மாற்றுக்களம்: வரலாற்றைக் களவாடியவர்கள் - ரேகை (ஆவணப்படம்)

By த.நீதிராஜன்

பிறவியிலேயே இவன் திருடன்தான் என்று ஒரு குழந்தையைப் பார்த்து உங்களால் சொல்ல முடியுமா? ஆனால், 1871 முதலாக இன்றுவரை பல லட்சக்கணக்கான மக்களை அத்தகைய பார்வையோடு பார்க்க வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அந்தக் கொடுமையை இன்னும் ஏதோ ஒரு வகையில் தொடர்பவர்களாகவே நாமும் இருக்கிறோம்.

இந்தியச் சமூகத்தில் சில இனக்குழுக்கள் இயல்பான காவல் பணியைச் செய்தன. சில கட்டுப்பாடு இல்லாத பறவைகளைப்போல நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தன. இப்படிப்பட்ட பல்வேறு வகையான 500- க்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஆங்கிலேயர்கள் ‘பிறவியிலேயே குற்றம் செய்பவர்கள்’ எனப் படிப்படியாக அறிவித்தனர். அவற்றில் தமிழகத்தின் 68 இனக்குழுக்களும் அடக்கம். இந்த இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இரவுகளில் அவர்கள் காவல் நிலையத்தில் வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று இழிவுபடுத்தப்பட்டனர். அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

இயல்பிலேயே சுதந்திரமான இந்த மக்கள் தமிழகத்தில் தங்கள் மீது ஏவப்பட்ட இந்த அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததே ‘பெருங்காமநல்லூர் எழுச்சி’.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழகம் வெளிப்படுத்திய வீர உணர்வின் அடையாளங்களில் முக்கியமானது இந்த எழுச்சி. தங்களை இத்தகைய இழிநிலைக்கு ஆட்படுத்த முடியாது என்று எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்களை 1920 ஏப்ரல் 2 அன்று துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கியது ஆங்கிலேய அரசு. மாயக்காள் என்னும் வீராங்கனை உள்பட 16 பேர் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். பிற்பாடு பெருநெருப்பாக எழுந்த சுதந்திரப் போராட்டத்தில் நெய்யாகச் சொரியப்பட்ட புரட்சியாளர்களின் ரத்தத்தில் இதுவும் ஒன்று.

இந்த எழுச்சியை மையமாக வைத்து அருமையான ஆவணப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர், பத்திரிகையாளர் தினகரன் ஜெய்.

குற்றப் பரம்பரையினர் சட்டம் என்றும் ரேகைச் சட்டம் என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்ட இந்த ‘குற்றப் பழங்குடிகள் சட்டம்’ பற்றிய வரலாற்று ஆவணம் இது. 1911 -ம் வருடம் அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டதை உணர்ச்சி பொங்க விளக்குகிறது இது.

குற்றப் பழங்குடிகள் சட்டம் மாறுவேடம் போட்டுக்கொண்டு சுதந்திர இந்தியாவிலும் உயிரோடு உள்ளது. ‘குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள் சட்டம்’ என்ற இன்றும் அது பெயரில் நீடிக்கிறது. வட இந்தியாவில் எழுத்தாளர் மகசேசெ விருதுபெற்ற மகாஸ்வேதா தேவி உள்ளிட்டோரால் இத்தகைய ஆவணப்படப் படைப்புகள் உருவாகின. தமிழகத்திலும் இத்தகைய பணிகள் பெருகுவது அவசியமான ஜனநாயகப் பணி.

சரவண கணேஷின் இசை நம்மை பல இடங்களில் நெகிழ வைக்கிறது. ஒளி, ஒலிப் பதிவுகளைச் செய்த டெரிக் மற்றும் சுரேஷ் பாராட்டுக்குரியவர்கள். பாண்டியராஜின் படத் தொகுப்பும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. கலைப் பணிகளைச் செய்துள்ள தெய்வா முத்திரை பதித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த இந்தப் புரட்சியாளர்கள்தான் தங்களின் தியாகத்தின் மூலம் வரலாற்றைத் தங்களின் கைப்பிடிக்குள் களவாடிக்கொண்டவர்கள். இந்தியச் சமூகம் கொண்டாட வேண்டியவர்கள். இந்திய சமூகத்தை முழுமையாக ஜனநாயகப்படுத்துகிற பணியில் இத்தகைய ஆவணப்படங்கள்தான் படிக்கட்டுகள். விவாதங்களின் வழியாக இளைய தலைமுறையினர் நமது சமூகத்தைப் புரிந்துகொள்ள இத்தகைய படங்கள் நிறைய தேவை.

இத்தகைய ஆவணப்படங்கள் ஒரு இனக்குழுவின் கண்ணோட்டமாக அமைவது ஆரம்ப கட்டத்துக்குச் சரியாக அமையலாம். ஆனால் ஒட்டுமொத்தப் புரிதலுக்கு அது உதவாது. குற்றப் பரம்பரை இழிவு சுமத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இனக்குழுக்களின் துன்பங்களைத் துடைப்பதற்கான அழைப்பாக அவை இருந்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளாகும். இல்லையென்றால் சாதியப் புராணங்களின் கடலில் கரையும் பெருங்காயமாகிவிடும். எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி தருகிற பேட்டியில் அவர் உணர்ச்சிவசப்படுவது உரத்த இசையில் தூக்கிக்காட்டப்படுவது மறைமுகமாகச் சாதி உணர்வைக் கெட்டிப்படுத்த உதவலாம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் மாண்பை மீட்கிற போராட்டத்தை பலப்படுத்த அனைத்துச் சமூக மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் தான் உண்மையான சமூக விடுதலை இருக்கிறது. அடுத்தடுத்த ஆவணப்படங்களில் இயக்குநர் இந்த அம்சத்திற்கு மேலும் அதிக அழுத்தம் தருவார் என எதிர்பார்க்கலாம்.

‘ரேகை’ குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911
ஆவணப்படம்
எழுத்து - இயக்கம்: தினகரன் ஜெய்
தயாரிப்பு: சி. தீனதயாள பாண்டியன்
ஜெகமதி கலைக்கூடம்
விலை-100
தொடர்புக்கு: 9524983177

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

க்ரைம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

18 mins ago

தொழில்நுட்பம்

18 secs ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்