ஆறாது சினம் - திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை.

அதிரடியான என்கவுன்ட்டர் காட்சியுடன் தொடங்கிறது படம். ஒரு ரவுடிக் கும்பலைத் தனது குழுவுடன் வேட்டையாடுகிறார் அருள்நிதி. காட்சிப்படுத்தலில் எந்தப் புதுமையும் இல்லாத நீளமான என்கவுன்ட்டர் காட்சி எரிச்சலை ஏற்படுத்தினாலும் அடுத்து வரும் காட்சிகளில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் அறிவழகன். அந்த என்கவுன்ட்டர் கதாநாயகனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போட்டுவிடுகிறது என்பதும் அதன் தொடர்ச்சியாக நாயகனின் தற்போதைய நிலைமையும் தெளிவான லாஜிக்குடன் திரையில் விரிகின்றன.

மர்மக் கொலைகளைக் கொண்டிருந்தும் முதல் பாதி தொய்வடைகிறது. புலனாய்வு என்ற பெயரில் ரோபோ சங்கர் அடிக்கும் கூத்துகளும் நாயகனின் சோகத்துக்குக் கொடுக்கப்படும் கூடுதல் அழுத்தமும் இதன் காரணங்கள். எனினும் புலனாய்வு தொடங்கியதும் படம் வேகமெடுக்கிறது. களத்தில் இறங்கிப் புலனாய்வு செய்யும்போதும் அருள்நிதி மது பாட்டிலுடன் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் விசாரணையை அவர் எடுத்துச்செல்லும் விதமும், கொலைகளில் ஒளிந்திருக்கும் ஒற்றுமையைக் கண்டறியும் விதமும் படத்தை விறுவிறுப்பாக்கிவிடுகின்றன.

குற்றவாளியை நெருங்குவதற்கான காட்சிகளும் கொலைகாரனின் பின்னணியை நிறுவும் காட்சியும் இரண்டாம் பாதியைத் தூக்கி நிறுத்துகின்றன. மொபைல் போன்களால் இளைஞர்கள் வாழ்வில் ஏற்படும் விபரீதங்களையும் திரைக்கதை தொட்டுச் செல்கிறது.

தர்க்கபூர்வமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் புலனாய்வில் ஓட்டை இருக்கிறது. குற்றவாளி தனியாகவே இயங்குகிறார். இறந்து இரண்டு நாள் ஆன நிலையில் உள்ள சடலத்தை தனி ஒரு ஆளாகத் தூக்கிச் செல்வதும் நம்பும்படி இல்லை.மது ஏற்படுத்திய பலவீனத்தால் குற்றவாளி கண் முன்னே இருந்தும் அவனை நாயகனால் பிடிக்க முடியாமல் போவதைக் காட்டிய விதம் குடிக்கு எதிரான நச்சென்ற காட்சி. கிறிஸ்தவ சமயப் பின்புலத்தைப் திரைக்கதையில் பயன்படுத்திய விதம் கச்சிதம்.

ஜீத்து ஜோசப் மலையாளத்தில் இயக்கிய ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்தான் ஆறாது சினம். மூலப்படத்தின் திரைக்கதையிலிருந்து இயக்குநர் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. காட்சி மொழியில் தனது முத்திரைகளைப் பதிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், தேர்ந்துகொண்ட கதைக்கு நியாயம் செய்யத் தவறவில்லை.

முகத்தில் சோகத்தையும் கையில் மது பாட்டிலையும் சுமந்தபடி படம் முழுவதும் வரும் அருள்நிதியின் நடிப்பு படத்துக்குத் தேவையான தீவிரத்தை வழங்குகிறது. கண்ணெதிரில் தன் குடும்பம் கொல்லப்படுவதைப் பார்ப்பது, குற்றவாளியைத் துரத்திப் பிடிக்க முடியாத இயலாமை ஆகிய காட்சிகளில் அவர் நடிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் உள்ளது. ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், துளசி, ஐஸ்வர்யா தத்தா, சார்லி, கௌரவ் ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமன் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். பாடல்கள் சுமார் ரகம். ‘உண்ணற்க கள்ளை’ என்ற மதுவுக்கு எதிரான பாடலை திருக்குறள்களைக் கொண்டு உருவாக்கியிருப்பதற்குக் சிறப்புப் பாராட்டுகள். தொடக்க என்கவுன்ட்டர் காட்சியில் தூங்கி வழியும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, அதன் பிறகு சுதாரித்துக்கொள்கிறது. படத் தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் முதல் பாதியில் இன்னும் கறாராகச் செயல்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற குறைகளை மீறி, அனைத்துத் தரப்பினருக்குமான த்ரில்லர் படமாக ஈர்க்கிறது ஆறாது சினம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்