திரை விமர்சனம்: பிசாசு

By இந்து டாக்கீஸ் குழு

பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.

ஃப்ளாட்டில் தனியாக வசித்துவரும் இளம் இசைக் கலைஞர் சித்தார்த், சினிமாவில் வயலினிஸ்ட். ஒரு ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாவதைப் பார்க்கும் சித்தார்த், தலையில் படுகாயத்துடன் சரிந்து விழும் இளம்பெண்ணைப் பதற்றத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். தன் கையைப் பிடித்தபடி உயிரை விடும் பெண்ணின் முகத்தைக் கண்டு நொறுங்கிப் போகிறார். அவள் விட்டுச் சென்ற ஒற்றைச் செருப்புடன் வீடு திரும்புகிறார். வீட்டுக் குள் வருவது அந்த ஒற்றைச் செருப்பு மட்டுமல்ல...

அதன் பிறகு படத்தின் மையத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பேய் ஒவ்வொரு வரையும் மிரட்டி எடுக்கிறது. பேய் இருப்பதை உணர்வது, பயந்து நடுங்கும் மனிதர்கள், பேயை விரட்டும் முயற்சிகள், பேயின் வருகைக்குக் காரணமறியும் முயற்சிகள் என்று செல்லும் படம் எதிர்பாராத திருப்பத் துடன் முடிகிறது.

வழக்கமான பேய்க் கதைகள் போலவே பேயை வைத்து மிரட்டினாலும் பேயின் இன்னொரு பரிமாணத்தை அதற்கான கார ணத்தோடு காட்சிப்படுத்திய விதத்தில் மிஷ்கின் சபாஷ் போடவைக்கிறார். பார்வை யாளர்களுக்குப் பிசாசு தொடர்பான புது அனுபவத்தை ஏற்படுத்துகிறார். பிசாசு ஏன் சித்தார்த் வீட்டுக்கு வந்தது என்பதற்கான காரணம் தேவதைக் கதைகளின் ஈரத்தைக் கொண்டது. கதை முன்னகரும் விதத்திலும் தேவதைக் கதைகளுக்கே உரிய வியப்பை அடைய முடிகிறது.

காட்சி ரூபமாகக் கதை சொல்வதில் தேர்ச்சி பெற்ற மிஷ்கின் இதிலும் காட்சிப் படிமங்கள் மூலம் நம்மைக் கவர்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி ராயும் இசையமைப் பாளர் அரோல் குரோலி ஆகியோரும் மிஷ்கி னுடன் இணைந்து வளமான அனுபவத்தை வழங்குகிறார்கள். சுரங்க நடைபாதையில் உருப்பெறும் பிச்சைக்காரர்கள் சித்திரம் கவித் துவமானது. பிசாசின் கரங்கள் தகப்பனைத் தொடும் காட்சி நெகிழ்ச்சியூட்டுவது.

வித்தியாசமான கதையையும் அதற் கேற்ற திரைக்கதையையும் உருவாக்கி யுள்ள மிஷ்கின், தனக்கே உரிய சில பலவீனங்களின் மூலம் திரைக்கதையின் தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறார். ஏராளமான முடியுடன் சற்றே தலையைச் சாய்த்துக்கொண்டு வித்தியாசமான உடல் மொழியுடன் வரும் இளைஞன், பாத்திரங்கள் பேசும் முறை, சண்டை போடும் விதம், கால்களைப் படம் பிடிக்கும் கேமிரா, உறைந்து நிற்கும் காட்சிப் படிமங்கள் என மிஷ்கின் படங்களுக்கே உரிய க்ளீஷேக்கள் விரவிக் கிடக்கின்றன. இவை படைப்புக்கு வலிமை சேர்க்கவில்லை. சுமார் இரண்டு மணிநேரம் மட்டுமே ஓடும் படத்தில் பல காட்சிகள் கூறியது கூறலாகிச் சலிப்படைய வைக்கின்றன. பேயின் இருப்பையும் அதன் சுபாவத்தையும் காட்ட இத்தனை காட்சிகள் தேவையா? பேயின் தன்மையை மாற்றும் கதையில் பேயின் தோற்றத்தில் மட்டும் பழைய அடையாளமே இருப்பது ஏன்?

மகளின் பிணத்தை அப்பா பாதுகாத்து வைக்கும் விதம் நம்பகத்தன்மை அற்று, செயற்கையான திருப்பமாகவே துருத்திக் கொண்டிருக்கிறது.

மிஷ்கினின் வார்ப்புக்குள் நின்று தன் பாத்திரத்தைத் திறம்படச் செய்திருக்கிறார் இளம் நடிகர் நாகா. நாயகி பிரயாகா வரும் காட்சிகள் மிகக் குறைவு என்றாலும் மனதில் நிற்கிறார். ராதாரவி தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சத்தை அலட்சியமாகக் கிள்ளிச் செல்கிறார். நாயகனின் நண்பர்கள், அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி, ஆட்டிசம் பாதித்த சிறுவன், ஆட்டோ டிரைவர், வெட்டி அறிவுஜீவி இளைஞன் என எல்லாப் பாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு பொருத்தமானது.

ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை தூக்கி நிறுத்துபவை பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங். இளம் இசையமைப் பாளர் அரோல் குரோலி வயலினில் விளை யாடி இருக்கிறார். அந்த ஒற்றைப் பாடலும் அது உருவாக்கப்பட்ட விதமும் அற்புதம்.

பேய்ப் படங்களுக்கே உரிய மிரட்டல் காட்சிகளுக்குக் கூடுதல் வலு சேர்த்திருக் கிறது ரவி ராயின் கேமராவும், கோபிநாத்தின் எடிட்டிங்கும். இவை இரண்டுமே தனித்துத் தெரியாமல், காட்சிகள் மீது ஒட்டுமொத்த கவனத்தைக் குவியச் செய்யும் வகையில் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, பேய்ப் படங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ‘ஈவில் டெட்’, ‘எக்ஸார்ஸிஸ்ட்’ முதலான ரத்தமும் கோரமும் நிறைந்த தீவிர மிரட்டல் படங்கள் ஒரு வகை. ‘சிக்ஸ்த் சென்ஸ்’ முதலான, அதீத அச்சுறுத்தல் இல்லாத சஸ்பென்ஸை உள்ளடக்கிய சைக்கலா ஜிக்கல் த்ரில்லர் மற்றொரு வகை. மிஷ்கின் இதில் இரண்டா வது வகையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டியது. தனது க்ளீஷேக்களின் மீது இருக்கும் பற்று குறைந்தால் மிஷ்கினால் மேலும் நேர்த்தியான அனுபவத்தைத் தர முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

மேலும்