திரைப் பார்வை: சி.ஐ.ஏ - பகடியின் நடனம்

By சாம்ராஜ்

காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே ஐந்தாம் தேதியன்று வெளியாகியிருக்கிறது அமல் நீராடின் இயக்கத்தில் சி.ஐ.ஏ (C.I.A. - Comrade in America). தலைப்பில், அதன் வடிவமைப்பில், நிறத்தில் திரைப்படத்தின் கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது.

காலங்காலமாக கம்யூனிச அரசுகளை வீழ்த்துவதையும் அதற்கான சதி வேலைகளில் ஈடுபடுவதையுமே லட்சியமாகக் கொண்டது சிஐ.ஏ. அதன் பெயரை ஒரு இடதுசாரிக் கட்சியின் நிறத்தில், தன்மையில், குறிப்பாக லத்தீன் அமெரிக்க இடதுசாரிக் கட்சியின் கொடிபோல வடிவமைப்பதிலேயே தொடங்கிவிடுகிறது பகடி.

கடந்த மாதத்தில்தான் சித்தார்த் சிவா இயக்கத்தில் ‘சகாவு’ மலையாள சினிமாவில் தோன்றி வாய் ஓயாமல் பேசிவிட்டுப் போனார். அந்த கறையைக் கழுவுவதுபோல் வந்து சேர்ந்திருக்கிறது C.I.A. படத்தின் முதல் பாதி முழுக்க பகடிதான்.

இடதுசாரிக் கட்சியில் தீவிரமாகச் செயல்படும் அஜியின் மீது (அவனது தந்தை கேரள காங்கிரஸில் செயல்படுபவர்) ஒரு அமெரிக்க வாழ் மலையாளப் பெண் (படிக்க கேரளம் வந்தவர்) காதல் வயப்பட, அது வீட்டாருக்குத் தெரிந்து அவள் அவசர அவசரமாகத் திருப்பி அழைக்கப்பட்டுத் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவள் அஜியிடம் “அமெரிக்கா வந்து என்னைக் காப்பாற்று” என்கிறாள்.

இடதுசாரியான அஜியிடம் பாஸ்போர்ட் இல்லை. பாஸ்போர்ட்டை சிரமப்பட்டு வாங்க அத்தனை குறுகிய காலத்தில் அமெரிக்க விசா கிடைக்க சாத்தியமே இல்லை என்கிறார்கள். அதுவும் அஜிக்கு விசா தருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

கள்ளத்தனமாக நுழையும் பாதையின் வழியாக அஜி அமெரிக்காவுக்குள் நுழையத் தீர்மானிக்கிறான். தோழர்களும் குடும்பத்தாரும் அவன் நேரடியாக அமெரிக்காதான் போகிறான் என நம்பிக்கொண்டிருக்க மெக்ஸிக்கோ வழியாகப் பல இன்னல்களுக்கு இடையே நுழைகிறான் நாயகன். ஒருவழியாக நாயகியையும் சந்திக்கிறான். நாயகியோ சந்தோஷமாக அவளுடைய திருமணத்துக்காகத் தயாராகி, திருமண வரவேற்பில் நிற்கிறாள். அஜியைப் பார்த்து “நீ வர மாட்டன்னு நினைச்சேன்” என்கிறாள். அதற்கு அஜி, “உன்னைத் தேடி வந்த இந்தப் பயணம் எனக்கு நிறைய அனுபவத்தைக் கற்றுத்தந்தது. அது வாழ்க்கை முழுவதும் எனக்குப் பயன்படும்” என்று சொல்லிய வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஊர் திரும்புகிறான்.

போதையில் ஒரு தரிசனம்

அஜி அமெரிக்கா போவதைப் பற்றி அவனுடன் மார்க்ஸ், லெனின், சேகுவேரா மூவரும் இரவில் விவாதிக்கின்றனர். (அஜி குடித்துவிட்டுக் கட்சி அலுவலகத்தில் உறக்கும் ஒரு ராத்திரியில்தான்). அஜி அவர்களோடு வாதம் செய்கிறான். மார்க்ஸ் “நீ காதலுக்காக இப்படி அமெரிக்காவுக்குப் போக வேண்டுமா?” எனக் கேட்கிறார். அஜி அதற்கு “நீங்கள் ஜென்னிக்கு எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களை நானும் வாசித்திருக்கிறேன்” என்கிறான். மார்க்ஸ் வெட்கப்படுகிறார். சேகுவேரா அவனை ஆதரிக்கிறார். காதலுக்காக அப்படித்தான் போக வேண்டுமென்கிறார். பகடி செய்து தீர்க்கிறார்கள். மலையாள சினிமாவின் பிரத்யேகத்தன்மை அதன் நகைச்சுவையும் பகடியுமே. அது நேர்த்தியாக இந்தச் சினிமாவில் வந்திருக்கிறது.

இரண்டாவது பாதியில் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழையும் அந்தப் பயணம். வெறும் விக்கிபீடியா தகவல்களாகத் தொகுக்கப்பட்டதைப் போல இருக்கிறது. துயர்மிகு அந்தப் பயணத்தின் வலி உணர்த்தப்படவில்லை.

சமீப மலையாள சினிமாக்களின் நற்போக்குகளில் ஒன்று தமிழர்களை ‘நல்லவிதமாக’ சித்தரிப்பது. அண்மையில் வெளியான ரஞ்சித்தின் ‘புத்தன் பணம்’ திரைப்படத்தில் பிரதானப் கதாபாத்திரமாக ஒரு தமிழ்த் தாயும் மகனும் உண்டு. கடைசிவரை அவர்களைச் சிதைக்காமலே காட்டியிருந்தார்கள். சி.ஐ.ஏ.விலும் ஒரு ஈழத்தமிழர் கதாபாத்திரம் உண்டு. மோசமில்லாமல் சித்தரித்திருக்கிறார்கள். பழைய போராளியான அவர், இயந்திரத் துப்பாக்கியை எடுத்து அஜி சரமாரியாகச் சுடும்போது (கேரள இடதுசாரிகள் துப்பாக்கியை போலீஸிடம் மாத்திரமே பார்த்திருப்பார்கள்) வெறுமனே வேடிக்கை பார்க்கிறார் என்பது போன்ற சில அபத்தங்கள் இருக்கின்றன.

வாத்தியங்களை உரக்க வாசிப்பதில் பிரியம் கொண்டவராய் இருந்தாலும் இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்தப் படத்தில் சில அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, கள்ளத்தனமாக மெக்ஸிக்கோவுக்குள் நுழையும் அந்தப் பயணத்தில் ஒரு ஸ்பானியக் குரலோடு பின்பு இந்தி, மலையாளம் என குரல்கள் மாறும் ‘வானம் திளைதிளைக்கன்னு’ என்ற அருமையான பாடலைத் தந்திருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் வரும் டைட்டில் பாடலில் தமிழ் வரிகளெல்லாம் புரட்சி குறித்து ஒலிக்கின்றன.

சமீபத்திய மலையாள சினிமாவில் ‘போற்றி போற்றி’ வகை இடதுசாரி படங்களான ‘ஒரு மெக்ஸிகன் அபாரத’, ‘சகாவு’, போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, திரைமொழியோடு கூரிய அங்கதத்தோடு வெளிவந்திருக்கிறது சி.ஐ.ஏ. பொதுவாக, சி.ஐ.ஏ. எப்போதும் நேசிப்புக்குரியது இல்லை. இந்த சி.ஐ.ஏ. நேசிப்புக்குரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

22 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்