திரை வெளிச்சம்: ஒவ்வொருவர் கையிலும் ஒரு திரையரங்கம்!

By ஆர்.சி.ஜெயந்தன்

கரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் போக்கிய ஊடகங்களில் ஒன்றாக அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது ஓடிடி. கையடக்க ஆண்ட்ராய்ட் கருவிகள், கணினித் திரை, ஸ்மார்ட் டிவி என பெருகிக் கிடக்கும் டிஜிட்டல் சாதனங்களில் வசதியான நேரத்தில், விரும்பிய உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சுதந்திரம், இந்தப் புதிய பொழுதுபோக்குக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம். இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களோடு, உள்நாட்டில் தொடங்கப்படும் ஓடிடி தளங்களும் முழு வீச்சில் களமிறங்கி வருகின்றன.

அவற்றில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மார்ச் 5-ம் தேதி முதல் தனது சேவையைத் தொடங்கியிருக்கிறது ‘ஆன்வி.மூவி’ (ONVI.MOVIE). ‘பார்வையாளர்களை முற்றிலும் புதிய ஓடிடி அனுபவத்துக்கு அழைத்துச் செல்வதே எங்களுடைய இலக்கு’ எனும் இந்நிறுவனத்தின் உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் சபரியிடம், மற்ற ஓடிடிகளிலிருந்து எந்தெந்த விதங்களில் மாறுபட்ட சேவையை ‘ஆன்வி.மூவி’ வழங்குகிறது என்பது பற்றி உரையாடினோம். அதிலிருந்து ஒரு பகுதி..

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார் போன்ற பன்னாட்டு ஓடிடி தளங்களுடன் ‘ஆன்வி.மூவி’ போன்ற புதிய ஓடிடி தளங்கள் போட்டிப்போட முடியுமா?

எங்களுடைய முதன்மை நிறுவனம் ‘ஆன்வி மீடியா’. இதுவொரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம். எங்களுடைய முக்கியமான மென்பொருள் தயாரிப்பு ஓடிடி தொழில்நுட்பம். ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் உள்பட உலக அளவில் புதிதாகத் தொடங்கப்பட்டு மில்லியன்களில் பார்வையாளர்களை ஈர்த்துள்ள பல ஓடிடி நிறுவனங்களுக்கு எங்களுடைய தொழில்நுட்பத்தை விற்பனை செய்து, வாடிக்கையாளர் சேவையையும் வழங்கிவருகிறோம்.

எங்களுடைய ஓடிடி தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒருமணி நேரத்தில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போல் பிரம்மாண்டமான ஓடிடி தளத்தை உருவாக்கிவிட முடியும். ஓடிடி தொழில்நுட்பத்தில் நாங்கள் வலிமையுடன் இருப்பதால்தான், ஓடிடி பொழுதுபோக்குச் சேவையில் இறங்கியிருக்கிறோம். மற்ற கருவிகளைவிட, ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவர் கையிலும் இன்று ஒரு திரையரங்கம்போல் ஆகிவிட்டது!

பார்வையாளரிடம் இருக்கும் போனில் இண்டர்நெட்டின் வேகம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், அதற்கு ஏற்ப படம் ஒரே சீராக திரையில் ஓடும்படி செய்யும் ‘அடாப்டிவ் பிட் ரேட் ஸ்ட்ரீமிங்’ என்கிற எங்களுடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். இப்படி தொழில்நுட்பரீதியாக பன்னாட்டு ஓடிடி தளங்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் குறைந்தவர்கள் கிடையாது. அதேபோல், பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும்தான் இன்று பன்னாட்டு ஓடிடிக்களின் குறியாக இருக்கிறது.

ஆனால், பெரிய நடிகர்கள் நடித்தப் படங்களுக்கு மட்டுமல்ல; அதைவிட ஒருபடி அதிகமாகவே உள்ளடக்கத்தின் தரத்துக்கு ஓடிடி பார்வையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை எங்களுடைய தொடர்ச்சியான ‘யூசர் இண்டர்ஃபேஸ்’ ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். அதனால், தரமான படைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், வெகு விரைவாக ஓடிடி சந்தையில் வலுவான இடத்தை பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

சபரி

பார்வையாளர்களை ஈர்க்கும்படியாக உங்களிடம் என்ன தனித்துவம் உள்ளது?

நிறைய... தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது 5 முதல் 6 படங்கள் வெளியாகின்றன. ஆனால், ஒரு பார்வையாளர் அந்த 6 படங்களையும் திரையரங்கு சென்று பார்த்துவிடுவது சாத்தியமில்லை. அதுவே அந்த 6-ல் குறைந்தது ஐந்து படங்கள் ஓடிடியில் வெளியானால், அவரவருக்கு வசதியான ஓய்வு நேரத்தில் பார்ப்பார்கள். ‘ஆன்வி.மூவி’ வழியாக இதைச் சாத்தியமாக்கிட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுவருகிறோம். இதில் ஆண்டுச் சந்தா என்கிற பேச்சுக்கே இடமில்லை. விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி (Pay per view) பார்க்கலாம். ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

தற்போதைக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் ஆகியவற்றை காணலாம். வெகு விரைவில் ஆங்கிலம் உட்பட உலகின் பலமொழிப் படைப்புகளையும் ஆன்வி.மூவியில் மிகக் குறைந்த கட்டணத்தில் காணமுடியும். டிக்கெட்டின் விலை என்கிற புள்ளியில் பார்வையாளர் - தயாரிப்பாளர் ஆகிய இரண்டு தரப்புமே பலனடைய வேண்டும். இதில் உள்ள சுதந்திரம் காரணமாக எங்களது ஓடிடி தளத்தைப் பார்வையாளரின் ‘பிரைவேட் டிஜிட்டல் மல்டி பிளெக்ஸ்’ (Your Private Digital Multiplex) என்கிறோம்.

எங்கள் தளம் குறும்படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால், இன்றைக்குப் பார்வையாளர்களின் பார்க்கும் நேரம் குறைந்துவிட்டது. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையிலான குறும்படங்கள் முதல் 90 நிமிடத்துக்குள் உள்ள முழுநீளத் திரைப்படங்கள் ஆகிவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். சுவாரஸ்யமான ஆவணப் படங்கள் மீதான ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. வார இறுதிநாட்களில் வெப் சீரீஸ் பார்க்கும் பழக்கம் உருவாகியிருக்கிறது.

யூடியூப் போன்ற சமூக காணொலித் தளங்களே இன்று குறும்படங்களுக்கான கிடங்காக இருக்கின்றனவே?

உண்மைதான். ஆனால், யூடியூபில் பதிவேற்றப்பட்ட ஒரு தரமான, சுவாரஸ்யமான குறும்படத்தை 10 லட்சம் பேர் பார்த்திருந்தால் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். அதுவே ஆன்வி.மூவியில் ஒரு தரமான, ஏமாற்றம் அளிக்காத குறும்படத்தை 10 ஆயிரம் பேர் தலா 20 ரூபாய் என்கிற கட்டணத்தில் பார்த்தால் 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் படைப்பாளிகள் தங்கள் முதலீட்டை மிக எளிதாக திரும்ப எடுக்கவும் லாபம் பார்க்கவும் முடியும். சப்-டைட்டிலுடன் வெளியிடுவதன் மூலம் தமிழகம், இந்தியா என்கிற எல்லையைத் தாண்டி உலக அளவில் பன்மொழிப் பார்வையாளர்களை ஈர்க்க முடியும்.

வெளிப்படையான வசூல் நிலவரம், பார்வையாளர் வருகை ஆகியவற்றை எப்படிக் கையாள்கிறீர்கள்?

மிகவும் எளிய முறையாக்கி இருக்கிறோம். படைப்புகளை நேரடியாக ஆன்லைன் வழியாக அப்லோட் செய்யலாம். ஒப்பந்தத்தை ஆன்லைன் வழியாகவே போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுவதற்கு தொழில்நுட்பக் குழு பணியில் இருக்கிறது. ‘அட்மின் பேணல்’ வழியே எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளர்கள், தங்களுடைய படைப்புகளுக்கான பார்வையாளர்கள் வருகையின் நேரம், எண்ணிக்கையை 24 மணிநேரமும் கண்காணிக்கலாம். சேர்ந்துள்ள வசூல் தொகையை உடனடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம். தயாரிப்பாளர்கள் எந்தவிதத்திலும் ஆன்வி.மூவிக்கு முன்கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமின்றி படைப்புகளை நேரடியாக வெளியிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்