கான் திரைவிழா: அங்கீகாரம் பெற்ற அகதி

By ஷங்கர்

தன் சொந்த மண்ணின் இனப்பெரும் பான்மை வாதத்தால் உரிமைகள், உடைமைகள், உறவுகளை இழந்து இன்று உலகமெங்கும் அகதிகளாகப் பரவியிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். இவர்களது நாற்பதாண்டு காலத் துயரங்களை உலகம் அறியச் செய்துள்ளது பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’.

’எ ப்ராஃபெட்’, ’ரஸ்ட் அண்ட் போன்’ போன்ற சிறந்த திரைப்படங்கள் மூலம் அறியப்பட்ட பிரெஞ்சு இயக்குநர் ழாக் அடியார்டு இலங்கையிலிருந்து பிரான்சுக்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து இவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான ‘தங்கப் பனை’ கிடைத்துள்ளது. இதனால் இத்திரைப்படத்துக்கு மட்டுமின்றி ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் உலகளாவிய கவனம் கிடைத்துள்ளது.

2009-ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தங்களின் சகாக்களின் சடலங்களை எரிக்கின்றனர். தப்பியவர்கள் குடிமக்களின் உடைகளை அணிந்து ஜனத்திரளோடு கலந்து தப்பிக்க முயல்கின்றனர். அவர்களில் ஒருவன்தான் சிவதாசன். இவன்தான் ‘தீபன்’ படத்தின் நாயகன். அடுத்த காட்சியில், அகதிகள் முகாமில் ஒரு இளம்பெண், அநாதைக் குழந்தை ஒன்றைத் தேடி அலைகிறாள்.

தொலைந்த ஒரு குடும்பத்தின் மூன்று பாஸ்போர்ட்டுகள் அந்தப் போராளியையும், இளம்பெண்ணையும், ஒரு குழந்தையையும் ஒரு குடும்பம்போல் சேர்க்கிறது. அந்த பாஸ்போர்டின்படி, முன்னாள் விடுதலைப்புலி சிவதாசன், தீபன் என்ற குடும்பத் தலைவனாக மாறுகிறான். இளம்பெண் அவனுடைய மனைவியாகவும், அநாதைக் குழந்தையோடு பிரான்சுக்கு அகதிகளாகச் செல்கிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அந்நியராக இருப்பவர்கள் புதிய நாட்டில், புதிய சூழ்நிலைகளில் மொழியும் தெரியாமல் எப்படி ஒரு குடும்பமாக நெருக்கமாக வாழ்கிறார்கள். அவர்களுக்குள் உறவுகள் எப்படி முளைவிடுகின்றன.

பிரான்ஸ் போன்ற நாட்டின் அகதிகள் குடியிருப்பில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், அங்குள்ள குற்றச்சூழல், வன்முறைப் பாதைக்கு மீண்டும் தள்ளப்படும் நிலைமை ஆகியவற்றை மிக அழுத்தமாக இயக்குநர் ழாக் அடியார்டு ‘தீபன்’ படத்தின் வழியாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து, பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவரும், தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான ஷோபா சக்திதான் ‘தீபன்’ படத்தின் நாயகன். லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் ஏற்கனவே நடித்திருந்தாலும், தீபன் திரைப்படம் சர்வதேசப் பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த நடிகனாக வரவேற்புப் பெற்றதை ஆங்கில ஊடகங்கள் பதிவுசெய்துள்ளன. யுத்த பூமியிலிருந்து வெளியேறி தொலைதூரம் வந்துவிட்டாலும் யுத்தத்தின் ஓலத்தை இதயத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் பாத்திரமாக ஷோபா சக்தி பிரமாதமாக வெளிப்பட்டுள்ளார்.

தீபனின் ‘மனைவியாக’ நடித்திருக்கும் காளீஸ்வரி ஸ்ரீ நிவாசனும் கான்ஸ் திரைப்பட விழாவில் சேலை கட்டிய தமிழச்சியாகச் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்றுள்ளார். இவர் சென்னையைச் சேந்த நவீன நாடக நடிகை. இதுதான் அவர் நடித்த முதல் முழுநீளத் திரைப்படம். சூழ்நிலையின் நெருக்கடியால் ஒருவனுக்கு மனைவியாகவும் குழந்தைக்குத் தாயாகவும் ‘வாழ’ வேண்டிய நிர்ப்பந்தத்தில் தனது உண்மையான சுயமே குழம்பிப் போன பெண்ணாக இவர் அற்புதமாக நடித்துள்ளதாகத் திரைப்பட விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

ஐரோப்பாவில் ஈழத் தமிழ் அகதிகள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதுடன், அந்நாட்டு அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதுடன், அகதிகள் என்றால் யார்? அவர்கள் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதையும் இப்படம் ஐரோப்பிய மக்களுக்கு உணர்த்தும் என்கிறார் ஷோபா சக்தி.

“ஒரு சமூகத்தில் வித்தியாசமான நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதன் மீதுதான் எனது கவனம் இருந்தது. நாம் ஒரு கஃபேயில் அமர்ந்திருக்கும்போது, நமக்கு ரோஜா விற்பவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இந்தப் படம் மூலம் அவர்களின் நிலை மாறினால் நன்றாக இருக்கும்” என்கிறார் தீபன் படத்தின் இயக்குநர் ழாக் அடியார்டு.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்