சினிமா எடுத்துப் பார் 26- ‘அன்பே வா’

By எஸ்.பி.முத்துராமன்

முதலில் ‘தி இந்து’ தமிழுக்கு மூன்றாம் ஆண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எல்லோர் சார் பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம் பரியமிக்க ‘தி இந்து’ ஆங்கில நாளித ழின் வாரிசாக ‘தி இந்து’ தமிழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்துகொண்டி ருக்கிறது. தாயின் அடியைப் பின் பற்றி சிறந்த செய்திகளையும், நல்ல கருத்துகளையும், அழகான புகைப் படங்களையும் வெளியிட்டு மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளது. ஆங்கில ‘இந்து’ நாளிதழைப் போல் தமிழ் ‘இந்து’வும் சரித்திரம் படைக்க வாழ்த்து கிறோம். வளர்க தொடர்க…

‘ஆர்.எம்.வீ தயாரிப்பில் நான் இயக்கிய படம் என்ன’ என்று கடந்த வாரம் கேட்டிருந்தேன். சத்யா மூவிஸ் தயாரித்த ‘ராணுவ வீரன்’ படம்தான் அது. சிறந்த விழிப்புணர்வு மிக்க கதை. அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்தார்கள். படத்தின் கதாநாயகி தேவி. அந்தப் படத்தைப் பற்றி விரிவாக நான் இயக்குநராக பயணித்த காலம் பற்றி பேசும்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அதுவும் சூப்பர் ஸ்டார் பற்றியும், உலக நாயகன் பற்றியும் நிறைய விஷயங்கள் எழுத ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்களும் படிக்க காத்திருப்பீர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரே அசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்கு முறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்துதான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவர். அவரது கையால் பரிமாறி உணவருந்தும் நல்வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அது ஒரு பொற்காலம்.

‘‘நம்ம அசோகன் நேரங்கெட்ட நேரத் துல சாப்பிட வருவாரு. அவருக்கு சாப்பாடு எடுத்து வைங்க’’ என்பார். அது அசோகன் மீது எம்.ஜி.ஆர் காட்டிய அன்பின் அடையாளம். எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் சரித்திரத்தில் இடம் பெற்றது. அதற்கு அடையாளமாக எம்.ஜி.ஆர் பந்தி விசாரிக்க, ஏவி.எம். செட்டியார், நாகிரெட்டியார், எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் விருந் துண்ணும் புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்புக் காக ஏவி.எம் ஸ்டுடியோவில் இருந்த ஏழு ஃப்ளோர்களிலும் செட் போட்டிருந்தோம். கிளைமாக்ஸ் காட்சி யைப் படமாக்க மேலும் ஒரு செட் தேவைப்பட்டது. அப்போது சரவணன் சார் ‘‘இங்கே ஃப்ளோர் இல்லை. வாஹினி ஸ்டுடியோவுல ஒரு ஃப்ளோரை வாடகைக்கு எடுக்கலாமா என்று அப்புச்சியிடம் கேளுங்க’’ என்றார். அப்புச்சியிடம் நான் கேட்டேன். ‘‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் படப்பிடிப்புக்குப் போய்விட்டு வாருங்கள்’’ என்றார் அவர். நாங்கள் ஊட்டி, சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக புறப்பட்டோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பு களை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பினோம். செட்டியார் அவர்கள் எங்களிடம் ‘‘ஏழாவது ஃப்ளோருக்கு பக்கத்திலேயே இன்னொரு ஃப்ளோர் கட்டியாச்சு. அங்கே நீங்கள் கேட்ட கிளைமாக்ஸ் செட்டை அமைக்கலாம்’’ என்றார். ஒன்றரை மாத காலத்தில் ஒரு அரங்கத்தையே உருவாக்கியிருந் தார் அவர். அப்படி ஒரு திட்டமிடல் செட்டியாரிடம். அந்தத் திட்டமிடலைத் தான் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்.

எட்டாவது ஃப்ளோர் கட்டும் வேலைகள் நடந்த போது அந்த ஃப்ளோர் கட்டிய மண், கல் எல்லாவற்றையும் வெளியில் கொட்டியிருந்தார்கள். அதன்மேல் நடந்து சென்றுதான் படப்பிடிப்பை நடத்தி னோம். ஒருநாள் ஃப்ளோருக்கு போகும் போது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இன்று மாலை நேபாள மன்னர் குடும்பத் துடன் என்னைப் பார்க்க வருகிறார். இந்த வழியில் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அவர் வந்து செல்லும் அளவுக்குப் பாதையை சரிசெய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை செட்டியாரிடம் கூறினேன். மதியம் 1 மணி வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு பிரேக்கில் வெளியே வந்தோம். எம்.ஜி.ஆர் அதிர்ச்சியோடு பார்த்தார். மேடு, பள்ளங்கள் முழுவதும் சரிசெய் யப்பட்டு தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, இரண்டு பக்கங்களிலும் பூச்செடி கள் வைக்கப்பட்டிருந்தன. ‘‘செட்டியார் ஸ்டுடியோவில் ஏதும் பூதம் வெச் சிருக்காரா!’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இவ்வளவு குறுகிய நேரத்தில் நிறை வாக செய்துவிட்டாரே…’’ என்று பாராட்டி னார். அன்று மாலை வந்த நேபாள மன்னரும், அவர் குடும்பத்தாரும் ‘‘ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடி யோவுக்கு வந்துள்ளோம்…’’ என்று பெருமையாக கூறினார்கள்.

கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம். ‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு மிதிப்பதைத்தான் படங் களில் பார்த்திருப்போம். இந்தக் காட்சியில் நீங்க, அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து கீழே போட்டு மிதிக்க வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்…’’ என்று இயக்குநர் திருலோகசந்தர் விளக்கினார்.

டேக்கில் எம்.ஜி.ஆர் அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கீழே போட்டு அமுக்கினார். அந்தக் காட்சி படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. எம்.ஜி.ஆர் தினமும் உடற்பயிற்சி செய்பவர். கர்லாக் கட்டையை அவ்வளவு லாவகமாக சுழற்றுவார்.

‘அன்பே வா’ 100 நாட்கள் ஓடியது. ‘கேஸினோ’ திரையரங்கில் 100-வது நாள் விழா நடந்தது. கதை கேட்டபோது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இது என்னோட படம் இல்லை; இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தரின் படம்’’ என்று சொல்லியிருந்தார் அல்லவா. அதையே 100-வது நாள் விழாவிலும் சொல்லி, ‘‘இது திருலோக சந்தரின் வெற்றி. ஏவி.எம்மின் வெற்றி…’’ என்று பாராட்டினார். ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து 160-க்கும் மேலான படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் சரித்திரத்தில் முக்கியமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கவில்லை? என்ன காரணம்?

- இன்னும் படம் பார்ப்போம்...

> முந்தைய அத்தியாயம்: சினிமா எடுத்துப் பார் 25- அந்த நாட்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்