சினிமா தொழில்நுட்பம் 15- ஓங்கி அடிச்சா அது கிராஃபிக்ஸ் காட்சி!

By திரை பாரதி

நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் என்றாலும் நவராத்திரி பட சிவாஜி என்றாலும் இரட்டை வேடப் படங்களை எடுக்க அன்று ‘பிளாக் மாஸ்க்’ முறை என்ற தந்திர உத்தி பயன்பட்டது. இந்த முறையில் ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரட்டை வேடக் காட்சியை உருவாக்கக் கடுமையாகச் சிரமப்பட்டனர்.

ஆனால் ‘மாற்றான்’ படத்தில் சூர்யா ஏற்ற அகிலன் விமலன் வேடங்கள் என்றாலும் ‘தசாவதாரம்’ படத்தில் கமல் ஏற்ற வேடங்கள் என்றாலும் ஒரே நடிகர் நடிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் கதைப்படி ஒரே காட்சியில் தோன்ற வேண்டும் என்றால் அதற்கு கம்போசிட்டிங் உத்தி நேரத்தை வீணடிக்காமல் கைகொடுக்கிறது. ‘கிரீன் மேட்’ பின்னணியில் தனித் தனியே படம்பிடித்து’ கம்போசிட்டிங் மூலம் சுலபமாக ஒரே காட்சியில் இன்று இணைத்துவிட முடிகிறது.

கம்போசிட்டிங் எனும் அற்புதம் அறிமுகமாகவதற்குச் சற்று முன்புவரை இரண்டு காட்சிகளை ஒன்றாக இணைக்க, படம்பிடிக்கப்பட்ட காட்சியில் எது மட்டும் தேவையோ அதை மட்டும் கம்ப்யூட்டர் மூலம் வெட்டியெடுக்கும் ‘ரோட்டோஸ்கோப்பிங்’ (Rotoscoping) முறை பயன்படுத்தப்பட்டது. இம்முறை இன்னும்கூட சிலவேளைகளில் பயன்பட்டாலும், படம்பிடிக்கப்பட்ட ஒவ்வொரு பிரேமாக கட் அவுட் செய்து வெட்டியெடுக்க வேண்டும் என்பதால் பொறுமையிழந்து வெறுத்துப்போனார்கள் கிராஃபிக்ஸ் கலைஞர்கள்.

ஆனால் கம்போசிட்டிங் முறையில் ‘நீலம்’ அல்லது ‘பச்சை’ ஆகிய இரண்டு வண்ணங்களில் ஏதாவது ஒரு வண்ணத்தில் திரைச்சீலை பின்னணி அமைத்துப் படம்பிடிக்கும்போது, அந்தக் காட்சியின் பின்னணியாக இருக்கும் வண்ணத்தை டிராக்கிங் என்ற டூல் மூலம் நீக்கிவிட்டு(tracking for compositing), எஞ்சியிருக்கும் நடிகரை மட்டும் மற்றொரு காட்சியில் அல்லது பின்னணியில் சுலபமாகப் பொருத்த முடிகிறது.

தனித்தனியே எடுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளை ஒரே காட்சிபோல் துல்லியமாக இணைக்க கம்போசிட்டிங் பயன்படும் அதேநேரம், கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத நடிகர்களின் வீரதீர சாகஸங்களையும், கோடிகளில் செலவழிக்கத் தேவையில்லாத அனிமேஷன் செட் பிரம்மாண்டங்களையும் கம்போசிட்டிங் மூலம் காட்சியில் இணைத்துவிட முடியும்.

உதாரணத்துக்கு ‘சிங்கம் 2’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கம்போசிட்டிங் மூலம் துல்லியமாக ஒட்டுப்போடப்பட்ட பல காட்சிகள் இருப்பதை ரசிகர்களே நினைத்தாலும் கண்டறிய முடியாது. காவல் அதிகாரி துரைசிங்கம் சூர்யாவைத் தாக்க வருகிறார் சர்வதேச வில்லன் டேனி சபானியின் உள்ளூர் அடியாள் ஒருவர்.

பூந்தொட்டி ஒன்றைச் சட்டெனக் கையிலெடுத்து மின்னல் வேகத்தில் அதை அடியாளின் தலையில் ஒரே அடியில் ஓங்கியடித்து அவரைச் சாய்ப்பதுபோல் காட்சி. இப்படியொரு காட்சியில் சூர்யாவிடம் அடிவாங்கி நடிக்க எந்தத் சண்டைக் கலைஞரும் முன்வர மாட்டார். காரணம் இடிபோன்ற அந்த ஒரே அடியால் உயிர் பிழைப்பது கடினம். ஆனால் திரையில் இந்தக் காட்சியைக் கண்டபோது ரசிகர்கள் ஒரு கணம் உறைந்துபோனார்கள்.

இரண்டு காட்சிகளாகப் பதிவுசெய்யப்பட்டது இந்தத் தாக்குதல் காட்சி. முதல் காட்சியில் சூர்யா பூந்தொட்டியைத் தூக்கி ஆக்ரோஷத்துடன் அடிப்பது கிரீன் மேட் போர்த்தப்பட்ட ஒரு டம்மியின் மீது. இரண்டாவது காட்சியில் பச்சை வண்ண டம்மி பொருத்தப்பட்ட இடத்தில் உள்ளூர் அடியாள் நின்று, தன்னை நடிகர் துரைசிங்கம் அடிப்பதுபோல் பய உணர்ச்சியைக் காட்டி நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு காட்சிகளையும் கம்போசிட்டிங் மூலம் இணைக்கும்போது கிரீன் மேட் டம்மி நீக்கப்பட்டு, அந்த இடத்தில் அடியாளைத் துல்லியமாகப் பொருத்திவிட்டார்கள். இரண்டு காட்சிகளும் இணைக்கப்பட்டபின் அந்தக் காட்சி அதிர்ச்சி தரும் நிஜம்போல் பார்வையாளர்களுக்கு திடுக் உணர்வைக் கொடுத்ததற்குக் காரணம் கம்போசிட்டிங்தான்.

இப்படி இரண்டு காட்சிகளை இணைக்க மட்டுமல்ல ‘செட் எக்ஸ்டென்ஷன்’ என்று அழைக்கப்படும் செலவு செய்து போடப்பட்ட ஒரு செட்டுடன், கம்யூட்டரில் 3டி முறையில் வரைந்து உருவாக்கப்பட்ட ஒரு செட்டை இணைத்து எது போடப்பட்ட செட்? எது வரையப்பட்ட செட் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இரண்டையும் இணைக்கவும் கம்போசிட்டிங் கைகொடுக்கிறது.

இதை ‘ஐ’ மற்றும் ‘பாகுபலி’ படங்களில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ படத்தில் ‘ஒரு கோடி சன் லைட்’ பாடலில் ரஜினி வெள்ளைக்காரனாக மாறினார் அல்லவா!? அதைச் சாத்தியமாக்கிய கிராஃபிக்ஸ் கலக்கல்தான் கிராஃப்டிங். அந்த ரகசியத்தை அடுத்தவாரம் உடைப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்