சினிமா ரசனை 7: பாகுபலிக்காகக் காத்திருந்த ரசிகரா நீங்கள்?

By கருந்தேள் ராஜேஷ்

பாகுபலி படத்தை இந்நேரம் நீங்கள் பார்த்திருக்கலாம். அடுத்து வரும் வாரங்களில் பார்க்கத் திட்டமிட்டிருக்கலாம். கண்டிப்பாகப் பாருங்கள். அதற்கு முன் ஃபாண்டசி திரைப்படம் பற்றிய உங்கள் அளவுகோல் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு பாருங்கள். நேரடி ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டோ ‘கிளாடியேட்டர்’, ‘டிராய்’, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ ஆகிய படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அதுபோன்ற ஃபாண்டசி படங்கள் நேரடியாகத் தமிழில் உருவாகும் காலம் விரைவில் வராதா என்றுகூட நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். அத்தகைய உங்கள் எதிர்பார்ப்பை பாகுபலி பூர்த்திசெய்திருப்பதாகச் செய்யப்படும் பிரச்சாரம் எந்த அளவுக்குச் சரி? ராஜமௌலி தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறாரா, ஏமாற்றியிருக்கிறாரா? இக்கட்டுரையில் அலசுவோம்.

இந்திய மொழிகளில் ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி படத்தை எடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? உலக அளவில் ஃபாண்டஸி என்பதற்கும் இந்திய ஃபாண்டஸி என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு என்பதை இம்மி பிசகாமல் நிரூபித்திருக்கிறது பாகுபலி.

எத்தகைய திரைப்படமாக இருந்தாலும், திரைக்கதை என்கிற வஸ்து அவசியம். திரைக்கதையே இல்லாமல் படம் வருவது இந்திய ரசிகர்களுக்குப் புதிதல்லதான். இருந்தாலும், பாகுபலி படத்துக்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடுமையான வேலைகள் பின்னணியில் நடந்ததால், கண்டிப்பாகப் படத்தின் திரைக்கதை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் படம் பார்த்த பின்னர்தான் அது எத்தனை தவறான எதிர்பார்ப்பு என்பது புரிந்தது. இப்போதெல்லாம் எந்தப் படத்தைப் பற்றி நடுநிலையாக எழுதினாலும், ‘ஹேட்டர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்றாலும், இப்படத்தைப் பற்றித் தெளிவாகச் சில கருத்துகளை விவாதிப்போம்.

‘பாகுபலி’ வெளிவந்ததும் உடனடியாக அதனுடன் ஒப்பிடப்படும் சில படங்களை எடுத்துக்கொள்ளலாம். ‘டிராய்’ படமோ, ‘கிளாடியேட்டர்’ படமோ, அல்லது ‘பென்ஹர்’, ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ போன்ற பழைய படங்களோ, முதலில் ரசிகர்களை ஒன்றவைக்கும் வகையிலான திரைக்கதைகளைக் கொண்டவை. இப்படங்கள் எல்லாமே முதலில் இப்படிப்பட்ட திரைக்கதைகளைப் பலமுறை அடித்துத் திருத்தி எழுதியே உருவாக்கப்பட்டவை. கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமலேகூட இவற்றால் வெற்றிபெற்றிருக்க முடியும். ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் உணர்வுபூர்வமான பல காட்சிகள் இவற்றில் உண்டு. இதுதான் தரமான ஃபாண்டஸி படம் ஒன்றை எடுக்கும் உலகளாவிய வரைமுறை.

‘திரைக்கதை’ என்பது அங்கே அவ்வளவு முக்கியம். ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ படத்துக்கு இயக்குநர் பீட்டர் ஜாக்ஸனோடு சேர்ந்து மொத்தம் மூன்று திரைக்கதையாசிரியர்கள். இவர்கள் பல மாதங்கள் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியாகப் பலமுறை அடித்துத் திருத்தி எழுதியே அப்படம் எடுக்கப்பட்டது. இங்கே உதாரணமாகக் கொடுத்திருக்கும் அனைத்துப் படங்களுமே ‘திரைப்படம்’ என்ற நிலையில் இருந்து, ‘காவியம்’ என்ற நிலையில் கொண்டாடப்படுபவை என்பதையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். ஹாலிவுட் படங்களில் கூட, திரைக்கதையில் நல்ல உழைப்பு இருக்கும். ஏனோதானோ என்ற அரைகுறை முயற்சி இருக்காது.

ஆனால், பாகுபலியோ, வெறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, இதனால் மட்டுமே ரசிகர்களைக் கவர முடியும் என்றே எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சாதாரணமான படமாகத்தான் தெரிகிறது. அதிலும், குத்துப்பாட்டு உட்பட இந்திய கமர்ஷியல் திரைப்படங்களின் அத்தனை வேண்டப்படாத அம்சங்களையும் வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜமௌலி நினைத்திருந்தால் இப்படத்தை ‘திரைக்கதை’, ‘காட்சியமைப்பு’ ஆகிய இரண்டு நிலைகளிலும் தரமான படமாக எடுத்திருக்க முடியும்.

உதாரணமாக அவரது ‘நான் ஈ’ படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஈயை வைத்துக்கொண்டு அத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுப்பது பல இயக்குநர்களுக்குச் சாத்தியப்படாதது. அது ராஜமௌலியால் முடிந்தது. ஆனால் அதற்கு அடுத்து அவர் எடுத்திருக்கும் பாகுபலி, வெறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வைத்துக்கொண்டே படத்தை ஒப்பேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. காரணம், மிகமிகச் சாதாரணமான ஒரு கதை; அந்தக் கதையில் ஓரிரண்டு கதாபாத்திரங்களைத் தவிர மீதியெல்லாம் ஒரே வார்ப்புருவில் அமைந்த கதாபாத்திரங்கள், இக்கதையில் சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகள், இறுதியில் பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சி என்று இந்தியப் படங்களுக்கேயான ஒரு உருவாக்கம்தான் பாகுபலி.

‘இந்தியாவில் இப்படிப்பட்ட படம் உருவாக்கப்படவில்லை. அதற்காகவே பாகுபலியைப் பாராட்ட வேண்டும்’ என்பது ஒரு சாராரின் கருத்து. பல கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இப்படத்தை எப்படிப் பாராட்ட முடியும்? ஒரு ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ போலவோ, ஒரு ‘கிளாடியேட்டர்’ போலவோ ஒரு ‘ட்ராய்’ போலவோ இதில் ரசிகர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் திரைக்கதை இல்லையே? படம் நடக்கும் நிலப்பரப்பைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல், இஷ்டத்துக்குக் காட்சிகளை அமைத்து, அதில் பாடல்களைத் திணித்து, ஒரு சில பஞ்ச் வசனங்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை, அதன் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே எப்படிப் பாராட்டமுடியும்?

சத்யராஜின் கதாபாத்திரம், ஒரு சில இடங்களில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் ஆகியவை மட்டுமே படத்தின் நல்ல அம்சங்கள் என்று சொல்லலாம். இதன் கலை இயக்கத்தையும் அவசியம் பாராட்டலாம். ஆனால், இவை தவிரக் கதையிலோ திரைக்கதையிலோ எந்த ஒரு புதுமையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் தெலுங்குப் படம் இது.

‘ராஜமௌலி’ என்னும் பிராண்டையும் படத்திற்கான மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் மட்டுமே வைத்துக்கொண்டு ரசிகர்களை இப்படம் ஒரு காவியம் என்று நம்பவைக்க ஒரு முரட்டு தைரியம் அவசியம் தேவை. அதைத்தான் செய்திருக்கிறார் ராஜமௌலி. கூடவே, டெலிசீரீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் ரசிகர்களுக்கு இப்படத்தின் பல காட்சிகளின் பின்னணியில் உள்ள ஒற்றுமைகளும் புரியும்.

ஒரு ஃபாண்டஸி படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்திய உதாரணங்களாக இதுவரை விட்டலாச்சார்யா படங்களையே பார்த்து வளர்ந்திருக்கும் இந்திய ரசிகர்களாகிய நாமுமே, ‘நமக்கு இது போதும்’ என்ற ஒரு மனப்பான்மையிலேயே இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்க நேர்கிறது. இதுதான் ராஜமௌலியின் வெற்றி. இந்தியாவில் வெளியான ஃபாண்டஸி படங்கள்தான் இதன் அளவுகோல். ஒரு விட்டலாச்சார்யா படத்தைவிடவும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இதில் அவசியம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், இப்படத்துக்கான அளவுகோல் கிளாடியேட்டரோ டிராயோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதையிலோ உணர்ச்சிகளிலோ திரைக்கதையிலோ இப்படங்களின் அருகேகூட பாகுபலி வர இயலாது.

இப்படி எழுதியிருப்பதால், நான் ஒரு ‘ஹேட்டர்’ அல்ல. இந்தியத் திரைப்படங்களில் மிக அதிக பட்ஜெட்டோடு, பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கே புது அர்த்தம் கொடுத்திருப்பதாக இப்படம் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த விளம்பரத்தை நம்பி இப்படத்தை சாரிசாரியாகப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள், ‘தரம்’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை சரியானபடி அறிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

இனியாவது இத்தனை கோடி பட்ஜெட்டைக் கொட்டி எடுக்கப்படும் ஒரு திரைப்படம், அதன் திரைக்கதையில் எத்தனை உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமாவது உழைப்பைக் காட்டினால் அதுதான் ஒரு தரமான ஃபாண்டஸியை, விட்டலாச்சார்யா படங்களைப் போன்ற அதே தரத்திலிருந்து வித்தியாசப்படுத்தும். அதுதான் சினிமா ரசிகர்களுக்கும் உண்மையில் தேவை. காத்திருப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

14 mins ago

சுற்றுலா

18 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

28 mins ago

கல்வி

31 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்