ஒரே செயல்; ஓஹோன்னு புகழ்!

By எம்.சூரியா

குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர், தனது நிறுவனப் பணியாளர்களுக்கு கார், சொந்த வீடு போன்றவற்றைக் கொடுத்து அசத்திய கதையெல்லாம் இந்தியாவில் நடந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடமையைச் செய்த 20 வயது இளைஞருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர், தனது காரையே பரிசாக வழங்கி பாராட்டியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம், சற்றே வித்தியாசமும் ஆச்சரியமும் கலந்தது. அப்படி என்ன செய்தார் அந்த இளைஞர்?

வால்டர்  கெர் (Walter Carr) என்ற அந்த இளைஞர், அலபாமாவில் ஹோம்வுட் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் வால்டருக்கு, பெல்ஹாப்ஸ் மூவர்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீடு, அலுவலகங்களை இடம் மாற்றும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவும் நிறுவனம் இது.  வால்டரின் வீடு இருக்கும் இடத்திலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டுக்கு செல்ல உதவ வேண்டும் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் நாள் பணி.

ஆனால், துரதிருஷ்டவசமாக, வால்டர் பயன்படுத்திவந்த கார், திடீர்க் கோளாறால் செயல்படாமல் போனது. இரவில் ஏற்பட்ட இந்தத் திடீர் பாதிப்பால், காலையில் வேலைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாதே எனக் கலங்கினார் வால்டர். இதைச் சமாளிக்க ஒரே வழி, இரவில் நடந்து சென்று சம்பந்தப்பட்ட இடத்தை அடைய முடிவு செய்தார். இதற்காக நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய வால்டர், 10 கிலோமீட்டர்வரை நடந்தே சென்று விட்டார். ஆனால், அதற்கு மேல் அவரால் நடக்க முடியவில்லை. சாலையோரம் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற போலீசார் அவரைச் சந்தேகத்துடன் விசாரித்தனர்.

walter 2jpgவால்ட்டர்

ஆனால், விஷயத்தைப் புரிந்துகொண்ட பிறகு அந்த இளைஞருக்கு உதவ போலீசாரும் முன் வந்தனர். உடனடியாக வால்டரைத் தங்களுடைய காரில் அழைத்துக்கொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். இதனால் குறிப்பிட்ட இடத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாகவே சென்று சேர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டின் கதவைத் தட்டினார். அந்த வீட்டின் எஜமானி ஜென்னி லேமி, போலீசாருடன் வந்த வால்டரைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும், அவரது நள்ளிரவு கதையைக் கேட்டு மனம் கலங்கினார்.

வால்டரின் கடமை உணர்வைக் கண்டு அவருக்கு உதவ விரும்பினார் ஜென்னி லேமி. ‘Gofundme’ என்ற பெயரில் இணையதளத்தில் வால்டரின் கதையைக் கட்டுரையாக எழுதினார். வால்டரின் காரைச் சீரமைக்கத் தேவையான நிதியை அளிக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லூக் மார்க்லினுக்கும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை அனுப்பினார்.

இதை ஃபேஸ்புக்கில் பார்த்து ஆச்சரியமடைந்த லூக் மார்க்லின், ஜென்னிக்கு உடனடியாகப் பதிலும் அனுப்பினார். ஹோம்வுட் பகுதியில் இருக்கும் பிரபல உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு வால்டரை அழைத்து வரச் சொன்னார். வேலை முடிந்த பிறகு வால்டரை, தனது காரில் அழைத்துக் கொண்டு லூக் மார்க்லின் கூறிய உணவகத்துக்கு சென்றார் ஜென்னி.

அங்கே சென்றதும் வால்டருக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம் காத்திருந்தது. தான் பணியாற்றும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து  ஆச்சரியத்தில் மூழ்கினார். முந்தைய இரவில் அவருக்கு உதவி செய்த காவலர்களும் அங்கே வந்திருந்தனர். அனைவரும் மதிய உணவைத் திருப்திகரமாக முடித்தனர். வால்டர் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது. வீட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்தவரை வாசல்வரை வந்து வழியனுப்பிய லூக் மார்க்லின், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக தனது விலை உயர்ந்த காரின் சாவியைக் கொடுத்தார்.

லூக் மார்க்லினின் இந்தத் திடீர் செயலால் கண்கலங்கினார் வால்டர். அவரைத் தேற்றவே லூக்குக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. “ஒரு நிறுவனத்தில் முதல் நாளில் வேலைக்குச் செல்லும்போது தாமதமாகச் சென்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மனம் தளராமல் பல கிலோமீட்டர் தூரம் நடந்துவந்த இளைஞருக்கு, காரைப் பரிசளித்தது மகிழ்ச்சி” என்று கூறினார் லூக் மார்க்லின்.

கடமையிலிருந்து தவறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த வால்டருக்கு, முதல் நாளிலேயே இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்ததால், அமெரிக்கா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

49 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்