திரைப் பார்வை: அக்னிக் குஞ்சு பொரித்த காக்கா முட்டை

By செல்லப்பா

நமது பண்பாட்டை விட்டு நாம் விலகும்போது எதிர்கொள்ள நேரும் துயரங்களைச் சூசகமாகச் சுட்டுகிறது காக்கா முட்டை. சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5 அன்று வெளியான இப்படம் எளிய மனிதர்கள் மீதான பரிவையும் அன்பையும் அக்கறையுடனும் கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறது.

இயக்குநர் மணிகண்டன் தான் சொல்ல விரும்பியவற்றைப் படமாக்கியுள்ள விதத்தால் அவை நீர் மேல் மிதக்கும் பனிக்கட்டிகளாக அல்லாமல் தெள்ளிய நீரோடையின் அடியில் தென்படும் கூழாங்கற்களாகக் கிடக்கின்றன. திருப்பாச்சி அரிவாளோடு அறிமுகமாகும் இயக்குநர்கள் மலிந்திருக்கும் சூழலில் திரைப்பட அறிவால் வென்றுள்ளார் இந்த மதுரைக்காரர். சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் குறித்துப் படமெடுத்தால் வட சென்னைக்குப் படையெடுப்பதுதான் நம் இயக்குநர்கள் வழக்கம். ஆனால் மணிகண்டனின் தேர்வோ தென்சென்னைப் பகுதியான சைதாப்பேட்டை.

அதன் அருகே 5 ஏக்கர் பரப்பில், 400 குடும்பங்கள் வசிக்கும் திடீர் நகர் என்னும் குப்பமே படத்தின் களம். அதன் மையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்த சின்ன காக்கா முட்டை. அவனுடைய அண்ணன் பெரிய காக்கா முட்டை. இந்தக் குடும்பத்தை வைத்துக்கொண்டுதான் உலகமயமாக்கலின் தந்திரக் கண்ணிகளைப் புலப்படுத்துகிறார் மணிகண்டன்.

தனிநபர் யாரையும் இயக்குநர் குற்றப்படுத்தவில்லை. ஆனால் அவர்களை இயக்கும் அமைப்புகள் எத்தகையவையாக உள்ளன என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.

தற்காலச் சூழலில் நேர்மையின் அபத்தத்தைச் சொன்னது 2012-ல் வெளியான ‘சூது கவ்வும்’. ஆனால் ‘காக்கா முட்டை’ என்றென்றைக்குமான நேர்மையின் பக்கம் சாய்கிறது. நேர்மை காலாவதியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் நேர்மையைத் தூக்கி நிறுத்தியுள்ளார் இயக்குநர். தற்கால அரசியல் தலைவர்களின் நேர்மையோடு ஒப்பிட்டால் காக்கா முட்டை சகோதரர்களும் அவர்களுடைய அம்மாவும் எவ்வளவு நேர்மையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ரயிலில் செல்பவரின் செல்போனைத் தட்டிப் பறிக்க முயல்கிறான் பெரிய காக்கா முட்டை. ஆனால் அது அவனால் முடியவில்லை. அவனது நேர்மை அவனைத் தடுத்துவிடுகிறது. அதே சமயம் மனித வாழ்வியலுக்குத் தேவையான தந்திரமும் அவனிடம் இருக்கிறது. காக்காய்க்குச் சோறு வைத்து அதன் கவனத்தைத் திசை திருப்பி அதன் முட்டையைத் திருடிக் குடிக்கிறான். அதை அவன் ஆயாவும் புன்னகையுடன் அங்கீகரிக்கிறாள்.

சமூகத்தின் இரு வேறு பிரிவுகளில் வசிக்கும் சிறுவர்கள் வாழ்க்கையை இயக்குநர் அவர்களின் பண்புநலன்களுடன் அழகாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சின்ன காக்கா முட்டையும் பெரிய காக்கா முட்டையும் பணக்காரச் சிறுவனான லோகேஷை எப்போதும் வேலிக்கு வெளியே நின்றே சந்திக்கிறார்கள். லோகேஷை அவன் தந்தை பராமரிக்கிறார். சிறுவர்களைத் தாய் பராமரிக்கிறாள். லோகேஷ் வீட்டு நாயின் விலை ரூ. 25,000. ஆனால் 30,000 ரூபாய் இருந்தால் சிறையில் இருக்கும் காக்கா முட்டையின் அப்பா வெளியே வந்துவிடுவார்.

லோகேஷ் உண்மையான வாட்ச் அணிந்திருக்கிறான். ஆனால் சின்ன காக்கா முட்டைக்குக் கிடைப்பதோ பொம்மை வாட்ச். பணக்காரச் சிறுவர்களுக்கு சல்யூட் அடிக்கிறான் பீட்சா கடை செக்யூரிட்டி; கடையின் சிப்பந்தியோ அவர்களிடம் பணிவு காட்டுகிறான். ஆனால் பீட்சா வாங்கப் பணத்துடன் சென்ற பெரிய காக்கா முட்டைக்குக் கிடைத்ததோ பலமான அடியும் அவமானமும். பீட்சா சாப்பிடும் கனவு இருந்தாலும் லோகேஷ் தரும் எச்சில் பீட்சாவைச் சாப்பிடப் பெரிய காக்கா முட்டைக்குத் தன்மானம் இடம்தரவில்லை. இப்படியான இடங்களில் இயக்குநரின் ஆழ்மனம் எளிய மனிதர்களின்பால் சாய்வது தெளிவாகிறது.

மரம் வெட்டப்படும் காட்சி தேர்ந்த சிறுகதைக்கு இணையானது. சிறுவர்கள் ஆசையாய் விளையாடும் மைதானம் அது. அங்கே உள்ள பெரிய மரத்தில் காக்கா கூடு கட்டியுள்ளது. பீட்சா ஸ்பாட் அமைக்க அந்த இடத்தை விலைக்கு வாங்கிவிடுகிறார் பெரிய மனுஷனான சிவசிதம்பரம். சோகமாகப் பார்க்கும் சிறுவர்கள், கா… கா… எனக் கரைந்தபடி மரத்தின் மேலே வட்டமிடும் காக்கைகள், இதைப் பற்றிய கவலையற்று மரத்தை அறுத்துப் போடும் இயந்திரத்தின் ராட்சத பிளேடு ஆகிய ஷாட்கள் உதவியுடன் நெடுதுயர்ந்த நின்ற அந்த மரம் தடாலெனத் தரையில் விழவைக்கப்படுகிறது.

அந்த இழப்பு புரியாமல் மரம் விழுந்த பின்னர் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள் சிறுவர்கள். இனிமேல் காக்கா முட்டையே குடிக்க முடியாது போடா என ஒருவன் கிண்டலடிக்க, “வெளையாட மட்டும் முடியுமா?” எனக் கேட்கிறான் பெரிய காக்கா முட்டை. “ஒரே நிமிஷம்தான் ஆயா ‘கொர்ர்’ருன்னு அறுத்துத் தள்ளிட்டாங்க” என்று பெரிய காக்கா முட்டை ஆயாவிடம் விசனப்படுகிறான். சின்ன காக்கா முட்டையோ “காக்கா நைட்லாம் எங்கடா போகும்?” என அப்பாவியாக வினவுகிறான். இந்தக் காட்சி, பீட்சாவுக்கு மாற்றாக ஆயா தோசை சுடும் காட்சி போன்றவை இயக்குநரின் படைப்பூக்கத்துக்குச் சான்றுகள்.

படத்தின் எந்த ஒரு ஷாட்டும் அநாவசியமானது என்று ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைத் தாங்கியிருக்கின்றன. மறைந்த படத் தொகுப்பாளர் கிஷோரின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு படத் தொகுப்பில் பளிச்சிடுகிறது. சின்ன காக்கா முட்டை இரவில் தூக்கத்தில் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தைப் “பெரிய மனுஷனாயிட்டா நிறுத்திறப்போறான்…” என்கிறாள் ஆயா. அவள் இறந்த அன்று இரவில் சின்ன காக்கா முட்டை மூத்திரம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுகிறான். அவன் “பெரிய மனுஷனாயிட்டான்” என்கிறான்

பெரிய காக்கா முட்டை. இண்டர் கட்டில் ஆயா சொன்ன ஷாட் வரவில்லை. அதே போல் இறுதிக் காட்சியிலும் ஆயா தோசை சுடும் ஷாட் வரவில்லை. ஆனால் பார்வையாளர் மனதில் அவை தோன்றிவிடுகின்றன.

பழரசம் கதாபாத்திரத்துக்கும் சிறுவர்களுக்குமான பிணைப்பு நெகிழ்ச்சியானது. தான் நிறைய சம்பாதிக்கும்போது பழரசத்துக்கும் பணம் தர வேண்டும் என்கிறான் சின்ன காக்கா முட்டை. தந்தை எதற்காகச் சிறையிலிருக்கிறார் என்பதே சிறுவர்களுக்குத் தெரியவில்லை.

இது குறித்துப் பழரசம் கேட்கும் காட்சியில் “உனக்கெதுக்குப் பழரசம்”னு பேரென்று படக்கெனச் சின்ன காக்கா முட்டை கேட்கிறான். இது பதிலுக்கான கேள்வி அல்ல. இந்தக் கேள்வியே ஒரு பதில்.

“எந்த மொகரக் கட்டைக்கும் மதிப்பு, போட்டுருக்கிற சொக்காய வச்சுத்தானாம்”, “இல்லாதவங்க வீட்டு முன்னாடி கடையைப் போட்டு உசுப்பேத்தினு” போன்ற வசனங்கள் எளிமையானவை என்றாலும் உக்கிரமானவை.

குப்பத்தில் சிறு சிறு ஏமாற்று வேலைகளைச் செய்து பிழைத்து வருகின்றனர் ரமேஷ் திலக்கும் யோகி பாவும். ‘எத்தித் திருடும் அந்தக் காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா’ எனும் பாரதியின் வரிகளைத்தான் நினைவுறுத்துகிறார்கள். அவர்களை எம்.எல்.ஏ. கமிஷன் தராமல் ஏமாற்றுகிறான். வட்டிக்காரன் பணத்தைப் பிடுங்கிக்கொள்கிறான். போதாக்குறைக்கு டாஸ்மாக் வேறு அவர்கள் பணத்தைப் பங்குபோடுகிறது. சிறுவர்கள் அடி வாங்கும் காட்சி மூலம் சம்பாதிக்கலாம் என்று முயலும்போதும் செய்தி அலைவரிசை அவர்களை முந்திக்கொள்கிறது. சின்ன காக்கா முட்டையையும் பெரிய காக்கா முட்டையையும் ஓரத்தில் ஒதுங்கிப்போக, செய்தியாளர் அவர்கள் பற்றி முழங்கும் காட்சி, ஊடகத்துக்கும் உண்மைக்குமான இடைவெளியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

மிகையற்ற நடிப்பு, தெளிவான திரைக்கதை போன்ற அம்சங்களைக் கொண்ட இப்படம் தேசிய விருதுக்கான முழுத் தகுதி பெற்றது. அதே நேரத்தில் விருதுக் குழு எவ்வளவு தட்டையானது என்பதன் அடையாளம் இதற்குக் கிடைத்த சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருது. சமூக விழிப்புணர்வு கொண்ட, சமகால அரசியலை விமர்சிக்கிற ஒரு படத்தை, இது குழந்தைகள் படம் என்று மட்டும் புரிந்துகொள்வது சிறுபிள்ளைத் தனமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

32 mins ago

உலகம்

39 mins ago

இந்தியா

50 mins ago

கார்ட்டூன்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்