இயக்குநரின் குரல்: விஜய் சேதுபதி என்றால் வெற்றி!

By செய்திப்பிரிவு

மகராசன் மோகன்

‘‘இயற்கையானது, ஒவ்வொரு மனித உயிரையும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்கிற அடிப்படைத் தகுதியோடுதான் படைக்கிறது. அதன்பிறகு, எதை எல்லையாக, சொந்தமாக, பகையாகக் கொண்டிருக்கிறோம் என்பது அவரவர் பயணத்தில்தான் இருக்கிறது.

எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய இந்தக் கருத்தைக் கதைக் களமாகக் கொண்டே இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்!’’ என்கிறார், அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், கனிகா, இயக்குநர்கள் மோகன் ராஜா. மகிழ்திருமேனி உள்ளிட்ட பலரது நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை உருவாக்கிய இவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர். அவருடன் உரையாடியதிலிருந்து…

இது குடியுரிமை, இனவரைவியல் பேசும் படமா?

‘ஹுயூமன் க்ரைஸிஸ்’னு சொல்கிற மனித இன நெருக்கடி சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அது இங்கேயும் இல்லாமல் இல்லை. அதை அழுத்தமாக இந்தக் கதைக்களம் பேசும். கடந்த 2012-ல் இருந்து 2014 வரை கள ஆய்வுசெய்து அதன் பிறகு படமாக்கும் வேலையில் இறங்கினேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் இந்த நேரத்தில், இந்தப் படம் பேசும் மையப் பிரச்சினையை ஒட்டியே நாடாளுமன்ற இரு அவையிலும் குடியுரிமை மசோதா பேசுபொருளாகி இருக்கிறது.

தற்போது விவாதத்துக்குள்ளாகியுள்ள குடியுரிமை சட்டம் பற்றி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தில் நேரடியாகப் பேசுகிறீர்களா?

இல்லை. சர்வதேச அளவில் உள்ள அகதிகள் பிரச்சினைக்கு ஐ.நா. சபையின் அகதிகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா கையொப்பம் இட்டாலே போதும். இங்கே இருக்கும் அகதிகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும். அதை விட்டுவிட்டு இந்தக் குடியுரிமை மசோதா சட்டம் என்பது மதரீதியாகவும், இனரீதியாகவும் பிரிவினையை உண்டு பண்ணுகிற உள்நோக்கம் கொண்டது என்பது இந்தியா மொத்தமும் எதிர்ப்பதிலிருந்தே தெரியவில்லையா?

அப்படியென்றால் இது அரசியல் படமா?

மனித இனத்தின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் இருக்கிறது. அதை எத்தனை எளிமையாக வெகுஜன மக்களுக்கு சினிமா வழியே சொல்கிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். இரண்டு கதாநாயகிகள், ஒரு நாயகனை ஒரு பழங்கால தேவாலயத்தில் சந்திக்கும்போது அங்கே நடக்கிற விஷயங்கள்தாம் இந்தப் படம். ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் தொடங்குகிற கதை. இசையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். நெருக்கடி மட்டுமல்ல; ஒருவிதக் கொண்டாட்டம், ரொமான்ஸ் வகைக் கதைக் களம் என்றும் இதைச் சொல்லலாம்.

அதனால் இசை ஒரு பயணமாகவே படத்தில் இடம்பெறுகிறது. இசை ஒரு முக்கிய அங்கம் என்பதுபோல 150 ஆண்டுகாலப் பழமையான தேவாலயம் முக்கிய அம்சமாக இருக்கும். அதுதான் படத்தின் மையமும்கூட. தேவாலயப் பகுதிக் காட்சிகளை செட், கிராஃபிக்ஸ் கலந்து பிரம்மாண்டமாகப் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தின் முடிவில் சின்னதாக ஒரு திரில் அனுபவமும் உண்டு. கொடைக்கானல், திண்டுக்கல் பின்னணியில் நகரும். மார்கழிக் குளிரின் ரம்மியத்தையும் படம் உணரவைக்கும்.

இந்தக் கதைக்கு விஜய் சேதுபதிதான் சரியாக இருப்பார் என எப்படி முடிவெடுத்தீர்கள்?

‘புறம்போக்கு’ படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தபோது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘இவரிடம் கதை கேளுங்கள்’ என்று சொல்லி என்னை விஜய் சேதுபதியிடம் அறிமுகம் செய்தார். விஜய் சேதுபதி இல்லையென்றால் இந்தப் படமே இல்லை.

இந்த நேரத்தில் இந்தக் கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன அவருக்கும், என்னை விஜய்சேதுபதியிடம் அறிமுகம் செய்துவைத்த என் இயக்குநர் ஜனா சாருக்கும், என்னோடு தொடர்ந்து பயணித்து வரும் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ரத்னவேலு குமாருக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். விஜய் சேதுபதி என்றாலே கதை தேர்வுக்குப் பெயர்போன கதாநாயகன். அதனால்தான் விஜய் சேதுபதி என்றால் வெற்றிகளாகத் தொடர்கிறது. இந்தப் படம் அவருடைய பட்டியலில் மேலும் ஒரு அலட்டல் இல்லாத வெற்றியாக அமையும்.

படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் நாயகியாக அமலா பால் ஒப்பந்த மாகிப் பின் விலகியது, அறிக்கை விட்டது எனப் பரபரப்பாக இருந்ததே?

அமலா பால் படத்தில் ஒப்பந்தம் ஆனதும் முழுக் கதையையும் அவரிடம் படிக்கக் கொடுத்திருந்தேன். படத்தில் நாயகியின் பெயர் மெடில்டா. கதையைப் படித்தபிறகு என்னிடம் அவர் பேசும்போது, ‘நான் மெடில்டா பேசுகிறேன்!’ என்றே பேசுவார்.

எதிர்பாராத விதமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. மற்றபடி, அமலாபால் ‘ஆடை’ படத்தில் நடித்ததால்தான் விலக்கப்பட்டார் என்கிற செய்தி பொய்யானது. துணிச்சலான பார்வையும் துடிப்பும் கொண்ட ஒரு நடிகையை நான் மதிக்கிறேன். அவரோடு அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அமையலாம்.

உங்கள் குரு எஸ்.பி.ஜனநாதனின் அரசியல் சினிமா சாயல் உங்களிடமும் பிரதிபலிக்குமா?

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் வேலை பார்த்தேன். கமர்ஷியல் பின்னணியில் அரசியல் விஷயத்தைச் சத்தமாகப் பேச முடியும். அதில் வெற்றியும் காணலாம் என்கிற விஷயத்தை அவரது சினிமா பிரதிபலித்து வருகிறது. அந்த வகையான படங்களை எல்லோரும் எடுக்கலாம் என்கிற துணிச்சலை அவர்தான் விதைத்தார்.

தயக்கமில்லாமல் அந்தப் பாதையில் பலரும் பயணிக்கின்றனர். எனக்குச் சின்ன வயதிலிருந்தே இலக்கியம், அரசியல் பார்வை உண்டு. அந்தப் பார்வையோடு ஜனா சாரிடம் வந்து சேர்ந்தேன். அவர் அருகே அமர்ந்து பேசும்போது இருவருடைய கருத்துகளும் ஒரு நேர்கோட்டுக்குள் உட்காரும். அது என் பயணத்துக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

உலகம்

22 mins ago

வணிகம்

39 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்