ஆஷா போஸ்லே: கனவில் இசைக்கும் குரல்

By திரை பாரதி

செப்டம்பர் 8: ஆஷா போஸ்லே 84-வது பிறந்ததினம்

வட இந்தியாவிலிருந்து வந்த எத்தனையோ இனிய குயில்கள் தமிழ்த் திரையிசையை கவுரவம் செய்திருக்கின்றன. ஆனால் நம் கனவில் வந்து இசைப்பதுபோன்று தனது 84 வயதிலும் இறகால் வருடும் தன் இளமைக் குரலைத் தக்க வைத்திருக்கும் ஒரு கலைஞர் இன்னும் பாடிக்கொண்டிருக்க முடியுமா? அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இசைப்பதை நிறுத்த மனமில்லாத அந்த முதுபெரும் இசைப்பறவையான ஆஷா போஸ்லேவுக்கு இன்று 84-வது பிறந்ததினம்.

ஆஷாஜி என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் போஸ்லேவுக்கு கடந்த பிறந்தநாளின்போது ஒரு கவுரவம் செய்யப்பட்டது. அரை நூற்றாண்டுக்கு முன் அவர் பாடியிருந்த காஷ்மீரி பாடல்களை சர்காத் என்ற தொண்டு நிறுவனம் ஒரு இசை ஆல்பமாக தொகுத்து வெளியிட்டதுதான் அந்த கவுரவம். அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஷ்மீரி எழுத்தாளர் பிரான் கிஷோர் கால், ஆஷா அன்று காஷ்மீரி பாடல்களைப் பாடியது பற்றி பசுமையாக நினைவு கூர்ந்திருக்கிறார்.

விரைவாகக் கற்கும் திறன்

“அது1966-ம் ஆண்டு கோடை காலம். காஷ்மீர் வானொலி நிலையத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரி கவிஞர்கள் ரசூல் மிர் மற்றும் ஷமஸ் ஃபக்கீர் ஆகியோரின் கவிதைகளைக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான பாடல்களை போஸ்லே பாடினார். 1850-களின் மத்தியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அக்கவிஞர்கள் இருவரும் காதல் கவிதைகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள். அப்போது காஷ்மீர் வானொலி நிலையத்தின் அழைப்பை ஏற்று, பேட்டி அளிக்க வந்திருக்கிறார் ஆஷா.

பேட்டி முடிந்தபின் எங்கள் வானொலிக்காக சில காஷ்மீரி பாடல்களைப் பாட முடியுமா என்று கேட்கப்பட்டது. கொஞ்சமும் தயங்காமல் ஒப்புக்கொண்டார். வானொலி நிலையம் செல்லும் முதல்நாள் தாள் ஏரியில் பயணித்த ஆஷா, அங்கே படகோட்டிகள் பேசிக்கொண்டதைக் கேட்டது தவிர, காஷ்மீரி மொழி பற்றி எதுவும் அறியாதவர். ரசூல், ஃபக்கீர் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றை வானொலி ஊழியர் வாசிக்கக்கேட்டு மராத்தியில் அதனுடைய அர்த்தத்தைக் கேட்டறிந்தவர், விரைவில் ஒலிப்பதிவுக்கு வர ஒப்புக்கொண்டார். சில ஒத்திகைகளிலேயே காஷ்மீரி வார்த்தைகளின் உச்சரிப்புகளைக் கற்றுக்கொண்ட போஸ்லே, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

ஒவ்வொரு பாடலும் ஒரே டேக்கில் பாடல் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு பாடல்களின் வழியே காற்றில் கலந்த அவரது குரல் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு எங்கும் அதன் பனிக் காற்றை மேலும் குளிர்வித்தது. ஒலிப்பதிவு முடிந்தவுடன் போஸ்லே தனக்குத் தரப்பட்ட ஊதியத்தை அங்கேயே வாத்தியக் கலைஞர்களுக்குப் பிரித்துக்கொடுக்கச் சொன்னார். ஆஷாவின் குரல் மட்டுமல்ல, அவரது இதயமும் ஈரமுடையது” என்று கூறியிருக்கிறார்.

தனித்த சுவடுகள்

காஷ்மீரி என்றில்லை, பத்துக்கும் அதிகமான இந்திய மொழிகளில் சுமார் 12 ஆயிரம் பாடல்களைப் பாடி சாதனை படைத்திருக்கும் ஆஷா போஸ்லே, தமிழில் தனித்த சுவடுகளைப் பதித்திருக்கிறார். 1987-ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘செண்பகமே…செண்பகமே…’ பாடல்தான் அவரது தமிழ் அறிமுகப்பாடல். அந்தப் பாடலை ஆண்களையும் லயித்துப் பாடச் செய்தது ஆஷாவின் குரல்.

அதைத் தொடர்ந்து ‘மீரா’ படத்தில் ‘ஓ…பட்டர்பிளை…’, ‘புதுப்பாட்டு’ படத்தில் ‘எங்க ஊரு காதலைப் பத்தி…’, ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே…எங்கெங்கே...’, ‘இருவர்’ படத்தில் ‘வெண்ணிலா…’, ‘ஹே ராம்’ படத்தில் ‘ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்…’, ‘சந்திரமுகி’ படத்தில் ‘கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்...’ என ஒரு கால இடைவெளியில் தொடர்ந்து பாடி வந்திருந்தபோதும் தமிழர்களின் காதுகளில் இடைவிடாமல் ரீங்கரித்துக்கொண்டேயிருக்கிறது அவரது தமிழ்க் குரல்.

வறுமையை விரட்டிய திறமை

மராத்திய இசை மேதையாகக் கொண்டாடப்படும் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கரின் வாரிசாக மகாராஷ்டிர மாநிலத்தில் கோர் (Goar) எனும் ஊரில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் நாள் பிறந்தவர் ஆஷா. இளமையில் வறுமையை எதிர்கொண்ட ஆஷா தனது 9-வது வயதில் தந்தையை இழந்தார். பிழைப்பு தேடி ஆஷா போஸ்லேயின் குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது.

மூத்த சகோதரி லதா மங்கேஷ்கருடன் இணைந்து, ஆஷா நாடகங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் தன் கலைத்திறமையால் வறுமையை விரட்டத் தொடங்கினார். மராட்டிய மொழியில் ‘மாஜா பல்’ என்ற படத்துக்காக 1943-ம் ஆண்டு திரையிசைப் பின்னணிப் பாடகராக தனது பயணத்தைத் தொடங்கிய ஆஷாவின் சாதனைகள் இந்திப் பட இசை வரலாற்றை நிறைத்துக்கொண்டு நிற்பவை.

மண வாழ்க்கை

பாலிவுட்டின் இசைப் பிதாமகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஆர்.டி. பர்மனின் முதல் வெற்றிப் படமான ‘தீஸ்ரி மஞ்சில்’ என்ற படத்தில் பாடிய பாடல்கள் பெரும் ஹிட்டடித்தன. ஆர்.டி. பர்மனோடு தொழில் முறையில் தொடங்கிய ஆஷாவின் நட்பு, அவருடன் திருமண உறவாகவும் மலர்ந்தது.

1960 - 1970-களில் புகழின் உச்சம் தொட்டு, 1995-ம் ஆண்டு ரசிகர்களை வசப்படுத்திய ‘ரங்கீலா’ திரைப்படத்தையும் கடந்து மங்காத புகழுடன் வலம் வருகிறார். சாமானிய தமிழ் ரசிகனுக்கு ‘செண்பகமே செண்பகமே’ என்ற ஒரு பாடலே போதும் இந்த இசைக்குயிலை நினைவில் என்றும் நினைவில் நிறுத்திட!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்