கோலிவுட் கிச்சடி

By செய்திப்பிரிவு

மீண்டும் மடோனா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, டி.ராஜேந்தர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் பற்றி ‘இந்து டாக்கீஸ்’ தந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட நாயகி மஞ்சிமா மோகன் பரிசீலனையில் இருந்தார். ஆனால் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இணைந்து நடித்த மடோனா செபாஸ்டியன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

******

எட்டு கேமராக்கள்

ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் புதுமைகள் புகுத்த நினைப்பவர் இயக்குநர் பிரபு சாலமன். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தொடரி' படத்தில் ரயிலின் மீது நடைபெறும் சண்டைக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இதை எட்டு கேமராக்கள் வைத்துப் படம்பிடித்திருக்கிறார் பிரபு சாலமன். ரயிலின் கூரை மீது இடம் குறைவு என்பதால் மிகவும் சிரமத்துடன் இந்தச் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். இதற்காகப் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் செல்வாவின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் தனுஷ்.

******

`மாயா’வுக்கு அடுத்து…

கதை, திரைக்கதை, ஒளியமைப்பு, ஒலியமைப்பு, நயன்தாராவின் நடிப்பு என அனைத்து அம்சங்களுக்காகவும் ரசிகர்கள், விமர்சகர்கள் ஆகிய இரண்டு தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்று வசூல் சாதனை செய்தபடம் ‘மாயா’. தவிர, ஹாலிவுட்டின் பிரபல ஹாரர் பட இயக்குநரான எரிக், படத்தைப் பார்த்து வியந்து பாராட்டினார். மாயா படத்துக்குப் பிறகு மவுனம் காத்துவந்த அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன், தற்போது அடுத்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த புதிய படத்தை ‘மோமன்ட் என்டர்டெயின்மென்ட்’ என்ற புதிய படநிறுவனம் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்க இருப்பவர் அறிமுகத் தயாரிப்பாளரான ஜி.ஏ. ஹரி கிருஷ்ணன்.

இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்திலும் ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட பல படங்களுக்குத் தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்துக்கான நட்சத்திரத் தேர்வும்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில் ஜி.ஏ. ஹரி கிருஷ்ணன், ரோஹித் ரமேஷின் டபிள்யூ.டி.எஃப்(WTF) எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘மோ’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

******

புதிய வரவு

‘வாகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக அறிமுகமாகிறார் ரான்யா. மும்மையின் பிரபல திரைப்படப் பள்ளியில் நடிப்பைப் பயின்றுவிட்டு, ஆங்கில நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த ரான்யாவுக்கு சொந்த ஊர் கர்நாடகாவின் சிக்மகளூர். இவரது நடிப்புத்திறமையைப் பார்த்து தனது ‘மாணிக்கய்யா’ என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்பத்தியிருக்கிறார் ‘நான் ஈ’ வில்லன் சுதீப். அறிமுகப்படமே அதிரடி வெற்றியாக அவரைக் கையோடு தமிழுக்கு அழைத்து வந்துவிட்டார் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.

தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனுடன் இயக்குநர் அஸ்வின் சரவணன்

******

அமெரிக்காவில் கமல்

அப்பா கமல் ஹாசனுடன் இணைந்து மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்க, ராஜீவ் குமார் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்காட்சி ஒன்றின் படப்பிடிப்பை அங்கே பிரம்மாண்டமாக படம்பிடித்துவருகிறார்கள். இந்தப் படத்தில் ‘தசாவதாரம்’ படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை புதிய நகைச்சுவை க்ரைம் த்ரில்லர் களத்தில் உலவவிடுகிறாராம் இயக்குநர் ராஜீவ்குமார்.

******

குற்றம் 23

‘ஈரம்’, ‘வல்லினம்’ படங்களின் மூலம் கவர்ந்த இயக்குநர் அறிவழகன், அருண் விஜயை வைத்து 'குற்றம் 23' என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து ரசிகர்களைக் கதிகலங்கவைத்த அருண் விஜய், இந்தப் படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். 'சாட்டை' படப்புகழ் மகிமாதான் கதாநாயகி. நாயகன் அருண் விஜயின் மனைவியான ஆர்த்தி இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

******

மீண்டும் இணையும் கூட்டணி

‘புதுப்பேட்டை’க்குப் பிறகு மீண்டும் இயக்குநர் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் கூட்டணி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இணைந்துள்ளது. கௌதம் மேனன் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகன், ‘இறைவி’ படத்தின் மூலம் பாராட்டுகளை அள்ளியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா! இவருக்கு ஜோடி ரெஜினா கெஸன்ட்ரா. இப்போதே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

54 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்