கீழே போனால்தான் மேலே வர முடியும்: நடிகர் சூர்யா சிறப்பு பேட்டி

By மகராசன் மோகன்

‘இதுவரை நான் நடிக்காத களம். அதனால் இந்த வகைக் கதைக்குப் புதிதாக என்னவெல்லாம் கொடுக்கலாம் என்பதை நானும், வெங்கட் பிரபுவும் விவாதித்தோம். எங்களது தனிப்பட்ட ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டோம்’ என்று கதை மீது நம்பிக்கை கொண்ட நாயகனாகப் பேச ஆரம்பித்தார் ‘மாஸ்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா.

தயாரிப்பாளர் அவதாரம், மனைவி ஜோதிகாவின் மறு பிரவேசம் என்று கோடையிலும் குளிர்ச்சி குறையாத உற்சாகத்துடன் நம்முடன் அவர் உரையாடியதிலிருந்து..

சூர்யா, வெங்கட் பிரபு கூட்டணி உருவானது எப்படி?

இது ஆக்‌ஷன் படம். மாசிலாமணி, ஷக்தின்னு எனக்கு இரட்டை வேடம். மாசிலாமணியோட ஷார்ட் ஃபார்ம்தான் ‘மாஸ்’. குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் திடீர் திருப்பங்கள். அவை அவனை எங்கங்கே கூட்டிக் கொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதுதான் படம். வெங்கட்பிரபு எப்பவுமே மாறுபட்ட படங்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

‘சென்னை 28’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ இப்படி அவரோட படங்களோட ஸ்டைலே தனி. ‘மாற்றான்’ படத்திற்கு முன்பே நானும், வெங்கட் பிரபுவும் இணையும் சூழல் உருவானது. ஒரு கட்டத்துல அது சரியாக அமையவில்லை. ஆனால் தொடர்ந்து புதுப்புது ஐடியாக்களைப் பேசிக்கொண்டே இருப்போம்.

அப்படித்தான் ஒரு முறை ‘மாஸ்’ படத்தின் ஐடியாவைப் பகிர்ந்துகொண்டார். ‘அட இதைத் தொடலாமே’ என்று குழப்பம் இல்லாமல் முடிவெடுத்தோம். நானும் இதுவரைக்கும் இந்த மாதிரி படம் பண்ணினதில்ல. வெங்கட் பிரபுவுக்கும் இந்தக் களம் புதுசு.

‘மாஸ்’ ஒரு பேய்ப் படம் என்று படத்தின் முன்னோட்டம் சொல்லாமல் சொல்கிறதே..

அமானுஷ்யம், திகில், பேய் என்று ஹாரர் படங்கள் தமிழில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் பெரிய பட்ஜெட்டில் ஒரு திகில் படம் வந்திருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்வேன். வெங்கட் பிரபுவும் நானும் கதை விவாதத்தின்போது இது குழந்தைகளுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதாவது குழந்தைகளுக்கும் கதை தெளிவாகப் புரிய வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் ஆக் ஷன் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை நீக்கினோம். இப்படியொரு படத்தை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கலர்ஃபுல்லாக மாற்றி அமைத்திருக்கிறார். அவருடன் ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படங்களில் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். அபாரமான திறமைசாலி அவர்.

இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி எப்போதுமே பெரிய வெற்றி கொடுக்கும் கூட்டணி. அவர்கள் சேரும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் கிடைத்துவிடும். இது பின்னணி இசைக்கான படம். யுவன் பின்னி எடுத்திருக்கிறார்.

நயன்தாரா பற்றி?

படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கண்கள், முகத்தில் உணர்வுகளை நன்றாகப் பிரதிபலிக்கிற நடிகை. அது அவங்க ஸ்பெஷல். இந்தப் படத்திலும் கலக்கியிருக்காங்க.

அஞ்சான் கடும் விமர்சனத்தைச் சந்தித்ததே?

கீழே போனால்தான் மேலே வர முடியும். ஒவ்வொரு முயற்சியின்போதுமே வித்தியாசமாக இருக்கும் என்றுதான் தொடங்குகிறோம். ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘சிங்கம்’ மாதிரியான கதைகளைத் தேர்வு செய்ததும் நான்தான். ஆனால், சில நேரங்களில் எட்ட முடியாமல் போகிறது. அஞ்சானை மறக்கடிக்கும் முயற்சியாக மாஸைப் பார்க்கிறேன்.

ஜோதிகா மறுபடியும் நடிக்க வந்தாச்சு..!

ஆமா.. தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட் வந்துகொண்டே இருக்கு. ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு ரசிகைகள் பாராட்டுறாங்க. ஜோதிகாவை மீண்டும் திரையில பார்க்கிறதுக்கு நானும் ஒரு காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகளை ஜோதான் எடுத்தாங்க. படத்தோட இயக்குநர் ரோஸன் ஆண்ட்ரூஸ் தமிழ் வாழ்க்கை முறைக்குத் தகுந்த மாதிரி பல மாற்றங்களைச் செய்தார்.

கதையைக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி, “அவர் இதுமாதிரி படத்துக்குத்தான் இசையமைக்க வேண்டும்.” என்று நெகிழ்ந்து சொன்னாங்க. இது பெண்களுக்கான படம் மட்டும் அல்ல. ஆண்களுக்கான படமும்கூட.

டிவிட்டரில் இணைந்திருக்கிறீர்களே...

புதிய விஷயங்கள் வரும்போது அதிலிருந்து விலகியிருக்க முடியாது. எல்லாப் பொழுதுகளுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புவோம். இல்லையென்றால் மகிழ்ச்சியைத் தேடி ஓடுவோம். இப்படி நம்மைச் சுற்றிச் சுழலும் விஷயங்களில் சிலவற்றை இங்கே உடனுக்குடன் சொல்லக் கூடிய சாத்தியத்தை டிவிட்டர் உருவாக்கியிருக்கிறது.

நீங்கள் தொடங்கியிருக்கும் பட நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களை அறிவிக்கிறது…

நான் தனியாகத் தயாரிக்கிற படங்கள் கமர்ஷியல் படங்களாக இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற பாதையில் எனது பட நிறுவனம் பயணிக்கும். குழந்தைகள், குடும்பம் சார்ந்த படங்களை எடுப்பது தற்போதைய திட்டம். ஆண்டுக்கு இத்தனை படம் எடுத்தே ஆக வேண்டும் என்று அவசர அவசரமாகப் படத்தை எடுக்கப்போவதில்லை. அவசரத்தில் ஏதோ ஒரு படத்தைத் தயாரிப்பதிலும் எனக்கு இஷ்டமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்