தரைக்கு வந்த தாரகை 23: அல்ப விஷயங்களின் ஆனந்தம்!

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர் 

பானுமதி அம்மையார் கண்ணைத் துடைத்துக்கொண்டார். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் திரண்ட கண்ணீர்த் துளிகள், இப்போது உதிர்கின்றன.

என் மனசைப் படித்துவிட்டதுபோல் சொன்னார் பானுமதி.
“எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? அப்பா அம்மாவை மறக்க முடியுமா சார்?” 
‘முடியாதுதான்’ என்றேன் நெகிழ்ச்சியுடன். பானுமதி தொடர்ந்தார்.
“கோடவுன் தெருவுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இருந்தவர்கள் ஆவலுடன் கேட்டது, ‘அப்பா அம்மா ஆசீர்வாதம் கிடைத்ததா?’ என்றுதான். ‘பரிதாபம்! அப்பா என்னமோ சிங்கம், புலி மாதிரி பாய்வார் என்று நினைச்சுகிட்டுப் போனோம்! அவர் என்னடான்னா... குழந்தை மாதிரி அழுகிறார்.

அவர் மனசு இவ்வளவு மென்மையாக இருக்கும்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு அவங்களையும் கூப்பிட்டிருக்கலாம்’ என்று கமலம்மா வருத்தத்துடன் சொன்னார். ‘சரி பிராப்தம்னு ஒண்ணு இருக்கே’ என்று சொல்லிவிட்டு ‘சாயங்காலம் புதுமணத் தம்பதிக்கு ஏதாவது கொண்டாட்ட நிகழ்ச்சி வச்சுக்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்க’ என்றார் கமலம்மா.

“இங்கே பக்கத்து தியேட்டர்ல கே.எல்.சைகாலின் ‘ஜிந்தகி’ ஓடிட்டிருக்கு... பாட்டெல்லாம் பிரமாதமாக இருக்கும். போலாமா?” என்று யாரோ சொன்னார்கள். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. டிக்கெட்டுகள் வாங்கிவர ஒருவரை அனுப்பினார்கள். தியேட்டரில் எல்லோரும் ஒரே வரிசையில் உட்கார இடம் கிடைத்தது. நான் என் கணவருக்கு அருகில் உட்கார்ந்தேன். படம் தொடங்கியது. ஒரு சின்ன ரொமான்ஸ். என் கணவர் என் கையை எடுத்துத் தன் கையோடு சேர்த்துக்கொண்டார். திடீரென்று எனக்கு அந்தண்டைப் பக்கம் சீதம்மா உட்கார்ந்திருந்தது ஞாபகம் வரவே சட்டென்று தன் கையை இழுத்துக்கொண்டுவிட்டார். படத்தின் பெயர் எல்லாம் எனக்கு ஞாபகமில்லை. ஆனால், சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். 

தனிக் குடித்தனம்

மறுநாள் காலை தி.நகர் மகாலட்சுமி தெருவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புது வீட்டுக்குக் குடிபோனோம். ஒரு சமையலறை, படுக்கையறை. கூடத்திலிருந்து மேலே செல்லும் படிக்கட்டுகள். அங்கே ஒரு சிறிய அறை. வராந்தா, அவ்வளவுதான். 15 ரூபாய் வாடகை. கமலம்மா புறப்பட்டுவிட்டார். ‘ராமு என் குழந்தை மாதிரி’, என் குழந்தைகளோடு படித்தான். அவன் போன பிறவியில் நிச்சயம் என் மகனேதான். அதனால்தான் மகனாகவே நினைத்து இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வைத்திருக்கிறேன்’ என்றார் கண்ணீர் மல்க. ஆனால், நடந்தது வேறு. கமலம்மாவுக்கும் கல்யாண வயதைக் கடந்த பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்குக் கடைசிவரை கமலம்மா கல்யாணம் பண்ணவே முடியாமல் போய்விட்டது. இன்றுவரை இந்த விஷயம் ஆச்சரியத்தையும் திகைப்பையும் உண்டு பண்ணுகிறது.

நாங்கள் தனிக்குடித்தனம் தொடங்கிவிட்டோம். எனக்கு அவ்வளவாகச் சமைக்கத் தெரியாது. ஏதோ பருப்பும் கீரையும் கலந்து என்னவோ செய்வேன். கத்தரிக்காய்ப் பொரியல் ருசியாகச் சமைப்பேன். சாதம் மட்டும் வைக்கத் தெரியாது இன்றுவரை. சட்னி வகையறாக்கள் கூட்டுவதிலும் எனக்குச் சமர்த்து போதாது. என் கணவர், ‘நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் பிரமாதமாகச் சமைப்பேன். என் தங்கைகள் திருமணம் ஆகிப்போன பிறகு அம்மாவிடம் கத்துக்கிட்டேன்’ என்றார். அன்று நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சமையல் செய்தோம். நான் செய்த கத்தரிக்காய்ப் பொரியலை ஒஹோ என்று புகழ்ந்தார். இவ்வளவு ருசியாகச் என்னால் செய்ய முடியும் என்று அவரால் நம்பவே முடியவில்லை. 

ஒரே நாளில் மூன்று படம்

என் கணவர் அப்போது ‘செஞ்சு லட்சுமி’ பட வேலைகளைக் (1943) கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று ‘ஏதாவது இங்கிலீஷ் படம் போய்விட்டு வரலாமா?’ என்று கேட்டார். காஸினோ திரையரங்கில் பிற்பகல் காட்சிக்குப் போனோம். அந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்த இங்க்ரிட் பெர்க்மான் அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன். இந்த உலகில் இப்படிக்கூட அழகான பெண் இருப்பாளா என்று ஆச்சரியப்பட்டேன். சமீபத்தில் இங்க்ரிட் பெர்க்மான் இறந்துவிட்டதாக பேப்பரில் படித்தேன். அப்படியே இடிந்து போய்விட்டேன். அழகால் உலகத்தையே கட்டிப் போட்டாலும் மரணத்தின் முன் மண்டியிடத்தான் வேண்டும் என்று புரிந்தது.

அன்று படம் முடிந்து திரையரங்கைவிட்டு வெளியே வந்தோம். ‘இப்போது வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறோம்? டிபன் சாப்பிட்டுவிட்டு இன்னொரு படத்துக்குப் போகலாம்’ என்றார் என் கணவர். நியூ எல்பின்ஸ்டன் திரையரங்கில் (இன்று அந்தத் திரையரங்கம் இல்லை) நாங்கள் வேறு படம் பார்த்தோம். இரவு 9 மணி ஆகிவிட்டது. வீட்டுக்கு போக வேண்டுமென்றால் 11-ம் நம்பர் பஸ்சை பிடிக்க வேண்டும். அரைமணி நேரம் காத்திருந்தோம். பஸ் வருகிற வழியைக் காணோம். குளோப் தியேட்டரில் ஒரு அருமையான காமெடி படம் ஓடுகிறது பார்ப்போமா?” என்றார். நான் ஓகே என்றேன் உற்சாகத்துடன்!

சாலையோரம் நடந்தபடி, நடைபாதையில் மக்களோடு மக்களாகக் கலந்து கவலையற்று இப்படிப் படங்களைத் தொடர்ந்து பார்த்தபடி வெளி உலகில் சுற்றித் திரிவது எனக்குப் புது அனுபவம். படம் தொடங்கியது. ஏதோ வேறொரு நாட்டில் சஞ்சரிப்பதுபோல் இருந்தது. அங்கே விலங்குக் காட்சிச் சாலையில் விலங்குகள் பண்ணுகிற சேட்டைகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். இடைவேளையில் என் கணவர் எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார். அப்பாவாய் இருந்தால் ‘வேண்டாம்மா தொண்டை கட்டிக்கும்’ என்று சொல்லியிருப்பார். ஐஸ்க்ரீமை ஆசை தீரச் சாப்பிட்டேன். இவையெல்லாம் அல்ப விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால், அவை என் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள். 

பேயின் பிடியில் நான்

இரண்டாம் ஆட்டம் படம் முடிவதற்கு இரவு 12 மணி ஆகிவிட்டது. மழை வேறு பெய்யத் தொடங்கிவிட்டது. பஸ் போக்குவரத்து நின்று விட்டது. ஒரு ரிக் ஷாவில் புறப்பட்டோம். ரிக் ஷாவில் போகும்போது எதிர்பக்கமிருந்து வீசியடித்த மழையில் தொப்பலாக நனைந்துவிட்டோம். அப்போது யுத்தகாலம். எங்கள் ரிக் ஷாவுக்குப் பின்னால் ராணுவ வீரர்கள் சிலர் பூட்ஸ் சத்தத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நான் குளிராலும் பயத்தாலும் நடுங்கியபடி என் கணவருடன் ஒண்டிக்கொண்டேன். என் கணவர், ‘சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பாய் போலிருக்கே?’ என்று சிரித்தார். வீடு போய்ச் சேரும்போது இரவு மணி ஒன்றாகிவிட்டது. மறுநாள் எனக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. 

எங்கள் படுக்கை அறையில் முன்னால் இருந்த குடித்தனக்காரர்கள் ஒரு பெரிய கட்டிலை விட்டுச் சென்றிருந்தார்கள். அதன்மேல் வீட்டுச் சாமான்களை வைத்திருந்தோம். பிற்பகல் அந்தச் சாமான்களில் சிலவற்றைக் கீழே வைத்துவிட்டு கட்டிலின் மேல் ஓரமாகப் படுத்துத் தூங்கினேன். அசந்த தூக்கத்தில் யாரோ என்னை அமுக்குவது போல இருந்தது. மூச்சுவிட முடியாமல் திணற ஆரம்பித்தேன்.

என்னை அறியாமலே பகவத் கீதையில்வரும் புருஷ ப்ராப்தியோகத்தில் வரும் சுலோகங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். இதெல்லாம் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். சட்டென்று உடம்பு லேசாயிற்று. 
எழுந்து ஓடிப்போய்க் கதவைத் திறந்து ‘பேய்! பேய்!’ என்று கத்தினேன். அந்த வீட்டில் வேலைசெய்த ஆயா முனியம்மா ஓடிவந்து ‘என்னம்மா என்ன ஆச்சு?’ என்றாள். நான் நடந்ததைச் சொன்னேன்.

அந்த ஆயா சிரித்தபடி ‘ஓ! அந்தக் கட்டில் மேல ஏம்மா படுத்தீங்க? இந்த வீட்டில் குடியிருந்த ஒரு மார்வாடிப் பெண், அந்தக் கட்டில்மேல்தான் உயிரைவிட்டாள்... அவதான் அங்கே ஆவியா சுத்துறா...’ என்று சொல்லி என் நெற்றியில் விபூதி பூசிவிட்டாள். என் கணவர் அலுவலகத்திலிருந்து இரவு திரும்பியதும் நடந்ததைச் சொன்னேன். ‘நான்சென்ஸ்! பேயாவது, பிசாசாவது!’ என்று சொன்னார் அவர்.

சிறிது காலம் சென்றது. என் கணவருக்கு ஓய்வுகிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்க்கச் செல்வோம். அருமையான பல நல்ல ஹாலிவுட் படங்களை எல்லாம் என் கணவருடன் சேர்ந்து பார்த்துவிட்டேன். ஒரே நாளில் மூன்று படங்கள் வரைகூடப் பார்ப்போம். படம் பார்ப்பது, 11-ம் எண் கொண்ட பேருந்துக்காகக் காத்திருப்பது, பேருந்து தூரத்தில் வருவதைப் பார்த்துக் குதூகலிப்பது என்று ஆனந்தமாகக் கழிந்த நாட்கள் அவை.

சமீபத்தில் என் மகன் அமெரிக்காவிலிருந்து மெர்சிடஸ் பென்ஸ் காரைத் தருவித்திருந்தான். அந்த காரில் மவுண்ட் ரோடு (அண்ணாசாலை) வழியாகப் பயணித்தபோது திருமணமான புதிதில் கிடைத்த திரில்லான அனுபவங்களை நினைத்தபோது இனித்தது. சுதந்திரப் பறவைகளாய் நாங்கள் சுற்றித்திரிந்த அந்தக் காலம்தான், என் வாழ்வின் விலை மதிக்க முடியாத காலம் என்பேன்!.
இந்த வேளையில்தான் என் வாழ்வில் ஒரு சூறாவளி புகுந்தது!

(தாரகை ஜொலிக்கும்) 
தொடர்புக்கு:- 
thanjavurkavirayar@gmail.com
படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்