சினிமாலஜி 09 - சினிமாவுக்கு இதுவும் அவசியம்!

By சரா

“நான் ரொம்பவே மதிக்கிற இயக்குநர்களில் ஒருத்தர் எஸ்.பி.ஜனநாதன். அவரைப் போய் காப்பி விஷயத்துல கோக்குறது சரியில்லை” என்று ஆதங்கப்பட்டான் மூர்த்தி.

“இப்ப இதுவரைக்கும் நாம பேசின படைப்பாளிகளில் யாரையுமே நாம குறைச்சி மதிப்பிடலை. எத்தனை பெரிய இயக்குநர்களா இருந்தாலும் காப்பி - இன்ஸ்பிரேஷன்ஸ் மாதிரியான விஷயங்களில் ஒருவிதக் குழப்பம் நீடிச்சிட்டு இருக்குன்னுதான் சொல்றோம். நம்ம முக்கியப் படைப்பாளிகள் எல்லாருமே தனித்துவத்தோட இயங்குறவங்கதான். அவங்களைப் பாதிக்கிற படைப்புகளை ஏதோ ஒரு விதத்துல ஆராதிக்கணும், தன்னோட மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்ன்ற உந்துதலில்தான் அப்படிச் செய்றாங்க. ஆனா, சில நேரங்களில் அது சொதப்பிடுது. அவ்வளவுதான்” என்று கொந்தளிப்பைத் தணித்தாள் கவிதா.

“சரி, இப்ப நான் பேசலாமா?” என்று மெல்லிய குரலில் அனுமதி கேட்டுத் தொடங்கினான் ப்ரேம்.

“1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் ‘தி டான்ஸ் ஹியர் ஆர் கொயிட்’ (The Dawns Here Are Quiet). இதே தலைப்பில் போரிஸ் வசீலியெவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப 1941-ல் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் சதித் திட்டத்துடன் கரேலியாவுக்கு ஜெர்மெனிப் படையினர் 16 பேர் வர்றாங்க. காட்டுப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறது ஒரு சிறு குழு. வான்வழித் தாக்குதல் தடுப்பில் பயிற்சி பெறும் 5 பெண்களுடன், அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்சியாளரையும் சேர்த்தால் ஆறு பேர். இப்போ ‘பேராண்மை’நினைவுக்கு வருதா?” என்று கேட்டான் ப்ரேம்.

“இதான் படத்தை ஒழுங்கா பாக்கணும்ன்றது. டைட்டில் கார்டுலயே ‘அதிகாலையின் அமைதியில்’ படைப்புக்கு கிரெடிட் கொடுத்திருப்பாங்க” என்று நக்கல் தொனியில் சொன்னான் மூர்த்தி.

“ஹி ஹி... நான் ரெண்டாவது தடவை பார்க்கும்போது கவனிச்சேன். ‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன்-னு போட்டிருப்பாங்க. எவ்ளோ சேஃப் கேம். அந்த ஒரிஜினல் நாவலைத் தழுவி எடுத்திருந்தால்கூட எடுக்கிற காட்சிகளில் வித்தியாசம் காட்டியிருக்கலாம். ஆனால், அந்தக் காட்டுப் பகுதியில் நடக்குற அத்தனை காட்சிகளும் ஃப்ரேம் பை ஃப்ரேம் அப்படியே ரஷ்ய படத்துல இருந்து ஜெராக்ஸ் பண்ணியிருப்பாங்க. இதுக்குப் பேருதான் நினைவுகளுடனா?” - மடக்கினான் ப்ரேம்.

“நீ இன்னும் சரியா டைட்டில் கார்டு ஒழுங்காவே பார்க்கல. கதை, வசனம், இயக்கம் மட்டும்தான் எஸ்.பி.ஜனநாதன். திரைக்கதை என்.கல்யாண்கிருஷ்ணன்” - மூர்த்தியை ஆதரித்தான் பார்த்தா.

“வாங்க, தோழர் பார்த்தா! அதெப்படி, கதை - வசனம் எழுதி இயக்கியவருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாம திரைக்கதை உருவாகியிருக்கா? ஆனாலும், இயக்குநரின் நேர்மையை மெச்சிக்கிறேன். என்னதான் இருந்தாலும் நானும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மிகப் பெரிய ரசிகன்தான். ‘பேராண்மை’யின் காப்பித்தன்மை வேணுன்னா எனக்கு அதிருப்தி தரலாம். ஆனா, ‘இயற்கை’ படத்தை அவர் கையாண்ட விதம் ஒண்ணு போதும், அவர் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட்டா இருக்க!”

“அதென்ன ‘இயற்கை’ மேட்டர். அது ‘வெண்ணிற இரவுகள்’ நாவலில் இருந்து இன்ஸ்பையர் ஆனதுதானே?”

மேனகாவின் ஆர்வம் அடங்குவதற்குள் சொல்லத் தொடங்கிய ப்ரேம், “அதுவும் கரெக்ட்தான். ஆனா, அது வெறும் மேலோட்டமான விஷயம். 2001-ல் வெளியான டச்சு படம் மகோனியா (Magonia). யதேச்சையா யுடிவி வேர்ல்ட் மூவீஸ் சேனல்ல ஒருநாள் பார்த்தேன். மூன்று வெவ்வேறு கதைகள் கொண்ட சினிமா. அதுல ஒண்ணோட கதை இதுதான்: கடலும் கடல் சார்ந்த துறைமுகப் பகுதி.

அவள் ஒரு பேரன்பும் பேரழகும் மிக்கவள். பாலியல் தொழிலாளின்னு நினைக்கிறேன். தன்னைக் காதலித்த மாலுமிக்காக 6 ஆண்டு காலமாகக் காத்திருப்பாள். அவளிடம் தொழில் நிமித்தமாகப் போய், அவள் அழகிலும் அரவணைப்பிலும் மயங்கி ஓர் இளைஞன் காதலிப்பான். அவளுக்கும் அவன் மேல அன்புதான். ஆனாலும் அந்த கேப்டனுக்காக வெயிட் பண்ணுவா. ஒரு வழியா கன்வின்ஸ் ஆகுற ஸ்டேஜில முன்னவன் வந்துடுவான். சுபம்...” என்று இழுத்தான் ப்ரேம்.

“இயற்கை படத்துக்கும் கல்யாண்கிருஷ்ணன்தான் திரைக்கதை. தமிழ்ல புத்தம்புது களத்துல அற்புதமா தரப்பட்ட ஒரு படைப்பை தெரியாத ஒரு படத்தோட முடிச்சிப் போடுறது எல்லாம் ஓவர்” என்று பொங்கினான் பார்த்தா.

“ஆமா, ‘இயற்கை’ ஓர் அற்புதமான படம். நான் ஒத்துக்கிறேன். ஜஸ்ட் என்னோட எக்ஸ்பீரியன்ஸைச் சொன்னேன். ஒருவேளை, மகோனியாவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாம கூட இருக்கலாம். ஒரே மாதிரி பலரும் சிந்திக்கிறதும் யதேச்சையான விஷயம்தானே. ஆனாலும், இயக்குநர் ஜனநாதனின் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தோழர் பார்த்தா!” என்று இந்த விவகாரத்தை முடிக்க முயன்றான் ப்ரேம்.

“அது இருக்கட்டும். கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னியே... ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’தானே? ‘டிரெயில்டு’ படத்தோட அட்டக்காப்பி. அதைத்தானே சொல்லப் போற” என்று முந்திக்கொண்டான் மூர்த்தி.

“ ‘காக்க காக்க’ கடைசி காட்சிகளில் வர்ற தலை துண்டிப்பு மேட்டர் எல்லாம் ‘செவன்’லயே பார்த்தாச்சு. ‘வேட்டையாடு விளையாடு’ உட்பட பல படங்களில் செம்ம சீன்ஸ் எல்லாம் வெவ்வேறு படங்களிலிருந்து உருவினதுதான். ‘நடுநிசி நாய்கள்’ அப்படியே ‘சைக்கோ’வின் பிரதியா இருந்தாலும் ரொம்ப தைரியமான முயற்சி. யாரும் தொடுறதுக்குத் தயங்குற உறவுமுறை உளவியல் சிக்கலைக் கையாண்ட விதத்துக்கே அந்தப் படத்தை வரவேற்கலாம்.

கவுதம் மேனனுக்குப் பிடிச்ச மாதிரி கதையும் ஸ்கிரிப்ட்டும் கிடைச்சாலுமேகூட, அவரைப்போல தமிழ்ல ஸ்டைலிஷா படம் எடுக்க யாருமே இல்லைன்றதுதான் உண்மை. காப்பி மேட்டர் பத்தி பேச ஆரம்பிச்சா, அது ரொம்ப நீண்டுகிட்டே போகும். பேசிப் பேசியே டயர்டு ஆகிடுவோம். பரவாயில்லையா?” என்று அலுத்துக்கொண்டான் ப்ரேம்.

“முடிவா என்னதான் சொல்ல வர்ற? எப்படி காப்பியடிச்சா ஓகே? உருப்படியான இன்ஸ்பிரேஷனுக்கு சமீப உதாரணம் ஏதாவது சொல்ல முடியுமா?” - இது கவிதா.

“8 தோட்டாக்கள்... பணம் மட்டுமே முக்கியா இருக்குற நம்ம சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதர் வசப்படுத்திய போலீஸ் துப்பாக்கி குறிவைக்கிற 8 தோட்டாக்கள்தான் கதைக்கரு. ஒரு சோஷியல் - க்ரைம் திரில்லரா நம்ம சூழலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை நகர்த்தப்பட்ட விதம் அபாரம். 1940-ல் வெளிவந்த ஜப்பானிய திரைப்படம் ‘ஸ்ட்ரே டாக்’ (Stray Dog). அகிரா குரசோவா இயக்கிய அந்தப் படத்தோட கதையை நகர்த்துற மையத்தை மட்டும் எடுத்துட்டு முழுக்க முழுக்க நமக்கு ஏத்த மாதிரி திரைக்கதையை அமைச்சி ‘8 தோட்டாக்கள்’ எடுக்கப்பட்டிருக்கு.

அகிராவுக்கு மட்டும் இல்லாமல் வேற யாரெல்லாம், எந்தப் படமெல்லாம் இன்ஸ்பைரிங்கா இருந்துச்சோ எல்லாத்துக்குமே படம் முடிவில் கிரெடிட் கொடுத்திருப்பாங்க. இதான் நேர்மையான அணுகுமுறைக்கு அழகு. ஒரு சிறந்த சினிமா படைப்பாளி காப்பி பண்ண விரும்ப மாட்டார்; எடுத்தாளுதல் மூலமா உருப்படியான சினிமாவைத் தர முயல்வது அவசியம்.”

“சரி ப்ரேம்... மிஷ்கின் பத்தி ஏதோ சொல்ல வந்தியே?!” - கிளறினான் பார்த்தா.

“அதான் கூடிய சீக்கிரமே அவரை மீட் பண்ணப் போறோமே... அப்ப வெச்சிக்கலாம். இப்ப க்ளாஸ் போகலாம்” என்று கேன்டீனில் இருந்து எழுந்தான் ப்ரேம்.

தொடர்புக்கு: siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்