அஞ்சலி: விவேக் (1961-2021) - சமூகத்தின் கலைஞன்!

By செய்திப்பிரிவு

அகால மரணங்கள் எப்போதும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலரை நாம் என்றைக்கும் நம்முடன் இருக்கப்போகிறவர் என்று கற்பனை செய்துவைத்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று நம்முடன் இல்லை என்றாகும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் அளவிடவே முடியாது. விவேக்கின் மறைவு அத்தகையதே.

கோவில்பட்டியில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த விவேகானந்தன்,திறமையாளர்கள் பலரைப் பட்டை தீட்டிய கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்ட வைரம். விவேக் என்னும் பெயர் மாற்றத்துடன் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987) திரைப்படத்தில் கதாநாயகி சுகாசினியின் தம்பிகளில் ஒருவராக அறிமுகமானார். கேபியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ விவேக்கை நகைச்சுவை நடிகராகக் கவனிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து 1990-களின் முற்பகுதியில் கதாநாயகனின் நண்பர் குழுவில் ஒருவராகப் பல திரைப்படங்களில் இடம்பெற்ற விவேக், தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கவனம் ஈர்த்தார். ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ (1996) போன்ற சில படங்களில் நாயகனுக்கு இணையான, இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லத்தக்கக் கதாபாத்திரங்களில் நடித்தும் பாராட்டுகளைப் பெற்றார்.

சிந்தனையைத் தூண்டிய பகடி

1990-களில் பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் வளர்ந்துவிட்ட விவேக், பாரதி கண்ணன் இயக்கத்தில் பிரபு கதையின் நாயகனாக நடித்த ‘திருநெல்வேலி’ (2000) திரைப்படத்தில் சமூக அவலங்கள் குறித்த பகடிகள் நிரம்பிய நகைச்சுவைக் காட்சிகள் மூலம் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவைக்காக கவனிக்கப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் முற்போக்கு கருத்துகளை நகைச்சுவை வழியே வழங்கி என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா வரிசையில் வைக்கப்பட வேண்டிய நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். அதை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி விவேக்குக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்னும் பட்டத்தைக் கொடுத்தார்.

அடுத்த 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். ஆண்டுக்கு 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். சினிமா சுவரொட்டிகளில் இவருடைய முகம் இடம்பெறுவது சிறிய படங்களுக்கான மிகப் பெரிய விளம்பரமானது. விவேக்குக்காகவே டிக்கெட் வாங்கி திரையரங்கத்துக்குள் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறியதேயில்லை. கடைசி 5-6 ஆண்டுகள் தனிப்பட்ட இழப்புகளால் ஏற்பட்ட விரக்தியாலும் மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் மீது அதிக கவனம் செலுத்தியதாலும் விவேக் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே தவிர அவருடைய பிரபல்யமோ ரசிகர்களின் எண்ணிக்கையோ அதிகரித்தனவே தவிர குறையவில்லை.

முன்னோடி முற்போக்காளர்

கிராமங்களைக் கள்ளங்கபடமற்ற வெள்ளந்தித்தனம் மிக்க மனிதர்கள் வாழும் நந்தவனமாக தமிழ் சினிமா காட்சிப்படுத்திவந்த நிலையில், ‘திருநெல்வேலி’ (2000) படத்தில் விவேக்கின் நகைச்சுவைப் பகுதி கிராமங்களின் இன்னொரு முகத்தைக் காட்டியது. கிராம மக்களிடையே நிலவும் பிற்போக்குச் சிந்தனைகள், மூடநம்பிக்கைகள், சாதிய, ஆணாதிக்கப் பெருமிதம் சார்ந்த வன்முறை மனநிலை ஆகியவற்றை இந்தப் படத்தில் அனாயாசமாகப் பகடி செய்திருப்பார் விவேக். “உங்கள எல்லாம் ஃபோர் ஹண்டர்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா” என்று சமூகச் சீர்திருத்தவாதியான பெரியாரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனத்தையும் வைத்திருப்பார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒயாமல் உழைத்த பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது இன்றைய சினிமாவில் ஒரு பெரும்போக்காக ஆகிவிட்டது. ஆனால், வெகுஜன சினிமாவில் பெரியாரின் பெயரை அதுவும் அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் பயன்படுத்தியவர்களில் விவேக் முதன்மையானவர். சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்தல், சாதி மத எல்லைகளைக் கடந்த காதலையும் திருமணத்தையும் வலியுறுத்துதல், போலிச் சாமியார்களை அம்பலப்படுத்துதல், உண்மையான ஆன்மிகத்தை அடையாளம் காட்டுதல் போன்ற, இன்று சினிமாவில் வழக்கமாக இடம்பெறும் பல முற்போக்கு அம்சங்களையும் முன்கூட்டியே தன் நகைச்சுவையில் வெளிப்படுத்திய முன்னோடி அவர்.

முழுமையான நடிகர்

கருத்து சார்ந்த நகைச்சுவைக்காகப் புகழடைந்த விவேக் ஒரு படத்தில் கருத்து கந்தசாமி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதேநேரம், உடல்மொழி, வசன உச்சரிப்பு, முட்டாள்தனமாக எதையாவது செய்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வது, வீராப்பாகப் பேசிவிட்டு அடிவாங்குவது உள்ளிட்ட ஸ்லாப்ஸ்டிக் வகை நகைச்சுவையிலும் விவேக் சளைத்தவரல்ல. ‘லவ்லி’, ‘படிக்காதவன்’, ’உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் இந்த வகையிலான நகைச்சுவையாலும் நம்மைச் சிரிப்பலையில் ஆழ்த்தி ரசிக்கவைத்தார்.

‘மோகமுள்’, ’அலைபாயுதே’, ’பாய்ஸ்’, ‘சிவாஜி’, ’பிருந்தாவனம்’, ’தாராள பிரபு’ எனப் பல திரைப்படங்களில் நகைச்சுவையைத் தாண்டி பல வகையான உணர்வுக் கலவைகளை வெளிப்படுத்தும் துணைக் கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பரிணமித்திருப்பார். அவர் கதையின் நாயகனாக நடித்த ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தில் மகன் தொலைந்துவிட்டதால் ஏற்படும் துன்பத்தை முகபாவங்களால் வெளிப்படுத்திய காட்சியில், இவர் இதுபோல் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்னும் ஏக்கத்தை ஏற்படுத்தினார்.

நடிப்பைத் தாண்டி மிடுக்கான தோற்றம், உடல்வாகைப் பேணுதல், நடனத் திறன் என நாயக நடிகர்களுக்குத் தேவையான குணாம்சங்களையும் கடைசி வரை தக்க வைத்திருந்தார் விவேக்.

சினிமாவையும் சமூகத்தையும் நேசித்தவர்

திரைக்கு வெளியேயும் திரையுலகத்தைப் பெரிதும் நேசித்தவர் விவேக். இளையராஜா தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷ் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களைக் கொண்டாடியவர். மேடைகளில் புகழ்வதோடு தனிப்பட்ட முறையிலும் அவர்கள் மீது அன்பு செலுத்தியவர். ‘கொலவெறி’ பாடல் வெளியானவுடன் அது பிரபலமடைவதற்கு முன்பே தன்னை அழைத்துப் பாராட்டியவர் விவேக் என்று இசையமைப்பாளர் அனிருத் பதிவுசெய்துள்ளார்.

திரைத்துறையைத் தாண்டி எழுத்து,பேச்சு எனப் பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்தவர் விவேக். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய வாசித்து அறிவுத் தேடலை நிறுத்திக்கொள்ளாதவராகவும் இருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தன் வழிகாட்டியாக ஏற்று, அவருடைய விருப்பத்தின்படி மரம் நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் இலக்குடன் பயணித்து 30 லட்சத்துக்கு மேற்பட்ட கன்றுகளை நட்டுவிட்டதாகத் தன் அஞ்சலிக் குறிப்பில் நடிகர் சிவகுமார் பதிவுசெய்திருக்கிறார்.

முகம்தெரியா உதவிகள்

மறைந்த நடிகர் குமரிமுத்து, தன்னுடைய மகள் திருமணத்துக்கு விவேக் உதவியது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய காணொலி விவேக்கின் மரணத்துக்குப் பிறகுதான் வைரலானது. பத்திரிகையாளர் தேனி கண்ணன் தன்னுடைய நண்பர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் மருத்துவரிடம் பேசி அவருக்கான உடனடி மருத்துவச் சிகிச்சையை விவேக் உறுதி செய்ததைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார். இப்படியாக விவேக் மற்றவர்களுக்குச் செய்த பல உதவிகள் அவருடைய மரணத்துக்குப் பிறகே பொதுச் சமூகத்துக்குத் தெரியவரும் அளவுக்கு எளிமையாக வாழ்ந்திருக்கிறார். இப்படியாக எல்லா நிலையிலும் சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் தன் கலையையும் வாழ்வையும் அமைத்துக்கொண்ட ஆளுமையான விவேக் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டாலும் என்றென்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

க்ரைம்

17 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்