திரைப் பாடம் 26: சலாம் பாம்பே - குழந்தைகளை விழுங்கும் நகரம்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

பெங்களூருவில் 1988-ல் மருத்துவ உளவியல் படித்துக்கொண்டிருந்தபோது இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நள்ளிரவில் பைக்கில் திரும்பி வருகையில் அந்த நவீன நகரத்தில் வீடில்லாதவர்கள் பலர் சாலையில் உறங்குவதைப் பரிவுடன் பார்க்க வைத்தது. சாலைச் சிறுவர்களின் இரவு வாழ்க்கை பற்றியும் நினைக்க வைத்தது. பின்னர் எந்த ஊருக்குச் சென்றாலும் சாலையோரச் சிறார்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தார்கள். நம் பார்வையில் படும் மனிதர்களைப் பற்றி, நாம் பார்க்காத அவர்களின் வாழ்க்கைப் பக்கத்தை, ஒரு திரைப்படம் திறந்து காட்டும்பொழுது ஏற்படும் தாக்கம் அபரிமிதமானது. சலாம் பாம்பே என்னுள் மிக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய படம்.

மீரா நாயர் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் இது. நிஜமான சாலையோரச் சிறுவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து, அவர்களை மிக இயல்பாகப் பங்களிக்க வைத்ததால் இப்படம் பெரிதும் கவனம் பெற்றது. பட வெற்றிக்குப் பிறகு 1989-ல் சலாம் பாலக் அறக்கட்டளை என்ற அமைப்பை மீரா நாயர் நிறுவி சாலையோரச் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பணியாற்றிவருவது குறிப்பிடத் தகுந்தது.

அம்மாவைப் பிரிந்து

இந்தத் திரைப்படம் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது. உலகில் பல திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டையும் பெற்றது. ஆஸ்கருக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது படம். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலிலும் சாதனை படைத்த படம். உலகின் சிறந்த 1000 படங்களில் இதையும் ஒன்றாகத் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்திருந்தது.

அண்ணனின் அடக்குமுறை தாங்காமல் அவனது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்துவிடுகிறான் சிறுவன் கிருஷ்ணா. அவன் தாய் அவனைக் கண்டித்து அருகிலுள்ள கிராமத்துக்கு வரும் சர்க்கஸில் சேர்த்துவிடுகிறாள். ஐநூறு ரூபாய் சம்பாதித்து அண்ணனிடம் கொடுக்கும்போதுதான் தன்னைப் பார்க்க முடியும் என்று சொல்லிப் பிரிகிறாள்.

சர்க்கஸ் கூடாரம் ஒரு நாள் சொல்லப்படாமல் கலைக்கப்பட, பிழைப்புக்காக பம்பாய் நகருக்கு ரயிலேறுகிறான். நகரம் வந்தவுடன் கைக்காசு முழுவதும் பறிபோகிறது. திருட்டுப் பையன்களின் சினேகிதம் கிடைக்க, சிவப்பு விளக்குப் பகுதியின் நிழல் வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறான்.

போதைப் பொருளுக்கு அடிமையான சில்லம், ஒரு தேநீர்க் கடையில் கிருஷ்ணாவைச் சேர்த்துவிடுகிறான். சில்லமின் முதலாளி பாபா போதைப் பொருள் வியாபாரி. அவன் மனைவி பாலியல் தொழிலை மேற்கொள்பவள். மகளை அங்கு வளர்ப்பதில் விருப்பமில்லாதபோதும் பாபா அதைப் பொருட்படுத்தவில்லை. இந்தச் சூழலில் வாழும் கிருஷ்ணாவுக்கு ஐநூறு ரூபாய் சேமிப்பு என்பது சாத்தியப்படவில்லை.

பம்பாய் விழுங்கிய சிறுவன்

தொழிலுக்குப் புதிதாக வந்த சோலா சால் பாபாவால் பழக்கப்படுகிறாள். அவள் மீது மோகம் கொள்கிறான் பாபா. சோலா சாலை பாபாவிடமிருந்து காப்பாற்ற முயலும் கிருஷ்ணா பாபாவிடமே மாட்டிக்கொள்கிறான். அடி வாங்கி அங்கிருந்து ஓடிச் சில்லறை வேலைகளும் சில்லறைக் குற்றங்களும் செய்கிறான். ஒரு நாள் போலீஸில் பிடிபட்டு இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அங்கிருந்து தப்பி வந்து சோலா சாலைச் சந்திக்கிறான். தன்னுடன் தப்பி வருமாறு கோருகிறான். ஆனால், அதற்குள் பாபாவிடம் காதல் வசப்பட்டுவிட்டதாகச் சொல்கிறாள். ஒரு வேகத்தில் பாபாவைக் கொன்றுவிடுகிறான். பின் அம்மாவிடம் செல்ல வாய்ப்பில்லாமல் பம்பாய் எனும் நகரம் அவனை விழுங்கிவிடுகிறது.

நடிகர்களைக் கொடுத்த படம்

சிறுவன் ஷஃபிக் சையது சிறந்த குழந்தை நட்சத்திரமாக அந்த வருடம் தேர்ந்தெடுக்கப்படுகிறான். நிஜ வாழ்வில் பார்த்த யதார்த்தங்களைத் திரையில் கொண்டுவரும் அரிய வாய்ப்பு அந்தச் சிறுவனுக்கு. ஒரு காட்சியில்கூட நடிப்பு என்று சொல்ல முடியாதபடி நடித்ததே சாதனை என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பெரிதும் கவர்ந்தது முதல் முறை நான் திரையில் பார்த்த நானா படேகர்தான். (பாரதிராஜாவின் பொம்மலாட்டத்தில் இயக்குநராக நடிப்பாரே, அவரேதான்.) இளம் வயதில் அப்படியொரு இயல்பான திரை நடிப்பு எனச் சொல்லலாம். அதேபோல, போதைக்கு அடிமையான ரகுவீர் யாதவ். இவர்கள் எல்லாம் பெரிய அளவில் பின்னாட்களில் ஒப்பிட முடியாத நட்சத்திரங்களாகப் பிரகாசிக்க இந்தப் படம் பெரிய அடித்தளமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

இது வேறு உலகம்

சாலை ஒரு தனி உலகம். அதில் வசிக்கும் எண்ணற்ற மனிதர்கள், குறிப்பாகக் குழந்தைகள்; அனைவருக்கும் ஒரு கனவு உண்டு. அது கண்ணியமான வாழ்க்கை. ஆனால் பெரும்பாலோர்க்கு அது கிடைப்பதில்லை. அன்றாட வாழ்க்கையே சவாலாக உள்ளபோது ஒழுங்குமீறல்களும் குற்றங்களும் இயல்பாக நிகழ்கின்றன. வசதி படைத்தவர்களுக்கான வாழ்வியல் இலக்கணங்கள் விளிம்புநிலை மனிதர்களுக்குப் பொருந்தாது.

குற்றமெனும் மாயச் சுழலில் சிக்கும் சிறுவர்கள் அதிலிருந்து மீள்வது கடினம். ஆண்களைவிடப் பெண்களும் குழந்தைகளும்தான் குற்றச்சுழலில் சிக்கி மீள முடியாத பலிகடா ஆகிறார்கள். சிறுவர்கள் வளர்ந்து நிழல் உலகில் கலந்துவிடுகிறார்கள். சுழல் நிற்பதில்லை. குற்றங்கள் தொடர்கின்றன.

சட்டதிட்டம் சிறுவர்களைச் சுழலிருந்து வெளியே எடுக்க உதவும். சீர்திருத்தம், விடுதியில் நடப்பதைவிடச் சமூகத்தில் நடக்க வேண்டும். கல்வி, நிலையான வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம் போன்றவை அதற்கு உதவக்கூடும்.

27 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு துணிகரமான கருத்தை ஒரு யதார்த்தத் திரைப்படத்தின் மூலம் சொன்ன மீரா நாயரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கதை கிடைக்கவில்லை என அலையும் சினிமா இயக்குநர்கள் காரை விட்டு இறங்கிக் காலாற நடந்தால் இது போல ஆயிரம் கதைகள் கிடைக்கலாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்