திரை வெளிச்சம்: கறுப்புப் பணம்தான் நிஜ ஹீரோ!

By திரை பாரதி

ரூபாய் நோட்டுகளில் ஐநூறும் ஆயிரமும் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் கிடுகிடுத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம். கறுப்பு வெள்ளைக் காலம் முதலே கறுப்புப் பணத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படியொரு பந்தம். திரைப்படத் தயாரிப்பில் கறுப்புப் பணத்தின் ஆதிக்கத்தைக் கண்ட கவியரசு கண்ணதாசன் கொதித்துப்போய் எடுத்த படம் ‘கறுப்புப் பணம்’. அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எந்த ஹீரோவும் நடிக்கத் தயங்கிய அந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்து அசத்தினார். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் இயக்குநர் ஷங்கர் தனது ‘அந்நியன்’ படத்தை எழுதி இயக்கினார் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அந்தப் படத்தில் “ஒரு பைசா கொள்ளையடிச்சா தப்பில்ல. ஒரு ஒரு பைசாவா ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிச்சா தப்புதானே?” என்ற வசனம் இடம்பெற்றது. ஆனால் “ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் புழங்கும் இடமாகத் தமிழ் சினிமா இருக்கிறது” என்கிறார்கள் திரைப்படத் தயாரிப்பில் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற சீனியர் புரொடக்‌ஷன் மேனேஜர்கள் பலர்.

“பிரபலமான ஒரு நிறுவனத்துல 25 வருஷம் வேலை செஞ்சேன். என்னோட தயாரிப்பு நிறுவனம் பாரம்பரியத்துக்குப் பேர்போன நிறுவனம்தான். ஆனால் நாங்க ஒரு படத்துக்கு பூஜை போடுறதுல ஆரம்பிச்சு படப்பிடிப்பு முடிஞ்சு பூசணிக்காய் உடைக்கிறவரைக்கும் ப்ளாக் மணி இல்லாமல் எதுவும் நடக்காது. எப்படிச் சொல்றேன்னா, இங்க தினசரி ஷூட்டிங் நடத்துற செலவை ‘பெர் டே எக்ஸ்பன்ஸு’ன்னு சொல்வோம். எனக்குத் தெரிஞ்சு ரூ.25 ஆயிரமா இருந்த ஒருநாள் படப்பிடிப்பு செலவு, இன்னைக்கு 7 லட்சம்வரைக்கும் படத்தோட பட்ஜெட்டைப் பொறுத்து செலவாகுது. இதுல முக்கியமான செலவு லைட்மேன், புரொடக்‌ஷன் பாய் தொடங்கி ஜூனியர் ஆர்டிஸ்ட், டிரைவர்கள்வரைக்கும் சினிமா தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் அன்றாட பேட்டாவா கொடுக்குற சம்பளம். இது எல்லாமே வவுச்சர்ல கையெழுத்து வாங்கிட்டுக் கொடுக்கிற கேஷ் பேமண்ட்தான். அப்புறம் வாகனங்களுக்கு கொடுக்குற வாடகை, பெட்ரோல் டீசல் செலவு எல்லாமே வவுச்சர் அயிட்டம்தான். இந்த வவுச்சர் பேமண்டுகள் எல்லாத்தையுமே டபுள், இல்லண்ணா ட்ரிபிளா ரெடி பண்ணச் சொல்லிடுவார் எங்க ஆடிட்டர். இப்படித்தான் படப்பிடிப்புச் செலவை ஏத்திக் காட்டுவோம். இப்போ ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் தாயரிச்சுக் கொடுக்கிற முறையில இது இன்னும் அதிகமாக இருக்கு” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத புரொடக்‌ஷன் மேனேஜர் ஒருவர்.

பாதி அது மீதி இது

படப்பிடிப்புச் செலவினங்களில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் விளையாட்டு ஒருபுறம் இருக்க, நட்சத்திரங்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தில் புழங்கும் கறுப்புப் பணம்தான் அதிகம் என்கிறார் மற்றொரு சீனியர் புரடெக்‌ஷன் மேனேஜர். இவர் பல நட்சத்திரங்களுக்கு கால்ஷீட் மேனேஜராகவும் பணியாற்றியவர். “ஹீரோயின்களுக்குக் கொடுக்கிற சம்பளம் பெரும்பாலும் ஒயிட்லதான் இருக்கும். இன்னைக்கும் பல ஹீரோயின்கள் கோடியில சம்பளம் வாங்குறாங்கன்னு தெரியுது. ஆனால் ஹீரோக்கள் சம்பளம் பக்கத்துலகூட அவங்க வரவே முடியாது. அதனால ஹீரோயினுக்குப் பெரும்பாலும் இன்கம்டாக்ஸ் கட்டிட்டே சம்பளம் கொடுப்பாங்க. ஆனால் ஹீரோக்களுக்கு அப்படி கிடையாது. ஒரு பிரபலமான ஹீரோவுக்கு இன்னைக்கு 30 கோடி ரூபா சம்பளம். அதுல பாதி கணக்குல வர்ற பணமாக டிடி எடுத்துக் கொடுக்கணும். மீதியில ஒரு பகுதிய கறுப்பு பணமாகக் கொடுக்கணும், அதையெல்லாம் அவங்க பாதுகாப்பா பதுக்கி வைச்சு அதை வெள்ளையாக்கப் பல தில்லாலங்கடி வேலைகள் செய்வாங்க. அதெல்லாம் பெரிய கதை. சினிமால கறுப்புப் பணத்துல சம்பளம் வாங்காத நடிகர்களை விரல் விட்டு எண்ணிடலாம்” என்கிறார்.

இன்று கதாநாயகர்கள் பலர் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கித் தங்கள் படங்களைத் தாங்களே தயாரிக்கத் தொடங்கியிருப்பதற்குக் காரணமும் அவர்களைத் தேடி வரும் கறுப்புப் பணம்தான் என்று காதைக் கடிக்கிறார் இவர்.

முன்பணம் என்ற முகமுடி

கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், க்யூப் பதிப்பு போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் ஈடுபட்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு கறுப்புப் பணத்தைக் கையாள முடியாத நிலையில் திரையுலகம் இருக்கிறது. ஆனால், திரையிடலில் பெரும் கறுப்புப் பணம் புழங்குகிறது என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத விநியோகஸ்தர். “பிரபலமான நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அதை ரிலீஸுக்குத் தருவதாகக் கூறி திரையரங்க உரிமையாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொள்வது என்னைப் போன்ற பல விநியோகஸ்தர்களின் வழக்கம். இதற்காக, கறுப்புப் பணத்தை மட்டுமே வட்டிக்கு விடும் வட்டிக்காரர்களிடம் (இந்த வகை ஃபைனான்சியர்கள் பல தயாரிப்பாளர்களுக்குப் பணத்தை எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கொட்டுவார்கள்) பணம் வாங்கி அவர்கள் எங்களிடம் தருகிறார்கள். இதற்குப் பெரும்பாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதில்லை. இந்தப் பணத்தைத்தான் நாங்கள் முன்பணமாகக் கொடுத்து ஏரியா உரிமையை வாங்குகிறோம். இப்படிச் செய்யும்போது கறுப்புப் பணத்துக்காக இரண்டு விதமான ஒப்பந்தங்களை நாங்கள் போட்டுக்கொள்வது சகஜம்தான்” என்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பும் படங்களைத் திரையிடும்போது டிக்கெட் விலையைக் காட்டிலும் கணிசமாகக் கூட்டி விற்கப்படுவதிலும் கறுப்புப் பணம் விளையாடுவதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். “இப்படிப்பட்ட படங்களின் திரையிடலில் அதிக ரேட்டுக்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் வழியே கிடைக்கும் கேளிக்கை வரிக்குள் சிக்காத லாபம் அத்தனையும் கறுப்புப் பணம்தான். ஆனால் இவை அத்தனையிலும் தயாரிப்புத் தரப்பு, விநியோகம், திரையிடல் ஆகிய மூன்று தரப்பிலும் இணக்கம் இருப்பதால் கறுப்புப் பணமே சினிமாவில் முன்னணி ஹீரோவாகக் கோலோச்சுகிறது” என்று கூறுகிறார்கள் விநியோக மட்டத்தில் பலரும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க எத்தனை வழிகள் வந்தாலும் பிலிம் ரோல் இல்லாத கேமராவைக் கண்டுபிடித்ததைப் போல அதற்கும் ஒரு வழியை கண்டறிந்துவிடுவார்கள் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள் முறையான கணக்குகளைப் பராமரித்து நேர்மையாகப் படமெடுத்துவரும் தயாரிப்பாளர்கள் பலர். ஆனால் இவர்களுக்கு நேர்மாறாக, தற்போது கறுப்புப் பணத்தைக் கத்தை கத்தையாகக் கைவசம் வைத்திருக்கும் திரைப்படத் துறையில் இருப்பவர்களின் நிலை, தேளிடம் கடி வாங்கிவிட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களின் நிலையைப் போன்றதுதான் என்று சமூக வலைதளங்களில் தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்