்த்தி, பலதரப்பட்ட துணி ரகங்கள், விற்பனையாளரின் அணுகுமுறை என எல்லாமும் ஈர்த்தன. நிறுவனரைப் பார்த்துப் பாராட்டலாம் என நினைக்கிற அந்தக் கணத்தில் கணீரென ஒரு குரல்.

 “புரபசர் சார் வாங்க...” எனப் புன்சிரிப்புடன் ஒருவர் எதிர்ப்பட்டார். அடுத்த சில விநாடிகளில் அவர் யாரென்று கண்டுபிடித்துவிட்டேன்.

 “ஹே... தமிழரசன் எப்படி இருக்க” என்று கையைக் குலுக்கியபடி கேட்டேன்.

“நல்லா இருக்கேன் சார். நான்தான் இந்தக் கடையின் நிறுவனர்” என்று சொன்னபோது பெருமிதமாக இருந்தது.

அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். தமிழரசன் 8 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவன். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். சுயதொழில் முனைவோராகத்தான் ஆவேன் எனப் படிக்கிற காலத்தில் நம்பிக்கையோடு இருந்தவன். அதனாலேயே கோடைக்கால விடுமுறையில் கிடைத்த வேலைக்குச் செல்ல ஆயத்தமாக இருப்பான்.

கல்லூரியில்கூட குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்துமுடிப்பான். ஒரு நாளும் எதற்காகவும் ‘எக்ஸ்கியூஸ்’ கேட்டதேயில்லை. ஒவ்வொரு வேலையையும் நேரம் ஒதுக்கி செய்வான். மாலையில் 4 மணிக்கு அவனைப் பார்க்க வேண்டுமென்றால், மைதானத்தில் பார்க்கலாம். 5 மணிக்கு என்றால், சரியாகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பான். இயந்திரமயமாக இருந்திருப்பானோ என்று நினைத்துவிடாதீர்கள். நேரத்தின் அருமை பெருமையைப் புரிந்தவன்.

இப்போது தமிழரசனை ஒரு தொழிலதிபராகப் பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.

 “நீ நினைத்த மாதிரியே ஜெயிச்சுட்டே” என்று வாழ்த்தினேன்.

 “இந்த நிலைமைக்கு வர நிறைய உழைக்க வேண்டியிருந்திச்சு” என்று சாதாரணமாகச் சொன்னான். ஆனால். அவன் அருகே இருந்த மேலாளர் பல விஷயங்களைச் சொன்னார்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கிற தொழில் என்பதால், இதில் ஒவ்வொரு நாளுமே முக்கியம்தான். தினமும் யாரை எப்போது பார்ப்பது, புதிய ரகங்களைக் கொண்டுவர வெளியூர்களில் பேசுவது, அந்தப் புதிய ரகங்களைக் கடையைத் திறந்தவுடனேயே வாடிக்கையாளர்களுக்காக அடுக்கி வைப்பது, தினமும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவது எனத் தினமும் குறித்த நேரத்தில் செய்வதை எழுதப்படாத விதியாகவே அந்த நிறுவனத்தில் வைத்திருக்கிறான். தொழிலாளர்களுக்கும் அதைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எந்த நேரத்தில எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு ஒட்டிவைத்திருக்கிறான்.  அதை மாறாமல் செயல்படுத்துவதிலும் முனைப்பாக இருக்கிறான். ஒரு நிமிடத்தைக்கூடத் தேவையில்லாமல் வீணாக்கியதில்லை என்று தமிழரசனின் பெருமையை அவருடைய மேலாளர் சொன்னபோது மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.

ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம், எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் எனப் பிரித்துப் பார்த்தால்,  எதற்குமே தீர்வு கிடைத்துவிடும். ஒரு நாளை நாம் முழுமையாகத் திட்டமிட வேண்டும். இந்த இடத்தில்தான் நாம் நேரமேலாண்மை குறித்துச் சிந்திக்க வேண்டும். நேர மேலாண்மை என்பது நம்முடைய நேரங்களுக்காகத் திட்டங்களை ஒழுங்குபடுத்திச் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு முறை. அதைச் சரியாகப் பின்பற்றுவோர் எந்தவொரு வேலையிலும் ஜொலிக்க முடியும். அதற்கு தமிழரசன் ஓர் உதாரணம்.

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்