சினிமா எடுத்துப் பார் 15- நீலப்பட்டாடை கட்டி!

By எஸ்.பி.முத்துராமன்

‘வீரத்திருமகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண் டிருந்தோம். ராஜா ராணி கதை என்பதால் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான உடைகள், விக், அணிகலன்களைத் தேர்வு செய்வது முக்கியமானதாக இருந்தது.

கதாபாத்திரங்களின் தோற்றம், அங்க பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயக்குநர் திருலோகசந்தர் கலை இயக்குநர் சாந்தாராம் அவர்களிடம் கூறிவிடுவார். அவர் அதை உள்வாங்கிக்கொண்டு ஓவியமாக வரைந்து கொடுப்பார். அந்த மாதிரியை வைத்துக்கொண்டு நடிகர், நடிகைகளுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து மேக்கப் டெஸ்ட் எடுப்போம். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, எது சரியாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய் வோம்.

ஒகனேக்கலில் ‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பு. அனைவரும் அங்குபோய் சேர்ந்தோம். பலரும் பல அறைகளில் தங்க வைக்கப்பட்டார்கள். காட்டுக்குள் இருந்த ஒரு ஸ்பெஷல் அறையில் இயக்குநர், நடன ஆசிரியர் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, நான், உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகி யோர் தங்கினோம். இரவு நெருங்க நெருங்க ஒரே இருட்டு.

மிருகங்களின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், போகிறபோக்கில் வாட்ச்மேன், ‘இங்கே பேய் நடமாட்டம் இருக்கு சார்’ என்று சொல்லிவிட்டு போனதும் சிறிது பயத்தைத் தந்தன. இரவு 12 மணி. ‘‘பேய்… பேய்…’’ என்று ஒரு புரொடக்‌ ஷன் பாய் கத்த, அனைவரும் ஓடிப் போய் பார்த்தோம். உதவி இயக்குநர் ராஜேந்திரன் சட்டை இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு உருட்டுக்கட்டையோடு நின்றார். ‘‘என்ன ராஜேந்திரன், என்ன பண்றீங்க?’’ என்று கேட்டால், ‘‘எனக்கு மாந்தரீகம் தெரியும். பேயை விரட்ட நிற்கிறேன்’’ என்றார். அனைவரும் சிரித்துக்கொண்டே படுக்கச் சென்றோம்.

ஒருநாள் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டோம். அப்போது நடிகர் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘‘எல்லாரும் முதலாளி கார்லேயே ஏறப் போறீங்களே, என் காருக்கும் வாங்கப்பா’’ என்று கூப்பிட, நானும் ராஜேந்திரனும் அவர் காரில் ஏறிக்கொண்டோம். இயக்குநர் திருலோகசந்தரும் குமரன் சாரும், தயாரிப்பு நிர்வாகி மொய்தீனும் ஒரு காரில் புறப்பட்டார்கள். அவர்கள் கார் சென்றுவிட்டது. நாங்கள் பின் தொடர்ந்தோம். சாலையில் ஒரே கூட்டம்.

இறங்கி என்னவென்று பார்த்தால், இயக்குநர் சென்ற கார் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் பதறிப் போய் அந்த கார் அருகே போய் பார்த் தோம். கையில் அடிப்பட்டு ரத்தம் சொட்ட நின்றுகொண்டிருந்தார் திருலோக சந்தர். அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென் றோம். கை முறிந்திருக்கிறது என்று கட்டுப்போட்டார்கள். குமரன் சார் ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிடலாம் என்று சொன்னார். ‘‘கையில்தானே அடிபட்டிருக்கு. இதுக்காக படப் பிடிப்பை ஒத்திப்போட வேணாம்’’ என்று இயக்குநர் கடமை உணர்வோடு சொன்னார்.

மறுநாள் காலையில் இயக்குநர் குளிப்பதற்கும், உடைகள் அணிவதற்கும் உடன் இருந்து நான் குருசேவை செய்தேன். பேண்ட் போட முடியவில்லை அவரால். எனவே அவருக்கு வெள்ளை கைலியைக் கட்டிவிட்டேன். கைலி அணிந்த நிலையில் ‘ரோஜா மலரே ராஜகுமாரி…’ பாடலைப் படமாக்கத் தொடங்கினார் இயக்குநர். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு ஷாட்டாக பாட்டை எடுப்பதற்காக இயக்குநர் ‘கட்… கட்’ என்று சொல்லி பாட்டை நிறுத்தினார். படப்பிடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர், ‘‘யாருய்யா அந்த கைலி கட்டின ஆளு? பாட்டை கேட்கவிடாம கட்… கட்னு சொல்லிட்டே இருக்காரு’’ என்று குரல் கொடுத்தார். அதைக் கேட்ட இயக்குநர் சிரித்துக்கொண்டே, ‘‘முத்துராமன் அந்தப் பாட்டை ஒரு தடவை முழுசா போடச் சொல்லுங்க…’’ என்றார். முழுவதுமாக அந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட மக்கள் கைதட்டி ரசித்தார்கள். அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என்று அப்போதே எங்களுக்குத் தெரிந்து விட்டது.

ஒருநாள் செட்டியாரிடம் இயக்குநர் திருலோகசந்தர், ‘‘தண்ணீருக்கு நடுவே தாமரைப் பூவில் நாயகியும், அவரைச் சுற்றி 24 தாமரை இலைகளில் நடன மங்கைகளும் நின்று நடனமாடினால் வித்தியாசமாக பாடல் காட்சி அமையும் என்று நினைக்கிறேன்’’ என்று கூறினார். செட்டியார், கலை இயக்குநரிடம் இந்த விஷயத்தைக் கூற, அவர் ‘‘ரொம்ப சிரமம். இது சரியா வராது’’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால், செட்டியாருக்கு அந்த ஐடியாவை கைவிட மனமில்லை.

என்னிடத்தில் ‘ ‘முத்துராமா… ஆறுமுக ஆசாரியைக் கூப்பிட்டு வா’’ என்றார். அவர் வந்ததும், இயக்குநர் சொன்ன ‘தாமரை பூ ஐடியா’வை அவரிடம் சொல்லி, ‘‘இப்படி அமைக்க முடியுமா?’’ என்று கேட்டார். ஆறுமுக ஆசாரி வழக்கம் போல, ‘‘அஞ்சு நிமிஷத்துல பண்ணிடலாம் அப்புச்சி’’ என்றார். ‘‘இங்கே எல்லாரும் முடியாதுன்னு சொல்றாங்களே… எப்படி முடியும்னு சரியா சொல்லுப்பா’’ என்று செட்டியார் மீண்டும் கேட்டார்.

‘‘நம்ம ஊர்ல திருவிழா சமயத்துல தெப்பம் விடு றோம்ல. அப்படித்தான். நாலு பீப்பாய் களை ஒண்ணுசேர்த்து கட்டி, அதுமேல பலகையை அடிச்சா, தெப்பம் போல மிதக்கும். ஒரு பலகை மேல தாமரை பூ. அதைச் சுற்றி 24 பலகைகள்ல தனித் தனியா தாமரை இலைகளை அமைச்சா, டைரக்டர் கேட்ட தாமரை குளம் வந்துடும்’’ என்றார் ஆறுமுக ஆசாரி. அவரது தொழில் திறமையைப் பாராட்டிவிட்டு, வேலைகளை ஆரம் பிக்கச் சொன்னார் செட்டியார்.

இதையடுத்து, செட்டியாரே காரில் போய் தண்ணீர் சூழ்ந்திருக்கும் இடத்தைத் தேடத் தொடங்கினார். ஒருநாள் துரைப்பாக்கம் பேக்வாட்டர் ஏரியாவைப் பார்த்தவருக்கு, அந்த இடம் பிடித்துப் போனது. டைரக்டரையும், ஆறுமுக ஆசாரியையும் அழைத்துக் கொண்டுபோய் அந்த இடத்தைக் காட்டி னார். செட்டியார் காட்டிய இடத்தில் இயக்குநர் விரும்பிய தாமரைக் குளம் உருவானது.

இயக்குநர் திருலோகசந்தரும், ஒளிப்பதிவாளர் முத்துச்சாமியும், ஆறுமுக ஆசாரியிடம், ‘‘இந்தத் தாமரைக்குளத்தைப் படம் பிடிக்க ஒரு உயரமான ‘கோடா’ (பரண்) போட்டுக் கொடுங்கள்’’ என்று கூறியிருந்தார். படப்பிடிப்புக்கு போனபோது அந்த பேக்வாட்டர் பகுதியில் இருந்த பாலத்தையொட்டி 80 அடி உயரத்தில் ஒரு ‘கோடா’ போடப்பட்டிருந்தது. அதில் கேமரா வைப்பதற்காக 30 அடியில் ஒரு பலகை, 60 அடியில் ஒரு பலகை, 80 அடியில் ஒரு பலகை இருந்தது. எந்த உயரத்தில் வைத்து வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அந்த உயரத்தில் வைத்து டாப் ஷாட் எடுத்ததனால்தான் அந்தப் பாடல் காட்சி முழுமையாக வந்திருந்தது.

இப்போது இருக்கிற ‘அகேலா கிரேன்’ வசதியெல்லாம் அப்போது கிடையாது. மதிய சூரிய வெளிச்சத்தில் மட்டுமே அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் முத்துச்சாமி. இப்படி ஒரு வாரம் படமாக்கப்பட்ட ‘வீரத் திருமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘நீலப் பட்டாடைக் கட்டி’ என்ற அந்தப் பாடல் ரசிகர்களிடத்தில் ஏக வரவேற்பைப் பெற்றது.

பாடலைப் பற்றிச் சொன்னேன். சண்டைப் போடும் வீரனைப் பற்றி சொல்ல வேண்டாமா?

- இன்னும் படம் பார்ப்போம்...

முந்தைய அத்தியாயம்:>சினிமா எடுத்துப் பார் 14- உதாரண மனிதர் ஏ.வி.எம்.சரவணன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்