ரஜினியின் 25 சாதனைப் படங்கள்

By கோ.தனஞ்ஜெயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 38 ஆண்டுக்காலத் திரைப் பயணம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. அவரது 170-வது படமாகக் கோச்சடையான் 2014இல் வெளிவருகிறது. 170 படங்களில், தமிழில் 110, இந்தியில் 29, தெலுங்கில் 17, கன்னடத்தில் 10, மலையாளத்தில் 2, வங்கம், ஆங்கிலத்தில் தலா ஒரு படம். தமிழில் வெளியானவற்றில் 25 சாதனைப் படங்களை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம். 1975இல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினியின் முதல் படம். ஒரு சிறிய வேடத்தின் மூலம் தன் வருகையைத் தமிழ்த்திரையில் பதிவு செய்தார். ஆனால் 1976-இல் வெளிவந்த மூன்று முடிச்சு அவரது நடிப்பை நன்றாகப் பதிவு செய்தது.

மூன்று முடிச்சு (1976)

கே. விஸ்வநாதின் ஓசீதாகத (1974) என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் எழுதி இயக்கிய படம். தன்னுடய மனசாட்சியுடன் மோதும் ரஜினி, அதனிடம் இருந்து எப்படி வெளிவந்தார் என்பது திரைக்கதை. இந்தப் படத்தில் தொடங்கிய கமல் ரஜினி தேவி கூட்டணி நிறையப் படங்களைத் தமிழுக்குத் தந்தது.

அவர்கள் (1977)

கே. பாலசந்தர் எழுதி இயக்கிய படம். சாடிஸ்ட் கணவராக ரஜினி நடித்தார். கடைசிவரை திருந்தாமல், ஆனால் திருந்தியது போல் நடித்து, மனைவி சுஜாதாவை ஏமாற்றும் வேடத்தில், ரஜினி அசத்தியிருப்பார். பாலச்சந்தரின் வசனங்களால் மிகவும் பேசப்பட்ட இந்தப் படம், ரஜினியின் எதிர்மறை நாயகன் நடிப்பை முழுமையாக வெளிக் கொண்டுவந்தது.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் நடித்த முதல் படம். எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரஜினியை முதன் முறையாக நேர்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் எஸ்.பி.எம்.

16 வயதினிலே(1977)

இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி இயக்கிய இந்தப் படத்தில், பரட்டை என்ற கதாபாத்திரத்தில் புது மாதிரியான வில்லத்தனம் செய்திருப்பார் ரஜினி. “இது எப்படி இருக்கு?” என்று இந்தப் படத்தில் ரஜினி பேசிய வசனம், இன்றும் பிரபலம். ரஜினியைக் கடைக்கோடி ரசிகனிடமும் கொண்டு சேர்த்த படம். ரூபாய் 2500 ஊதியமாகப் பெற்றுக்கொண்டு ரஜினி நடித்த இந்தப் படத்தில் ரஜினியின் வில்லத்தனம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பைரவி (1978)

எம். பாஸ்கர் எழுதி இயக்கிய இந்தப் படம் ரஜினியை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது எனலாம். ரஜினியைத் தனிக் கதாநாயகனாக முன்னிறுத்திய முதல் படம். பாம்புடன் ரஜினியின் நட்பு இந்தப் படத்தில் தொடங்கி, பல படங்களில் தொடர்ந்தது. இந்தப் படத்தின் விநியோகஸ்தரான கலைப்புலி எஸ். தாணு, ரஜினிக்கு 80 அடி உயர கட்-அவுட் ஒன்றைச் சென்னை அண்ணா சாலையில்அமைத்தார். இந்தப் படத்துக்காகத்தான் தாணுவும். எம். பாஸ்கரும் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்தார்கள்.

முள்ளும் மலரும் (1978)

மகேந்திரன் எழுதி இயக்கிய படம். ரஜினியின் நடிப்புக்கு முதல் முறையாக அரசு விருதை வாங்கிக் கொடுத்தது. அதிக வசனங்கள் இல்லாமல், காட்சிகளால் மக்களைக் கவர்ந்த படம்.

தர்ம யுத்தம் (1979)

ஆர்.சி. சக்தி எழுதி இயக்கிய படம். ரஜினியின் நடிப்பில், 1977இல் 15 படங்களும், 1978இல் 21 படங்களும், 1979இல் 13 படங்களும் வெளிவந்தன. ஓய்வில்லாமல் நடித்துவந்ததால், ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளானார். அப்போது ரஜினியின் கதை முடிந்தது என்று பலரும் கருதியபோது திருப்புமுனையாக அமைந்தது இந்தப் படம்.

ஆறிலிருந்து அறுபதுவரை (1979)

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வெகுஜன நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு தேர்ந்த நடிகராகவும் ரஜினி முன்னிறுத்தியது. பெண்கள், குடும்ப ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கிய படம். சிறந்த நடிகருக்கான விருதைப் ரஜினிக்குப் பெற்றுத்தந்த படம்.

பில்லா (1980)

ரஜினி தாதா கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடித்து வெற்றிக்கொடி நாட்டிய படம். ரஜினி, திரையுலகை விட்டு விலகுகிறார் என்று வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படம். இயக்கம் ஆர். கிருஷ்ணமூர்த்தி.

முரட்டுக்காளை (1980)

பஞ்சு அருணாசலம் எழுதி, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படங்களில் பெரிய வணிக வெற்றியை ரஜினிக்குக் கொடுத்த படம். படத்தின் ரயில் சண்டைக் காட்சி ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பு.

நெற்றிக்கண் (1981)

கே.பி., விசு எழுத்தில் எஸ்.பி.எம். இயக்கிய படம். பெண்கள் மீது ஆசைப்படும் சக்கரவர்த்தியாகவும், பெண்களை மதிக்கும் அவரின் மகன் சந்தோஷாகவும் ரஜினி இரு வேறு பரிமாணங்களில் பிரகாசித்த படம்.

தில்லுமுல்லு (1981)

இந்தியில் 1979இல் வெளியான கோல்மால் படத்தின் தழுவல். எழுத்து விசு, இயக்கம் கே.பி. ரஜினியால் நகைச்சுவையும் நன்றாகச் செய்ய முடியும் என்பதை உணர்த்திய படம். ரஜினி முதல் முறையாக மீசை இல்லாமல் நடித்தார்.

எங்கேயோ கேட்டகுரல் (1982)

எழுத்து பஞ்சு அருணாசலம். இயக்கம் எஸ்.பி.எம். ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான பரிசை வாங்கிக் கொடுத்த படம்.

மூன்றுமுகம் (1982)

ரஜினி முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்து அசத்திய படம். இப்படத்திற்காகவும் மீண்டும் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். ரஜினி ஏற்ற அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி பாத்திரம் இன்றளவிலும் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.

ராகவேந்திரா (1985)

இயக்கம் எஸ்.பி.எம். தமிழ்த் திரையில் நுழைந்த பத்தே வருடங்களில் ரஜினியின் 100-வதுபடம். ரஜினி, தனது நூறாவது படமாக, அவர் வணங்கும் ஸ்ரீராகவேந்திரசுவாமியின் வாழ்க்கையை அவரே எழுதி, நடித்தார்.

தளபதி (1991)

மாறுபட்ட நடிப்பை வழங்க ரஜினிக்கு வாய்ப்பளித்த படம். மகாபாரதத்தின் கர்ணன் மற்றும் துரியோதனன் கதாபாத்திரங்களின் நட்பின் உந்துதலில் இப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் மணிரத்னம். ரஜினியும் மம்முட்டியும், சூர்யா, தேவா கதாபாத்திரங்களைத் தங்கள் நடிப்பால் ரசிகர்களுக்கு நெருக்கமாக உணர வைத்தபடம்.

மன்னன் (1992)

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த அனுராகஅரலித்து என்ற கன்னடப் படத்தைத் தமிழில் மன்னனாக மாற்றினார் பி. வாசு. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடித்து வெளியான வெற்றிப் படம்.

அண்ணாமலை (1992)

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சூப்பர் ஹிட் படம். எளிய மனிதன் அண்ணாமலை நண்பனால் (சரத்பாபு) சொத்துகளை இழந்த பின், வாழ்வில் முன்னேறி நண்பனுக்குப் பாடம் கற்பிக்கும் கதையைக் கொண்ட படம்.

எஜமான் (1992)

ரஜினி ஜமீன்தாராகப் படம் முழுவதும் வேட்டி கட்டி நடித்தபடம். ரஜினியின் சாந்தமான நடிப்புக்கு எடுத்துக்காட்டு.

பாட்ஷா (1995)

ஹம் என்ற இந்திப் படத்தைத் தழுவி சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் ஆட்டோ ஒட்டும் மாணிக்கமாகவும், நிழல் உலக தாதா பாட்ஷாவாகவும் ரஜினி தோன்றிய படம். மாபெரும் வெற்றி பெற்ற படம்.

முத்து (1995)

தென்மாவின் கொம்பா என்ற மலையாளப் படத்தைத் தழுவி கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படம். முதன் முறையாக ஒரு தமிழ்ப்படம் ஜப்பான் நாட்டில் பெரும் வெற்றிகண்டது. ரஜினியை ’டான்ஸிங் காட்’ என்று ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடிய அதிசயம் நிகழ்ந்தது.

படையப்பா (1999)

படிக்காதவன் படத்தில் ரஜினியின் அண்ணனாக நடித்த சிவாஜி கணேசன், இதில் அப்பாவாக நடித்திருந்தார். நீலாம்பரி என்ற வலுவான கதாபாத்திரத்தை ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கி, படையப்பாவாக ரஜினி ஜொலித்தார்.

சந்திரமுகி (2005)

மணிசித்திரத்தாள் என்ற மலையாளப் படத்தை ரஜினிக்கு ஏற்ப மாற்றி இயக்கினார் பி.வாசு. பல திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். வில்லத்தனமான வேட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது.

சிவாஜி (2007)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம். கருப்புப் பணத்துக்கு எதிரான கதை கொண்ட படம்.

எந்திரன் (2010)

வசீகரன் என்ற விஞ்ஞானி கதாபாத்திரத்திலும், சிட்டி என்ற ரோபோவாகவும் ரஜினி நடித்த முதல் அறிவியல் புனைகதை. ஹாலிவுடின் பிரமாண்டத் தொழில்நுட்பங்களுடன் ரூபாய் 132 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 179 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்