அடுத்த படம் அனுஷ்காவுடன்! - கௌதம் மேனன் பேட்டி

By செய்திப்பிரிவு

அனைத்துப் பிரச்சினைகளையும் கடந்து இன்று வெளியாகிறது. 'எனை நோக்கி பாயும் தோட்டா'. “இந்தப் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பலருக்கும் நல்ல விஷயமாகத் தோன்றலாம். ஆனால், எனக்குக் கொஞ்சம் கெட்டதாகத் தான் தோன்றுகிறது. படம் பார்த்துவிட்டு இதுக்குத் தான் இந்தப் போராட்டமா என்று எளிதாகச் சொல்லிவிடும் ரசிகர்களே அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்து வருவதைவிட, படம் கொஞ்சம் குறைந்தாலும் என்னைப் போன்ற இயக்குநருக்குச் சிக்கல்தான்” என்று வெகுஜன ரசனையை நாடி பிடித்துப் பார்க்கும் சினிமா ஞானியைப் போல உரையாடத் தொடங்கினார் கெளதம் மேனன்.

கெளதம் படம் என்றாலே இப்படித்தான் சிக்கல்கள் வெடிக் கும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களுடைய பதில் என்ன?

இந்தப் படத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களுக்குத் தெரியாது. அது தெரிய வரும்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிய சில காலமானது. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்குப் பிடித்திருந்தது. என்ன பண்ணலாம் என்று பேசும்போது, நான் சில படங்கள் பண்ணி அதில் வரும் சம்பளத்தை வைத்துத்தான் இந்தப் படத்தை வெளியிட முடியும் என்றார்கள். ஆம்.. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு அதற்காக என் நன்றி.

கமல், அஜித், சூர்யா எனப் பெரிய நடிகர்களை இயக்கியவர் நீங்கள். உங்களால் ஏன் இது போன்ற நிதிப் பிரச்சினைகளைக் கையாள முடியவில்லை?

செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு என்று போட்டபோது, நாமே பண்ணலாம் என்றுதான் பண்ணினேன். சுமார் எண்பது சதவீதப் பிரச்சினைகளைத் தாண்டிவிட்டோம். அந்தச் சமயத்தில் எங்களையும் அறியாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பிரச்சினை என்று வந்துகொண்டே இருந்தது. நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன, இனிமேல் வரவே வராது என்ற பிம்பத்தைச் சிலர் உருவாக்கிவிட்டார்கள். அந்தச் சமயத்தில் யாரிடம் போய் கதை சொன்னாலும், முதலில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' வரட்டுமே என்றுதான் சொன்னார்கள்.

அதைத் தாண்டி வரலாம் என்று நின்றிருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்கும் என நினைத்தேன். இனிமேல் நம்மால் முடியாது என்று முடிவு பண்ணித்தான் ஐசரி கணேஷ் சார் உதவியை நாடினேன். அங்கும் என்னால் மட்டுமே பிரச்சினையை முடிக்க முடியும் என்ற நிலைதான் இருந்தது. படங்கள் பண்ணனும், நடிகர்களுக்காக கதைகள் எழுதணும், அந்தப் படங்களுடைய சம்பளத்தை இப்போதே கொடுக்கவேண்டும் என்பது மாதிரி வந்தது. அதற்கு உங்களுக்கு அட்வான்ஸ் தொகையிலேயே சரி பண்றேன் என்று ஐசரி கணேஷ் சார் வந்தார். பலர் அப்படி வரவில்லை.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியுடன் படம், அருண் விஜயுடன் படம், அனுஷ்காவுடன் ஒரு படம், ரஜினிக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் எனத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டே இருந்தனவே?

என் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ மாக எந்த அறிவிப்பும் இதுவரைக் கொடுக்கவில்லை. அருண் விஜயை வைத்து படம் தொடங்கியது உண்மை. ரசனைமிக்க தயாரிப்பாளர்களாகவும் அமைந்தார்கள். அந்தப் படம் வெளியானால் 'எனை நோக்கி பாயும் தோட்டா' வின் நிதிப் பிரச்சினைகள் அனைத்தும், அதன் மீது விழும் என்பதால் தள்ளிவைத்துள்ளேன். இப்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீடு உறுதியாகிவிட்டதால், அந்தப் படத்துக்கு விரைவில் செல்வேன்.

சூர்யாவுடன் படம், அனுஷ்காவுடன் படம் ஆகிய அனைத்துமே முடிவாகும்வரை பேசக்கூடாது என நினைத்தேன். சூர்யா சாருக்கான கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரைச் சந்தித்துச் சொல்லணும். பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. நான் எழுதும் கதை அவருக்குப் பிடித்திருந்தால், அது நடக்கும். அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி ஒரு படம் பண்ண பிளான் பண்ணிட்டு இருக்கோம். ஆனால், அது கோவிந்த் நிகலானியின் கதை அல்ல. கிட்டதட்ட அடுத்தப் படம் அனுஷ்காவுடன்தான் என்பது மாதிரி எல்லாம் கூடி வருவது உண்மைதான். நான் நேரடியாக ரஜினி சாரிடம் பேசவில்லை. ஆனால், அவருடன் இருக்கும் நண்பர்கள் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸுக்குப் பிறகு அவரை மீட் பண்ணலாம் சார் என்பது மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

காதல், போலீஸ், குற்றம் என்னும் கதைக்களன்களைத் தாண்டிய கெளதம் படங்களை எப்போது பார்ப்பது?

நான் ஏன் தெரியாத விஷயத்துக்குள் போய் கஷ்டப்பட்டு பண்ண வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆனால், தெரிந்த விஷயத்துக்குள்ளேயே தொடர்ச்சியாகப் படம் பண்ணுவது கடினம்தான். நான் கதை எழுத உட்காரும்போது, இந்த மாதிரிக் காட்சிகளே வருகின்றன. அவற்றைத் தகர்க்க முயல்கிறேன். நெட்பிளிக்ஸுக்காக இயக்கவுள்ள ‘குயின்’ வெப் சீரிஸ் வெளியாகும்போது, இந்தக் கேள்வி மாறும் என நினைக்கிறேன்.

'துருவ நட்சத்திரம்' எப்போது வெளியாகும்?

இப்போது எடிட்டிங் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் நான்கு நாட்களில் டப்பிங் தொடங்கிவிடும். அறுபது நாட்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற சவாலான பணியைக் கையில் எடுத்துள்ளேன். விக்ரம் சாருடைய காட்சிகள் அனைத்துமே முடிந்துவிட்டன. நான்கு நாட்கள் பேட்ச் வொர்க் மட்டும் இருக்கிறது.

- கா.இசக்கி முத்து

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்