என் ‘ஆட்டோகிராப் நீளமானது: மனம் திறக்கும் சிம்பு

By கா.இசக்கி முத்து

எப்போதுமே பேட்டி என்றவுடன், எதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுச் செல்வோம். ஆனால் சிம்பு மட்டும் விதிவிலக்கு. நாம் ஒன்றை நினைத்துச் சென்றால், முற்றிலும் வேறொன்றாக அவருடைய பேட்டி அமையும்.

'வாலு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காகத் தயாராகிக்கொண்டிருந்தவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து...

இரண்டு வருட இடைவெளி விட்டு வரும் 'வாலு' எப்படி வந்திருக்கு?

ரொம்ப நாளா பழைய சிம்புவைக்காணும்னு நினைக்கிற வங்களுக்கு ‘வாலு' சரியான படமா இருக்கும். ‘வாலு' படத்துல தோணுறதை உடனே பேசுற கேரக்டர். படத்தின் வசனங்கள் முக்கியமானவை.

அப்படீன்னா பஞ்ச் டயலாக் நிறைய இருக்கா?

படம் முழுவதுமே பஞ்ச் டயலாக்குகள் தான். ‘பொண்ணுங்க கொளத்து தண்ணில இருக்கிற கொக்கு மாதிரி, தண்ணி வத்தி போயிடுச்சுன்னா கொக்கு பறந்து போயிடும். ஆனா பசங்க அதே தண்ணில இருக்குற மீன் மாதிரி, தண்ணி வத்தி போயிடுச்சுன்னா, மீன் அங்கே செத்துடும்'இந்த மாதிரி வசனங்கள் நிறைய இருக்கு.

2 வருட இடைவெளி ஏற்பட்டுருச்சே, அப்போ என்ன பண்ணீங்க?

முதல்ல எனக்குப் புரியல, ஏன் நமக்கு மட்டும் இப்படியிருக்கு அப்படின்னு யோசிச்சேன். நிறைய பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். வந்தப்பவே ஓவரா உழைச்சேன். 28 வயசு ஆனதுக்குப் பிறகு, இப்போ கடைசி 2 வருஷத்தைத்தான் எனக்குன்னு எடுத்துக்கிட்ட நேரமா நினைக்கிறேன். இந்த நேரம் எனக்கு பர்ஸனலா தேவைப்பட்டுச்சு. இந்த நேரத்துல என்னோட படங்கள் வெளியாகாதது வருத்தம்தான்.

நீங்க நடிக்கவில்லைன்னாலும், ஒரு பாடகரா உங்களுடைய பாடல்கள் வந்துக்கிட்டே இருந்ததே?

எதுக்கு மற்ற படங்களுக்குப் போய் பாடுறீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க. பொதுவா நிறைய பேர் மற்றவங்க இசையில பாட மாட்டாங்க. ஆனா எனக்கு அப்படி எண்ணமில்ல. மற்றவங்க மாதிரி நான் எதுக்கு இருக்கணும். நடிகர்களை எடுத்துக்கீட்டிங்கன்னா, அவங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது, எனக்குப் பாடப் பிடிக்கும்.

இப்போ நான் ஒரு ஸ்டார் ஆயிட்டதுனால, மற்ற நடிகர்கள் படங்களில் பாடினா அவங்களுக்கு விளம்பரப்படுத்த உதவியா இருக்கு. 2 வருஷம் படம் வெளியாகாவிட்டாலும், எனக்கு என்னோட ரசிகர்கள் இருக்காங்க. ஆனால் புதுசா வர்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் இவங்களுக்கு எல்லாம் யாருமே இல்லை. என்னால ஒரு நல்ல விஷயம் நடக்குதுன்னா, அதைப் பண்றதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன்.

சிம்பு காதலிக்கிறார் அப்படின்னாலே கண்டிப்பா பிரிவுல முடியுதே. என்ன காரணம்?

காரணம் எப்படிச் சொல்றதுனு தெரியல. ‘ஆட்டோகிராப்' படம் பார்த்திருப்பீங்க, அதுல இயக்குநர் சேரனுக்கே 3 காதலிகள் இருப்பாங்க. நான் சிம்புங்க. கொஞ்சம் யோசிங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல இப்படி 3 காதலிகள் சேரனுக்கு இருக்குறப்போ எனக்கு இப்போ 30 வயசாகுது. நானும் ரொம்ப சின்ன வயசுலதான் லவ் பண்ணினேன்.

இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமான எமோஷன் லவ் தான். லவ் பண்றப்போ நம்ம நிறைய விஷயங்கள கத்துக்க முடியுது. கத்துக்கிட்ட விஷயங்கள் நம்மளோட வாழ்க்கைக்கு பாசிட்டிவா தேவைப்படுது, இல்லன்னா நெகட்டிவா தேவைப்படுது. சில பேரு காதல்ல ஜெயிச்சது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கு. சில பேருக்கு காதல்ல தோற்றது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கும். எல்லாருக்குமே லவ் ஒரு அனுபவம்தான். பலர் அதை உபயோகிக்காம, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிறாங்க. நான் அதை சரியா உபயோகப்படுத்தி இருக்கேன்னு நினைக்கிறேன்.

இவ்வளவு பேசுற சிம்பு நல்லவரா, கெட்டவரா?

சரியோ, தப்போ நான் ஒரு விஷயம் பண்றேன்னா அந்த விஷயம் உடனே போய் ரீச்சாகுது. மத்தப்படி யாருக்கும் நடக்காத விஷயங்கள் ஒண்ணும் எனக்கு நடக்கல. அதனால் நல்லவரா, கெட்டவராங்கிற கவல எனக்கு இல்ல.

உங்களைப் பற்றி வர்ற விமர்சனங்களை எல்லாம் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டே பேசுற மாதிரியே தெரியுதே?

சரிங்க. அப்படியே வைச்சுக்கோங்க. அதனால் என்ன பலன் இருக்கு. 10 பேர் எக்ஸ்டராவா என்னோட படத்தை பாத்துருவாங்களா? இல்லன்னா இன்னும் 10 பத்திரிகைல என்னைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமா எழுதுவாங்களா? ஒண்ணுமே கிடையாது.

என்னை விமர்சனம் பண்றாங்கன்னா, அது அவங்களோட பிரச்சினை. என்னோட பிரச்சினையே கிடையாது. ஒரு கட்டத்துல நாம என்ன பேசினாலும் தப்பாகுது, நாம இப்படி இருக்கக் கூடாது போல அப்படின்னு நான் என்னை மாத்தி மாத்தி ஒரு கட்டத்துல தான் என் தவறை உணர்ந்தேன். நான் என்னையே இழந்துட்டேன். இப்போ நீங்க கேட்குறீங்க இல்ல, உண்மையிலயே சிம்புவை கடந்த 2 வருஷமா காணும். நான் இருந்ததுதான் சரி, இவங்களுக்காக மாறி நான் ஏமாந்து போயிட்டேன். அதுதான் என்னோட பிரச்சினை. இப்போ நானா வெளியே வரணும். நான் சாதாரணமாவே நிறைய பேசுவேன். இப்போ நானாவே வந்தா என்ன பேசுவேன்னு யோசிச்சுக்கோங்க.

நீங்க விஜய்க்கு நண்பர், அஜித்தின் தீவிர ரசிகர். இரண்டு ரசிகர்களையும் எப்படிச் சமாளிக்குறீங்க?

இந்தப் படத்துலயே அஜித் ரசிகராதான் வர்றேன். வளர்ந்து வர்ற வரைக்கும்தான் அவரு இவருன்னு பேசுவாங்க. ரெண்டு பேருமே வளர்ந்து வந்துட்டாங்கன்னா தப்பா பேச மாட்டாங்க. ஒரு கட்டதுல எம்.ஜி.ஆர். ரசிகன், அப்புறம் ரஜினி ரசிகன், இப்போ அஜித் ரசிகன். இதை நான் சொன்னா விஜய் ரசிகர்கள் என்னைத் திட்டுவாங்களேன்னு, விஜய், அஜித் ரெண்டு பேருக்குமே நான் ரசிகர்ன்னு பொய் சொல்ல விரும்பல. பர்சனலா எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும்.

ஆனால், என்னையும் மீறி திரையில பாக்குறப்போ கை தட்டி, விசிலடிக்குறது அஜித் சாருக்கு மட்டும்தான். அதற்காக எனக்கு விஜய் சாரைப் பிடிக்காதுனு அர்த்தம் கிடையாது.

பேமிலி, குழந்தைங்க இதுல எல்லாம் சிம்புவைப் பாக்குறது எப்போ?

பேமிலி, குழந்தைங்க... கேட்க நல்லாயிருக்கு. அதானே எல்லாரும் பண்றாங்க. உங்களுக்கு எல்லாம் கல்யாணம் செட்டாகுது. எனக்கு செட்டாக மாட்டேங்க்குது. எனக்கு முதல்ல கல்யாணம் செட்டாகுமா, செட்டாகாதான்னு தெரியணும். வாழ்க்கைல இப்போ தான் டிரான்சிஷன் கட்டத்துல இருக்கேன். ஆன்மிகத்துல போயிட்டு இருக்கும்போது, என்னை நம்பி இருக்குறவங்கள நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? நான் பண்றத நீயும் பண்ணணும், உனக்கு அது புரியணும்னு நான் ஒரு கட்டதுக்கு மேல சொல்ல முடியாது. இரண்டாவது நான் தனியா இருக்கும்போதுதான் ஒரு சில விஷயங்கள் பண்ண முடியும். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சுதான், கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்கணும். இப்போ இருக்குற சூழ்நிலையில், கல்யாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

36 mins ago

க்ரைம்

42 mins ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்