திரைவிழா முத்துகள்: குடியேறிகளும் மனிதர்கள் இல்லையா?

By செய்திப்பிரிவு

டி. கார்த்திக்

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் சரியா, தவறா என்ற விவாதம் தொடர்கிறது. அவற்றைத் தொடர்ந்து பார்த்துவந்த வேளையில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஹோலி பூம்’ என்ற கிரேக்கப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட இந்தப் படம், சட்ட விரோதக் குடியேற்றத்தால் பாதிக்கப்படும் மனிதர்களின் அல்லாடலை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் ஓர் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் தனி ஆளாக வசிக்கிறார் மூதாட்டி தாலியா. தரைத் தளத்தில் அல்பேனியாவிலிருந்து குடிபெயர்ந்த ஆடியா தன் குழந்தையுடன் வசிக்கிறார். மூதாட்டியின் வீட்டுக்கு எதிரே நைஜீரிய இளைஞன் மனுவும் அவளுடைய கிரேக்கக் காதலி லெனாவும் வசிக்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் இவர்களை பிலிப்பைன்ஸிலிருந்து வந்து அப்பா, அம்மாவுடன் வசிக்கும் ஐஜ் என்ற விடலைப் பருவத்து இளைஞனின் செயல், ஒரு புள்ளியில் இணைக்கிறது.

ஐஜ் குறும்புத்தனமாக தபால் பெட்டியை வெடி வைத்துத் தகர்க்கிறான். இதில் அல்பேனியாவிலிருந்து ஆடியாவுக்கு வந்த குழந்தை யின் பிறப்புச் சான்றிதழ் எரிந்துவிடுகிறது. அதே தபால் பெட்டியில் நைஜீரிய இளைஞன் மனுவுக்கு வந்த போதைப் பொருள் பார்சல் நாசமாகிறது. சிறு வயதில் தொலைந்துபோன மூதாட்டி தாலியாவுக்கு பிள்ளையிடமிருந்து வந்த கடிதம் எரிந்துவிடுகிறது. இதனால், ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் ‘ஹோலி பூம்’ கதை.

நான்கு கிளைக் கதைகள் படத்தில் இருந்தாலும், அல்பேனியாவிலிருந்து கிரேக்கத்தில் குடியேறுபவர்களின் நிலையையும் அவர்கள் மீதான கிரேக்க மக்களின் அணுகுமுறையையும் படம் அழுத்தமாகப் பேசுகிறது. அகதி களாகவோ, பிழைக்கவோ வருவோர் வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் பாஸ்போர்ட்டைப் பறித்துக்கொள்வது, உதவி என்ற பெயரில் பாலியல் உள்நோக்கோடு ஆதரவற்ற பெண்களை அணுகுவது எனச் சுரண்டும் போக்கை இயக்குநர் மரியா லாஃபி தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இயக்குநர் மரியா லாஃபி, புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அவர்களுடைய வலிகளை அப்படியே இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வரும் மூதாட்டி தாலியா, நைஜீரிய இளைஞனைக் கண்டதும் தன் பார்வையிலேயே நிற வெறியைக் காட்டிவிடுகிறார். ஆடியாவின் குழந்தையின் அழு குரல் கேட்கும்போதெல்லாம் திட்டித் தீர்க்கிறார். ‘சட்ட விரோதமா வந்துடுறாங்க. இவங்களோட இதே வேலையாப் போச்சு’ என்று கொதிக்கிறார். ஆனால், நைஜீரிய இளைஞன் பிரச்சினையில் சிக்கும்போது ஆதரவளித்து வீட்டில் அடைக்கலம் தருகிறார் மூதாட்டி தாலியா. ஆவணமின்றித் தங்கியிருப்பதாக ஆடியாவை போலீஸ் பிடித்து சென்றுவிட, இரவில் அழும் குழந்தையின் சத்தம் கேட்டு மனம் கேட்காமல், நைஜீரிய இளைஞனின் உதவியுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து பராமரிக்கிறார்.

இங்கேதான் இப்படம் மனிதத்தை உரக்கப் பேசுகிறது. நாடு, இனம், மொழி, பண்பாடு என எல்லாவற்றையும் தாண்டி பிரச்சினையில் உள்ள மனிதர்களை மனிதநேயத்துடன் அணுகும் பார்வையை முன் வைக்கிறது இப்படம். காகிதமாக இருக்கும் ஆவணங்கள் மனித வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டையும் இப்படம் பேசத் தவறவில்லை. உள்நாட்டுச் சிக்கலால், அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி, மற்றொரு நாட்டில் சட்ட விரோதக் குடியேறுகிறவர்களின் பிரச்சினையை மனிதத்துடன் பேசுவதுதான் காலத்தின் தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது ‘ஹோலி பூம்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

க்ரைம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்