குரு - சிஷ்யன்: சோஷியல் டாக்டர்!

By டாக்டர் ஆ.காட்சன்

அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிசெய்யத் தொடங்கியிருந்தேன். முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியிலேயே இருப்பார்கள். இரண்டாமாண்டு மாணவர்கள் காலைப்பொழுதில் மருத்துவக் கல்லூரியிலும் பிற்பகலில் மருத்துவமனையிலும் பயில்வார்கள்.

2005-ல் நான் சந்தித்த மாணவர்தான் அமரேசன். கருத்த நிறம், குண்டு உருவம், நிறைந்த சிரிப்பு, நல்ல உயரம் இவைதாம் அமரேசனின் அடையாளங்கள். உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் பாடங்களை முடித்துவிட்டு, கல்லூரியைத் தாண்டி மருத்துவமனையில் முதல் அடி வைத்தார். அப்போதே எல்லாவற்றையும் உடனே கிரகித்துக்கொள்ளும் ஆர்வமும் உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் பெற்றிருந்தார் அமரேசன்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். வெகு சிலரே மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களில் மற்றொரு வர்க்கம் உண்டு. எல்லாப் பாடங்களிலும் 200-க்கு 200 வாங்கி கட்ஆப் மதிப்பெண் பெற்றும், நுழைவுத்தேர்வில் சற்றுப் பின்தங்கியதால், சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் இடமின்றி, செங்கல்பட்டுக்கு மருத்துவம் பயில வந்திருப்பார்கள். அவர்களில் ஒருவராகவே அமரேசனும் இருந்தார்.

படித்து முடித்து உள்உறைவிடப் பணிபுரியும் ஆண்டிலேயே இரவுப் பணியும் செய்தாக வேண்டிய குடும்பச் சூழல் அமரேசனுக்கு ஏற்பட்டது. எல்லா நாட்களிலும் எந்த முக வாட்டமுமின்றி இரவுப் பணிகளையும் அதே உற்சாகத்தோடு செய்துவந்தார்.

அவரிடம் பழகிய 4 வருடங்களில் அவருக்கு நான் கற்பித்ததைவிட அவரிடம் நான் கற்றுக்கொண்டதே அதிகம். ஏனெனில், என் பிள்ளைகள் அப்போது பள்ளிப் பருவத்தில் இருந்தார்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, பெற்றோர் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், பிள்ளைகளை எப்படி அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பது, தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது, எந்த பேனாவில் எழுதினால் விரைவாக எழுத முடியும் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் அமரேசன் வழியாகவே கிடைத்தன. இன்றுவரை ட்ரைமேஸ் பேனாதான். அமரேசன் கூறியபடி விரைவாக வேகமாக எழுதக்கூடிய பேனா.

2008-ல் இளநிலை மருத்துவம் முடித்தபின், அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க விரும்பினார் அமரேசன். ஆனால், கல்விக் கட்டணம் பயமுறுத்தியது. அந்த ஏமாற்றத்தைப் படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார். பஞ்சட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் உண்டு உறைவிடப் பள்ளியில் மருத்துவ அலுவலரானார். அங்கிருந்த பிள்ளைகளுக்கெல்லாம் உற்ற நண்பரானார். அவர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் இருந்தார்.

பின் அங்கு பணிபுரிந்தபடியே மருத்துவ ஆலோசனை மையத்தைத் தொடங்கினார். ஏழை, எளிய மக்களுக்கும் பின்தங்கிய மக்களுக்கும், உதவ மருத்துவ சேவை மையம் ஒன்றையும் தொடங்கினார். 2010-ம் ஆண்டு மேற்படிப்பு படித்தே ஆக வேண்டும் என்ற ஓயாத ஆர்வத்தால், எம்.டி. மருந்தியல் படிப்பை 2013-ல் முடித்தார். மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமும் நிறைவேறியது.

வேலம்மாள் உண்டு உறைவிடப் பள்ளியில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றியபோதே பள்ளிச் சுகாதாரம், தன் சுகாதாரம், சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கல்வியைப் பலருக்கும் கற்பித்தார். அது மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளிலும் செய்தார்.

பல தொலைக்காட்சிகளில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு, உடற்பருமன் விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்பு குறித்தேலாம் பேசிவருகிறார் அமரேசன்.

வசதி இல்லாதபோது செய்ய வேண்டும் என்று எண்ணியதை, வசதி வந்தபிறகும் பலர் செய்ய மாட்டார்கள். அவ்வாறு இல்லாமல் அமரேசன் அனைத்தையும் செய்துகாட்டினார். அது என்ன தெரியுமா? டவ்டனிலுள்ள ( Doveton) உள்ள மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் பள்ளியில் உள்ள ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார். இவருக்கு ஓர் ஆண் குழந்தையும் உண்டு. எனினும், இன்னொரு குழந்தையைத் தத்தெடுத்து, அதற்கான கல்வித்தொகை, இதர செலவுகள் அனைத்தையும் செலுத்தினார். பள்ளிக்கும் நன்கொடை கொடுத்தார். இவை மட்டுமல்லாமல், பல சேவைகளைத் தன்னுடைய அறக்கட்டளை மூலம் செய்கிறார்.

002 நர்மதாலெட்சுமி

எத்தனையோ மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் சந்திக்கிறோம்; பிரிகிறோம். பலருக்கு நாம் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம்; சிலர் மட்டுமே நமக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். கற்றுக்கொடுக்க ஒவ்வொரிடமும் ஒரு பாடம் இருக்கிறது அல்லவா?

சில நேரம் நீறுபூத்த நெருப்புப்போல நம்மிடம் கற்ற மாணவர்களின் சில நினைவலைகள் நம்மைத் தாலாட்ட வருகின்றன. என் மாணவரின் சமுதாயப் பணிகள் மேலும் வளர்வதற்கு என் வாழ்த்துகள் எப்போதுமுண்டு. அவரை நான் வெறும் மருத்துவர் என்று கூற மாட்டேன். ஒரு சமுதாய மருத்துவரென்றே பெருமிதத்தோடு கூறுவேன்.

ஆசிரியர் மாணவராகவும், மாணவர் ஆசிரியராகவும் அமைந்த உறவே எனக்கும் அமரேசனுக்கமான உறவு.

கட்டுரையாளர்: மருத்துவக் கல்வி இணைப் பேராசிரியர்,
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்