சமூக ஊடக உலா: தாக்குப்பிடிக்குமா ஹலோ?

By எம்.சூரியா

பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பு, இந்தியர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்ட சமூக வலைத்தளம் ஆர்குட். இந்த 2 நிறுவனங்களும் ஒரே காலகட்டத்தில்தான் தொடங்கப்பட்டன. ஆனால், தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆர்குட், 2014-ல் மூடப்பட்டது. இதற்கு ஃபேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சியே காரணம். ஆனால், ஆர்குட் நிறுவனத்தை உருவாக்கிய புயுக்கோக்டனுக்குச் சமூக வலைத்தளம் மீதான ஆர்வம் குறையாமலே இருந்தது. மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக ‘ஹலோ’ என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு பரீட்சார்த்த முறையில் அறிமுகமானது ‘ஹலோ’. அதன் பீட்டா வெர்ஷன் 8 மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக ஹலோ செயலி இந்தியாவில் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது, ‘இந்தியர்களுக்கு ஏற்ற சமூக வலைத்தளமாக ஹலோ திகழும்’ என நம்பிக்கையுடன் கூறினார் புயுக்கோக்டன். அவர் கூறியதுபோல இந்தியாவில் ஹலோ செயலி சாதித்ததா?

helloகிடுக்கிப்பிடி விருப்பங்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், பயனாளர்களுக்குத் தேவையில்லாத விஷயங்களை வழங்கி நேரத்தை வீணடிப்பதாகச் சொன்ன புயுக் கோக்டன், ஹலோ செயலியில் பயனாளர்கள் விரும்பும் தகவல்கள் மட்டுமே கிடைக்கும் என்று சொன்னார். அதற்கு ஏற்றாற்போல், ஒருவர் ஹலோ செயலியைப் பதிவிறக்கம் செய்தால், அவருக்கு விருப்பமான 5 விஷயங்களை ஹலோ வழங்கியது.

‘பெர்சனா’ என்றழைக்கப்படும் அந்த விஷயங்களில் உணவு, சுற்றுலா, விளையாட்டு, செய்திகள், அலங்காரம் போன்று நமக்கு பிடித்தவற்றைத் தேர்வு செய்துகொள்ள முடியும். ஆனால், ஒருபோதும் 5 விருப்பங்களுக்கு மேல் ஒரு பயனாளரால் வேறு எதையும் தேர்வு செய்ய முடியாமலும் போனது.

பிறகு எப்போது வேண்டுமானாலும் இந்த ஐந்து விருப்பங்களை மாற்றி, வேறு 5 விருப்பங்களை பயனாளர் மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தியர்களுக்காகவே இந்த பெர்சனாவில் பாலிவுட் ஃபேன், கிரிக்கெட் ஃபேன் என்ற 2 பிரிவுகளை ஹலோ செயலி சேர்த்தது. ஆனால், அளவில்லாத விருப்பங்களைக் கொட்டி, அதிலிருந்து தேடிக் கண்டுபிடிப்பதையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஹலோ செயலி புரிந்துகொள்ளாமல் போனதால் சறுக்கல் தொடங்கியது.

ஃபேஸ்புக் தளத்தில் உள்ளது போல போலி கணக்காளர்களையும் அவதூறு கருத்துகளையும் ஹலோ செயலி மக்களிடம் பரப்பாது என்றும் புயுக் கோக்டன் சொன்னார். ஆனால், இந்தச் சிறப்பம்சம் இந்தியர்களைப் பெரிய அளவில் கவராமல் போனது.

வரவேற்பு இருக்குமா?

ஹலோ செயலியைப் பதிவிறக்கம் செய்த உடனே அதில் இருக்கும் எல்லா வசதிகளும் பயனாளருக்குக் கிடைக்காது. ஹலோ அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்தி, அதில் பல குழுக்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையிலேயே கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டன. என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவே மாதக்கணக்கில் தவமாய்த் தவமிருக்க வேண்டும். இப்படி இருந்தால், நெட்டிசன்களை எப்படிக் கவர முடியும்?

ஹலோ செயலி அறிமுகமானபோது பிற வலைதளங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் என்று நம்பிக்கையூட்டப்பட்டது. ஆனால், அப்படிச் சொன்ன விஷயங்கள் எவையும் இந்தியர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. பல்வேறு விஷயங்களில் பின்தங்கியதால், ஆர்குட்போல ஹலோவும் விரைவில் காலாவதியாகும் என்று சைபர் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தொடக்கத்தில் பயனாளர்களைப் பெரியளவில் கவராத ஃபேஸ்புக், இன்று உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது. மக்களைக் கவரக்கூடிய அம்சங்களை அடுத்தடுத்து மேம்படுத்திக்கொண்ட காரணத்தால்தான், இன்று ஃபேஸ்புக் உலகளவில் பிரபலமாகியிருக்கிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்குக்குப் போட்டியாக இருக்கும் என அறிமுகம் செய்யப்பட்ட ஹலோ, நெட்டிசன்களுக்குப் பிடித்தமான வகையில் மாறினால், சமூக வலைத்தள உலகில் தாக்குப்பிடிக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

16 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

20 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்