வெட்டிவேரு வாசம் 4 - முற்றாத முருங்கைக் காய்

By செய்திப்பிரிவு

முற்றாத முருங்கைக் காய்

கல்லூரி காலம். வகுப்புத் தோழன் வெங்கட் எங்களைவிட நல்ல வளர்த்தி. பூமியில் அமிழ்ந்த கோரைப் புற்களைப் போல தலைமுடி. அந்த வயதிலேயே வியாபாரத்தில் நாட்டம். வீட்டு மொட்டை மாடியில் வாஷிங் சோப்பு காய்ச்சுவான். பாளம் பாளமாக துண்டுப் போட்டு கடைகளுக்கும், துருவலாகச் சீவி ஹோட்டல்களுக்கும் சப்ளை செய்வான். புத்தி வியாபாரத்தில் திரும்பிவிட்டதால், படிப்பு அவனுக்கு எப்போதும் எட்டாக் கனி. படிப்பாளிப் பையன்களிடம் ஏக மரியாதை. என்னை நடக்கவே விடாமல் தன்னுடைய சைக்கிளில் டபுள்ஸ் அழைத்துச் செல்வான். பதிலுக்கு ஞாயிறன்று அவன் வீட்டுக்குப் போய் நான் பாடம் சொல்லித் தர வேண்டும்.

“இவ்ளோ ஈஸியா புரொஃபசர் சொல்லிக் கொடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்?” என்றெல்லாம் தூக்கி வைத்துக் கொண்டாடுவான். எளிமையான கேள்வி கேட்டால்கூட மாடியிலிருந்து அவனைத் தள்ளிவிட்டது போலப் பார்ப்பான். முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு, ‘நீ சொல்லும்போது எல்லாம் புரிஞ்சுது. ஆனா, ஒண்ணுமே மண்டையில நிக்கலடா!’ என்பான்.

இப்படித்தான் ஒருநாள் என்னைத் தேடி வந்தான். “மச்சான், ஒரு விஷயம் புரியலடா!”

“கணக்குலயா..? ஃபிஸிக்ஸ்லயா..?” என்றேன்.

“அதில்லடா! ஒரு பொண்ணு. அப்படியே ஓரக் கண்ணால பார்த்து சிரிச்சா என்னடா அர்த்தம்?”

பாடப் புத்தகத்து சந்தேகத்தைவிட இது படுசுவாரஸ்யமாக இருந்தது.

“ஆறாவது தெருவுல ஒரு வீட்டுல முருங்கைக்காய் கம்மி விலைக்குத் தராங்கன்னு எங்கம்மா அனுப்பினாங்க. காயை வாங்கி சைக்கிள் கேரியர்ல வெச்சிட்டிருக்கேன். ‘அங்கிளுக்கு டாட்டா சொல்லு’ன்னு ஒரு ஸ்வீட் வாய்ஸ். தாவணிப் போட்ட பொண்ணுடா! ஒரு குழந்தைய இடுப்புல வெச்சுக்கிட்டு குழந்தைக்கிட்டப் பேசற மாதிரி என்கிட்ட பேசினாடா…”

“அப்புறம்?”

“அந்தப் பொண்ணைத் திரும்பப் பார்க்கணும்னு தோணிச்சு. அம்மாட்ட முருங்கைக்காயைக் கொடுத்துட்டு மறுபடி அந்த வீட்டுக்கே போனேன். குழந்தையோட தோட்டத்துலதான் நின்னுட்டிருந்தா. என்னைப் பார்த்ததும், ஒரு ஸ்மைல். ‘போற வழியில கேரியர்லேர்ந்து எல்லா காயும் எங்கேயோ விழுந்துருச்சு. வேற முருங்கைக்காய் கொடுங்க!’னு காசை நீட்டினேன். வாங்கலியே… ஃப்ரீயாவே காயைக் கொடுத்திச்சு. அது மட்டுமில்ல...”

எனக்கு டென்ஷன் ஏறியது.

“குழந்தைக்கிட்ட ‘அங்கிளுக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ் குடு’னு சொல்லிச்சு. சத்தியமா சொல்றேன்டா… குழந்தைக் கிட்ட பேசற மாதிரி எனக்குத்தான்டா அது சிக்னல் குடுக்குது!”

ஆர்வமானேன். “பொய் இல்லியே...?”

“நாளைக்கு நீ கூட வா!” என்றான்.

மறுநாள். அவன் சைக்கிளில் சவாரி. சைக்கிள் மணிச் சத்தம் கேட்டதும், அந்தப் பெண் வெளியே வந்தது. பத்தொன்பது வயதுப் பையன்களுக்கு அழகாகத் தெரியும் பதினாறு வயது. பிங்க் கலர் தாவணி பறக்க குழந்தையை அள்ளிக்கொண்டு கதவுக்கு வெளியே வந்தவள், வெங்கட்டுடன் நான் இருப்பதைப் பார்த்தாள். சிரிப்புக்கூட இல்லாமல், “எவ்ளோ காய் வேணும்?” என்றாள்.

காயைக் கொடுத்து காசை வாங்கிக்கொண்டு சட்டென்று உள்ளே போய்விட்டாள்.

“உன்னைப் பார்த்து மிரண்டுட்டாடா…”

இரண்டு நாட்கள் கழித்து, ரோடு ஓரத்திலேயே என்னை இறக்கிவிட்டான். ஏதோ சிஐஏ ஏஜென்ட் போல மரத்தடியில் ஒளிந்து வேவு பார்த்தேன்.

சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு, அந்தப் பெண் இடுப்பில் குழந்தையுடன் வெளியே வந்தாள். பிரகாசமாகச் சிரித்தாள். குழந்தையைக் கசக்கிக் கொஞ்சினாள். பச்சக்… பச்சக்… என்று அதன் கன்னத்தில் முத்தங்களாகப் பதித்தாள். குழந்தைக்கா, வெங்கட்டுக்கா?

குழந்தையைக் கையில் வாங்கி வெங்கட் கொஞ்சினான். குழந்தை கைமாறும்போது, அவர்கள் விரல்கள் ஸ்பரிசித்தன. மின்சாரம் பாய்ந்திருக்கும். என் காதுகள் வழியே புகை வந்தது.

குழந்தையை இருவரும் மாறி மாறி கொஞ்சிய பின், அதை ஒப்படைத்துவிட்டு வெங்கட் வந்தான். பாரதப் போரையே வென்றுவிட்டது போல், அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

“அந்தப் பொண்ணுக்கு நிஜமாவே உன் மேல ஒரு இதுடா...” என்று ஒப்புக் கொண்டேன்.

ஆன்ட்டி, முருங்கைக்காயை வெச்சு, சாம்பார் தவிர வேற என்னல்லாம் பண்ணலாம்..?” என் அம்மாவிடம் வெங்கட் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

மாலை நேர டியூஷன் கட் ஆனது. பத்து நாட்களுக்குப் பிறகுதான் வெங்கட் வந்தான். அவனது முகம் டயர் நசுக்கிய எலுமிச்சை போல் ஆகியிருந்தது.

“அது வெகேஷன் முடிஞ்சு கிளம்பிப் போயிடுச்சுடா. இப்ப போனா, ஒரு ஆயாதான் முத்திப் போன முருங்கைக் காயைக் கொடுக்குது.’’

“அவ பேர் என்னடா..?”

“குழந்தை பேருதான் தெரியும். தாரா!”

“போடாங்…க!”

அன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் படிக்கும் பையனும், பள்ளி இறுதியில் இருக்கும் தாவணிப் பெண்ணும் சகஜமாகச் சந்தித்து உரையாடிவிட முடியாது. நடுவில் ஒரு குழந்தையை சாக்காக வைத்து, அவர்கள் இருவரும் சிரித்துக் கொஞ்சி, குழந்தை மூலமாக மானசீகமாக முத்தங்கள் பரிமாறிக் கொண்டது, நினைவில் பதிந்துவிட்டது.

அயன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி!

ரிலீஸ் ஆகவிருக்கும் ஒரு திரைப்படத்தின் திருட்டு விசிடியை நாயகன் தேவா (சூர்யா) மலேசியாவிலிருந்து கடத்தி வருவான். விமான நிலையத்தில் பரபரப்பான பரிசோதனை. சிடியுடன் மாட்டினால், பெரும் சிக்கல். தேவா, அங்கிருக்கும் ஒரு குழந்தையை எடுத்து கொஞ்சி, அதுக்கு சாக்லேட் கொடுப்பான். அவனுடைய பெட்டிகள் பரிசோதனை செய்யப்பட்டு வெளியே வந்த பின், ‘உள்ள நெருப்பு மாதிரி இருக்குண்ணா..’ என்று தாஸிடம் (பிரபு) சொல்வான். அந்தக் குழந்தையுடன் அம்மா வெளியே வந்ததும், ஓடிப் போய் குழந்தையை வாங்கிக்கொள்வான். பெட்டிகளைக் காரில் எடுத்துவைக்க உதவுவான். அப்போதுதான் தெரியும், அவன் கொண்டுவந்த திருட்டு விசிடி, அந்தக் குழந்தையின் சட்டைக்குள் நைசாக ஒளிக்கப்பட்டதும், இப்போது எடுக்கப்படுவதும்.

குழந்தையை சாக்காக வைத்து மாபெரும் கடத்தல்கள் நிகழ்வதுகூட இந்த சைக்காலஜியைப் பயன்படுத்தித்தான்.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
dsuresh.subha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

7 mins ago

க்ரைம்

13 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்