‘விலங்கு’ புகழ் ‘கிச்சா’ சொன்ன ரகசியம்!: பிரசாந்த் பாண்டிராஜ் பேட்டி

By செய்திப்பிரிவு

தன் அதிகார எல்லைக்குள் நடக்கும் குற்றங்களைக் களமாகக் கொண்டு வட்டார மண் வாசனையுடன் உருவாகியிருக்கிறது ‘விலங்கு’ இணையத் தொடர். அடுத்தது என்ன எனக் கவரும்விதமாக, ஓடிடி பார்வையாளர்களிடம் வெகுவான வரவேற்பைப் பெற்றிருக்கும் ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரை இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘புரூஸ்லீ’படத்தை ஏற்கனவே இயக்கியவர். அவரிடம் பேசினோம்.

எப்படி உருவாச்சு ‘விலங்கு’?

‘புரூஸ்லீ' படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான முயற்சியில இருந்தேன். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்கிட்ட ஒரு லைன் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. கதையா எழுதிட்டு வரச் சொன்னார். எழுதினேன். ஆனா, அது நாலு மணி நேரத்துக்கான கதையா வந்தது. பிறகுதான் அதை வெப் சீரிஸா பண்ணலாம்னு அவர் சொன்னார். அப்படி உருவானதுதான் ‘விலங்கு’.

உண்மைக் கதையா?

சில சம்பவங்கள் உண்மையா நடந்தது. சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசும்போது, இன்னும் கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கிடைச்சது. அப்புறம் நான் கேள்விபட்ட விஷயங் களையும் சேர்த்து இந்தக் கதையை பண்ணினேன். முழு உண்மை சம்பவமும் இல்ல, முழு கற்பனைக் கதையும் இல்லை

பிரசாந்த் பாண்டிராஜ்

அந்த அப்பாவி ‘கிச்சா’ இயல்பா நடிச்சிருக்கார்...

ஆமா. அவர் என் அக்கா வீட்டுக்காரர்தான். பெயர் ரவி. அந்த கேரக்டருக்கு சினிமாவில் முகம் காட்டாத ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணினேன். லுங்கியோட குத்த வச்சு உட்கார்ந்து அவர் டீ குடிக்கிற அழகை பார்த்தேன். இவர்தான் சரியான ஆள்னு முடிவு பண்ணிட்டேன். முதல்லயே வசனங்களை கொடுத்து மனப்பாடம் பண்ண வச்சு, பயிற்சிக் கொடுத்து நடிக்க வச்சோம். இந்த தொடர் வந்த பிறகுதான் அவர் ஓர் உண்மை ரகசியத்தைச் சொன்னார். 25 வருஷத்துக்கு முன்னால அவர் சென்னைக்கு வந்ததே நடிக்கத்தானாம். வாய்ப்புக் கிடைக்காம, சில படங்கள்ல கூட்டத்துல ஒருத்தரா நடிச்சிருக்கார். பிறகு ஆட்டோ வாங்கி ஓட்டத் தொடங்கினார். அவர் ஆசை இப்ப நிறைவேறியிருக்கு. அவர் நடிப்பை எல்லோரும் பாராட்டுறாங்க.

தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கதைக்குள்ள வந்தது எப்படி?

சினிமாத்தனம் அதிகம் இல்லாமதான் இந்த தொடரை பண்ண நினைச்சேன். அதுக்கு ஏற்ற மாதிரி நடிகர்களைத் தேர்வு செய்தேன். ‘தர்மபிரபு’ இயக்குநர் முத்துக்குமரன், இந்த கதைக்கு விமல் சரியா இருப்பார்னு சொன்னார். விமல், கதையை கேட்டுட்டு கண்டிப்பா நடிக்கிறேன்னு தயாரிப்பாளர்ட்ட பேசினார். இதுவரை காமெடி கேரக்டர்ல பார்த்த பால சரவணனை, கொஞ்சம் அதிரடியான கேரக்டர்ல நடிக்க வச்சேன். டிஜிபி கேரக்டருக்கு புதுசா ஒரு முகம் தேவைப்பட்டது. தயாரிப்பாளர் மதன் சார், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சரியா இருப்பார்ன்னு சொன்னார். அவருக்கு போலீஸ் டிரெஸ் போட்டுப் பார்த்தா, நான் நினைச்ச மாதிரியே இருந்தார். அப்படித்தான் அவர் வந்தார். இந்த தொடர்ல எஸ்.பியா நடிச்சவர், முதல் ஷெட்யூல் முடிஞ்சதும் கரோனாவால இறந்துட்டார். இரண்டாவது ஷெட்யூல்ல, இன்ஸ்பெக்டரா நடிச்ச ஆர்.என்.ஆர்.மனோகர் இறந்துட்டார். பிறகு எஸ்.பி. பேச வேண்டிய வசனத்தை டிஜிபிக்கு கொடுத்தோம்.

ஆபாச வசனங்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கே, வெப் சீரிஸ்னா அது முக்கியமா?

நான் குறைவாதான் பேச வச்சிருக்கேன். ஒரு குற்றவாளியை, ‘சார், போங்க, வாங்க’ன்னு எந்த போலீஸும் மரியாதையா பேசமாட்டாங்க. அவங்க கோபத்தை, கெட்ட வார்த்தையாதான் வெளிப் படுத்துவாங்க. இருந்தாலும் இதுல குறைவாகத்தான் வச்சிருக்கேன். ஒரே ஒரு கேரக்டர் மட்டும்தான், இதுல அப்படி பேசும். இருந்தாலும் அடுத்ததுல அதை சரி பண்ணிடுவேன்.

வெப் தொடர்னாலே கிரைம் திரில்லர்தானா.. வேற கதைகள் பண்ணக் கூடாதா?

அப்படிலாம் இல்லை. நான் நேட்டிவிட்டியோடதான் இந்த கிரைம் திரில்லர் கதையை சொல்லியிருக்கேன். இதைதான் பண்ணணும், அதைத்தான் பண்ணணும்னு எதுவும் இல்லை. ஒடிடி தளங்களும் அப்படி எந்த கட்டுப்பாடுகளும் வச்சிருக்கிறதா தெரியல. ஆனா, சில பேர், கிரைம் திரில்லர் கதைதான் ஒடிடி தளங்களுக்கு தேர்வாகும்னு சொல்றாங்க. அது உண்மை இல்லைன்னு நினைக்கிறேன். நேட்டிவிட்டியோட சேர்ந்த கதைங்கறதாலதான் ‘விலங்கு’ ஒடிடிக்கு தேர்வாச்சு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

கல்வி

15 mins ago

தமிழகம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

41 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்