இளமை நெட்: ஃபேஸ்புக்குக்கு மாற்று தேடுகிறீர்களா?

By சைபர் சிம்மன்

ஃபேஸ்புக் அனலிடிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணைய வாசிகளை யோசிக்க வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்கள் வெளியிடுவதை வாழ்க்கையின் நேர்த்திக்கடன் போல் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கலாம். ஆன்லைன் மூலம் நட்பு வலை விரிக்க உதவும் சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக், புதிய நண்பர்களைப் பெறுவதிலும், பழைய நண்பர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் கைகொடுக்கிறது. சிறிய குழுவாக வர்த்தகம் செய்வதில் தொடங்கி, சமூக இயக்கங்களை ஒருங்கிணைப்பதுவரை பலவிதங்களில் ஃபேஸ்புக் பயன்படுகிறது. அதே நேரத்தில் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடப்பது நேரத்தை வீணாக்குவதோடு, மிகைப் பகிர்வுப் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மிகைப் பகிர்வுக் கவலையோடு இப்போது தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சமும் சேர்ந்திருக்கிறது. இதன் விளைவாக ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமோ ஃபேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஏற்பட்டிருந்தால் கவலையை விடுங்கள். ஃபேஸ்புக்குக்கு மாற்றாக எண்ணற்ற இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:

எல்லோ

ஃபேஸ்புக் மீது கூறப்படும் மிகப் பெரிய புகார், அது பயனாளிகள் பகிரும் தகவல்களைச் சேகரிப்பதோடு, அவர்களின் இணையச் சுவடுகளை விடாமல் பின்தொடர்ந்து விளம்பர வலை விரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். இத்தகைய விளம்பர நோக்கில்லாத சமூக வலைப்பின்னல் சேவை தேவையெனில் ‘எல்லோ.கோ’ இணையதளத்தை நாடலாம். எல்லோ என்றவுடன் எங்கே கேட்ட பெயராக இருக்கிறதே என நினைக்கலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்குக்கு மாற்று எனும் கோஷத்துடன் அறிமுகமாகி, கவனத்தை ஈர்த்த சேவைதான் எல்லோ. ஆரம்ப கட்ட பரபரப்புக்குப் பிறகு எல்லோவைப் பலரும் மறந்துவிட்டாலும், அந்த சேவை சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறது. விளம்பர நோக்கில்லை, பயனாளிகளின் தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம் என எல்லோ அளிக்கும் உறுதிமொழி இப்போது ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலும் கலைஞர்கள், படைப்பாக்க வேலையில் உள்ளோரால் பயன்படுத்தப்படும் எல்லோ, ஃபேஸ்புக்கைவிட மாறுபட்ட அனுபவத்தை அளிக்கலாம்:

https://ello.co/

டயஸ்போரா

எல்லோவுக்கு முன்பாகவே ஃபேஸ்புக்கின் தகவல் சேகரிப்பை விமர்சித்து உருவாக்கப்பட்ட சேவை டயஸ்போரா. பிரைவசி, சுதந்திரம், மையமற்ற தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய சமூக வலைப்பின்னல் சேவை என டயஸ்போரா தன்னை வர்ணித்துக்கொள்கிறது. ஃபேஸ்புக் அளவுக்குப் பரந்து விரிந்தது அல்ல என்றாலும், இந்தத் தளம் அளிக்கக்கூடிய ஹாஷ்டேக் அடிப்படையில் விருப்பமான கருத்தாக்கங்களைப் பின்தொடர்வது உள்ளிட்ட வசதி புதுமையான அனுபவத்தை அளிக்கலாம்: https://diasporafoundation.org/

இதேபோல செயலி வடிவிலான ராப்டர், குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கித் தொடர்புகொள்ள வழி செய்கிறது:

https://www.raftr.com/?

ஃபேஸ்புக்கின் அங்கமான ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமுக்கு மாற்று தேவை என உணர்ந்தால், வெரோ செயலியை முயலலாம். இன்ஸ்டாகிராம்போல அல்காரிதம் தேர்வுசெய்யும் ஒளிப்படங்களை முன்னிறுத்தாமல் இயல்பான முறையில் நண்பர்கள் பகிரும் ஒளிப்படங்களைப் பார்க்க வழி செய்வதாகக் கூறும் வெரோ, அண்மைக் காலத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறது:

VERO.co

செய்திகளைப் பெற

ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கும் அதன் நியூஸ்ஃபீட் சேவை பரிச்சயமானது. சமூக ஊடகத் தளத்திலேயே செய்திகளைத் தெரிந்துகொள்வது வசதியானதாகக் கருதப்பட்டாலும் இது எத்தனை வில்லங்கமானது எனப் புரியத் தொடங்கியுள்ளது. ஒருவரின் நட்பு வலையில் உள்ள நண்பர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு ஏற்ப செய்திகளை முன்வைக்கும் நியூஸ்பீட் வசதி மாற்று கருத்தாக்கச் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைத்து, ஒருவித செய்திக்குமிழில் சிக்க வைப்பதாகவே கருதப்படுகிறது.

உண்மையில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முதன்மை வழியாகச் சமூக வலைப்பின்னல் சேவைகளைக் கருதுவது பாதகமானது. செய்திகளைத் தேர்வுசெய்யும் உரிமை பயனாளிகள் கையிலேயே இருக்க வேண்டும். இதற்காகச் செய்திகளைத் தேடிச் செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என நினைத்தால், செய்தித் தளங்களை அணுகலாம். வைரலாகும் புதுயுகச் செய்திகளைப் பின்தொடர நினைத்தால் ‘பஸ்பீட்’ தளத்துக்குச் செல்லலாம். மேலும், இணையத்தின் முதல் தகவல் திரட்டியாகக் கருதப்படும் ‘டிக்.காம்’ தளமும் செய்திகளை அறிந்துகொள்வதற்கான சிறந்த இடமாக அமைகிறது. (DIGG.com)

செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, நண்பர்கள் பின்தொடரும் செய்திகள் மீதும் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் ‘நஸல்’ சேவை ஏற்றதாக இருக்கும்:

http://nuzzel.com/

செய்திகளைத் தெரிந்துகொள்ள பிளிப்போர்ட் செயலியையும் நாடலாம். வெளியுறவுக் கொள்கை முதல் சமையல் குறிப்புவரை பலவிதத் தலைப்புகளில் இந்தத் தளம் செய்திகளை வழங்குகிறது. இந்தச் செயலிக்கான இணையதளத்தில் முதல் முறை நுழையும்போது பயனாளிகளின் ஆர்வத்தைக் கேட்டு, அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. https://flipboard.com/

குழுக்கள் வசதி

ஃபேஸ்புக் தளத்தில் நமக்கான தனிப் பக்கங்களை உருவாக்கி, அதை நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபேஸ்புக்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாக இதைக் கருதலாம். ‘குரூப்மீ’ (https://groupme.com/en-US/) இதே போன்ற வசதியை அளிக்கிறது. இதைத் தவிர ‘கூகுள் குரூப்ஸ்’, ‘யாஹு குரூப்ஸ்’ வசதியையும் பரிசீலிக்கலாம்.

படைப்பாக்கம் சார்ந்த செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் எனில், தங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ள ‘பிஹான்ஸ்.நெட்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தளத்தில் பகிரப்படும் ஓவியங்கள், வரைகலைச் சித்திரங்கள், வடிவமைப்புகள் உள்ளிட்ட ஆக்கங்கள் உற்சாகம் தருபவை:

https://www.behance.net/

ஃபேஸ்புக் என்றில்லை, எல்லா வகையான சேவைகளுக்கும் இணையத்தில் மாற்று இருக்கிறது. குறும்பதிவு சேவையான ட்விட்டரில் அதிருப்தி என்றால், புதுவிதமான குறும்பதிவு சேவையான ‘மாஸ்டோட’னை (https://mastodon.social/about) முயலலாம். கூகுளைத் தவிர இன்னொரு தேடியந்திரம் தேவையெனில், தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பதில்லை என உறுதி அளிக்கும் தேடியந்திரமான ‘டக்டக்கோ’வை (https://duck duckgo.com/) பயனாளிகள் முயன்று பார்க்கலாம்.

இவ்வளவு ஏன், மாற்று சேவைகளைப் பரிந்துரைப்பதற்கென ஓர் இணையதளம் இருக்கிறது: https://alternativeto.net/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்