ஓடிடி உலகம்: வெள்ளந்தி மக்களின் சினிமா

By எஸ்.எஸ்.லெனின்

பால்கே இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, ஆர். நடராஜ முதலியாரின் ‘கீசக வதம்’, ஜே.சி.டேனியல் இயக்கிய ‘விகத குமாரன்’ என இந்திய மொழிகளில் ‘முதல்’ திரைப்படங்கள் உருவான கதைகள் தனித்துவமானவை. இன்றைக்கும் ஒரு திரைப்படத்தில் விரியும் கதையைவிட, அந்தத் திரைப்படம் உருவான பின்னணிக் கதைகள் காலக்கிரமத்தில் பேசுபொருளாவதுண்டு.

அப்போது அந்தத் திரைப்படத்தை பின்தள்ளி அது உருவான கதை வியப்பூட்டும். அப்படி, குக்கிராமம் ஒன்றின் வெள்ளந்தி மக்கள் ஒன்றுகூடி உருவாக்கும் முதல் சினிமா குறித்த கதையை நகைச்சுவை கலந்து சொல்கிறது ‘சினிமா பண்டி’(சினிமா வண்டி) என்கிற தெலுங்குத் திரைப்படம். கடந்த வாரம் இந்த சுயாதீன சினிமா நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான சில தினங்களில் ‘இந்தியாவின் டாப் 10’ பட்டியலில் நுழைந்திருக்கிறது.

குடிநீர், சாலைகள், மின்சாரம் என அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் ஆந்திர கிராமம் ஒன்றைச் சேர்ந்தவன் வீரா. அருகியுள்ள நகரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் அவனுக்கு, ஊர் குறித்த நினைவுகள், கழுத்தை நெறிக்கும் கடன், வயிற்றுப்பாடு, குழந்தையின் படிப்பு என பலவித கவலைகள் வட்டமிடுகின்றன. ஒருநாள், பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற விலையுயர்ந்த கேமரா, வீராவுக்குத் தன்னுடையப் பிரச்சினைகளைத் தீர்க்க வந்த வரமாகத் தெரிகிறது.

குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றியடைவது தொடர்பான செய்தித் தொகுப்பை தொலைக்காட்சியில் பார்க்கிறான். கையில் கிட்டிய கேமராவைக் கொண்டு மெகா ஹிட் திரைப்படம் ஒன்றை எடுத்து, அதன் மூலம் தன்னுடையப் பிரச்சினைகளை தீர்ப்பதென்று அப்பாவியாய் தீர்மானம் எடுத்துக் கொள்கிறான். உடனடியாக அமெச்சூர் ஒளிப்படக் கலைஞனாக வலம்வரும் தன்னுடைய நண்பன் கணபதியை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்கிறான். பின்னர் இருவரும் சேர்ந்து சிகை திருத்துநரான இன்னொரு இளைஞனை நாயகனாகவும், பள்ளி மாணவியை வழிமறித்து நாயகி என்றும் குத்துமதிப்பான படக்குழு ஒன்றை உருவாக்குகிறார்கள். தொடக்கத்தில் அவர்களின் முயற்சிக்குக் குடும்பத்திலும் ஊரார் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுகிறது. ஊரின் பிரச்சினைகளைக் களையவும் இந்தத் திரைப்பட வருமானம் உதவும் என்கிற படக்குழுவின் பொதுநோக்கம் அறிந்த பின்னர் ஊரே கூடி சினிமா தேர் இழுக்க முன்வருகிறது.

வயல்வெளி, பொட்டல்காடு என உள்ளூரில் படப்பிடிப்பு களைகட்டுகின்றது. சினிமாவை ரசிப்பதற்கு அப்பால் அதன் திரைமொழி, காட்சிகளின் தொடர்ச்சி, ஷாட் பிரிப்பு உள்ளிட்ட அடிப்படை தொழில்நுட்பங்கள் எதுவும் அறியப்பெறாத இளைஞர்கள், தங்கள் தவறுகளில் இருந்தே பாடம் கற்றுத் தேறுகிறார்கள். படிப்படியாக தாங்கள் முடிவு செய்த கதையை கேமராவில் பதிந்து திருப்தி கொள்கிறார்கள். சண்டைக் காட்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது பாதியில் மழை மேகங்கள் திரள, அடுத்த விநாடியே மழைக்காகக் காத்திருந்த பாடல் காட்சிக்குத் தாவுகிறார்கள். மாட்டு வண்டியே கிரேன் ஆகிறது. வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து சக நடிகர்கள் தேர்வாகிறார்கள். விஷயதாரியான ஒரு பொடிப்பையன் உதவி இயக்குநராகிறான். பிழைப்பு கெடக்கூடாதென புலம்பும் புதிய கதாநாயகி, படப்பிடிப்பு இடைவேளையில் சாலையோரம் அமர்ந்து காய்கறி விற்று முடிக்கும் வரை படக்குழு தேவுடு காத்திருக்கிறது.

இன்னொரு திசையில், தனது கேமராவைத் தொலைத்த யுவதி அதைத் தேடி வருகிறாள். தங்கள் சினிமாவின் ஆகப்பெரும் முதலீடான கேமராவை தொலைத்த கிராமம் சோகத்தில் ஆழ்கிறது. நிறைவாக அந்த கிராமத்தினர் ஒன்று கூடி உருவாக்கிய திரைப்படம் என்னவானது என்பதை கலகலப்பும், நெகிழ்வும் கலந்து சொல்கிறது ‘சினிமா பண்டி’.

திரைப்பட உருவாக்கம் என்பது கலைஞனிடமிருந்து கைநழுவி, வர்த்தக வலையில் சிக்கித் தவிக்கும் காலத்தில், சினிமாவுக்காக தம் கனவுகளைத் துரத்தும் எளிய மக்களின் கதை ரசிக்க வைக்கிறது. இதில் தோன்றும் பெரும்பாலானவர்கள் கிராமப் பின்னணியிலான அறிமுக நடிகர்கள். ‘மகேஷ்பாபு’ பாதிப்பில் அலப்பறை கூட்டும் நாயகன் ‘மரிதேஷ் பாபு’, நாயகியாகும் காய்கறி விற்கும் துடுக்குப் பெண், நேசம் பரிமாறும் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, மகள் என ஒவ்வொரு கதாபாத்திரத்திரமும் படத்துக்கு சுவாரசியம் கூட்டியிருக்கின்றன. வேறு பல தருணங்களில் நெகிழவும், முறுவலிக்கவும், கலங்கவும் வைக்கிறார்கள். உச்சமாய் ‘குத்த’ வைத்தபடி படப்பிடிப்புத் தளத்தில் காட்சியளிக்கும் கதாசிரியர் பெரியவரும், அவர் திருவாய் மலரும் ஒரே இடமான கடைசிக் காட்சியும் ரகளையாக ரசனை சேர்த்திருக்கின்றன.

ஒரே சாயல் கொண்ட காட்சிகளில் கதை சிக்கியிருக்கும் உணர்வை தவிர்க்காதது, நகைச்சுவை காட்சிகளின் நீளம் என சொல்வதற்கு சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் ‘சினிமா பண்டி’ அக்கட பூமிக்கு அப்பாலும் அரிதான முயற்சி. விகாஷ் வசிஸ்தா, சந்தீப் வாராணசி, சிந்து சீனிவாசா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை பிரவீன் கன்ட்ரெகுலா இயக்கி உள்ளார். பிரபல ‘ஃபேமிலி மேன்’ வலைத்தொடரை உருவாக்கி, இயக்கிய ‘ராஜ் - டி.கே’ நண்பர்கள் ‘சினிமா பண்டி’யைத் தயாரித்துள்ளனர்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

52 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்